நம்பிக்கையே நீதிமானின் வாழ்வின் அடித்தளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 18 ஆம் வாரம் – சனி
அபக்கூக்கு 1: 12- 2: 4
மத்தேயு 17: 14-20

நம்பிக்கையே நீதிமானின் வாழ்வின் அடித்தளம்!

முதல்வாசகம்.

இன்றைய வாசகத்தில், இறைவாக்கினர் அபக்கூக்கு இறைவனிடம் சில
முக்கிய கேள்விகளை முன்வைக்கிறார். இறைவன் தூயவரும்
நீதிமானுமாக இருக்கும்போது, தீயவர்களின் அக்கிரமங்களையும்
கொடுமைகளையும் ஏன் அனுமதிக்கிறார் என்று வியக்கிறார். குறிப்பாக,
யூதாவைவிட அதிகக் கொடுமை செய்கிற பாபிலோனியர்கள் வெற்றி
பெறுவதைக் கண்டு அபக்கூக்கு மனம் கலங்குகிறார்.

கடவுளிடமிருந்து தனது கேள்விகளுக்குப் பதிலை எதிர்பார்த்து,
ஆவலுடன் காத்திருக்கிறார். அப்போது ஆண்டவர், தமது திட்டம்
நிச்சயமாக நிறைவேறும்; அது தாமதமாகத் தோன்றினாலும், உரிய
காலத்தில் தவறாமல் நடைபெறும் என்று உறுதியளிக்கிறார்.
வாசகத்தின் உச்சமாக, "நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால்
வாழ்வடைவர்" (அபக்கூக்கு 2:4) என்ற மாபெரும் உண்மை இறுதியல்
வெளிப்படுகிறது. அகந்தையுள்ளவன் நிலைத்திருக்கமாட்டான்; ஆனால்,
இறைவன் மீது முழு நம்பிக்கையுடன் வாழ்பவனே உண்மையான
வாழ்வையும் மீட்பையும் பெறுவான் என்ற படிப்பினை இங்கே
பகிரப்படுகிறது.

நற்செய்தி.

இயேசுவிடம் ஒரு தந்தை, தீய ஆவியால் மிகவும் துன்புறும் தனது
மகனைக் கொண்டு வருகிறார். சீடர்களால் அவனை குணப்படுத்த
முடியவில்லை. இயேசு அவர்களின் நம்பிக்கைக் குறைவைக் கண்டித்து,
சிறுவனை குணமாக்குகிறார். பின்னர் சீடர்கள் தனியாகக் கேட்டபோது,
"உங்களுடைய சிறிய நம்பக்கையே காரணம். கடுகு விதை அளவு
விசுவாசம் இருந்தால்கூட, மலைகளைக்கூட நகர்த்த முடியும்; உங்களுக்கு
முடியாதது ஒன்றும் இருக்காது" என்று இயேசு எடுத்துரைத்ததை மத்தேயு
குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அபக்கூக்கு, உலகில்
நிலவும் அநீதியையும் கொடுமையையும் கண்டு இறைவனை கேள்வி
கேட்கிறார். "ஆண்டவரே, ஏன் தீமை வெற்றி பெறுகிறது? ஏன் நீர்
அமைதியாக இருக்கிறீர்?" என்று அவர் மனவேதனையோடு
முறையிடுகிறார். ஆனால் இறைவன் அவருக்கு அளிக்கும் பதில் மிகவும்
ஆழமானது: "நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால்
வாழ்வடைவர்" (அபக். 2:4)

அதாவது, எல்லாவற்றிற்கும் உடனடி பதில் கிடைக்காவிட்டாலும்,
இறைவனின் நேரத்தை நம்பி பொறுமையுடன் வாழ வேண்டும் என்பதே
ஆண்டவரின் அழைப்பு. இறைவன் தாமதிப்பது போலத் தோன்றலாம்;
ஆனால் அவர் ஒருபோதும் தவறுவதில்லை.

இதே உண்மையை நற்செய்தியிலும் காண்கிறோம். தன் மகனின்
துயரத்துடன் ஒரு தந்தை இயேசுவை நாடி வருகிறார். சீடர்களால் அந்த

சிறுவனை குணப்படுத்த முடியவில்லை. அதற்கு இயேசு, "உங்களிடம்
கடுகு விதை அளவு விசுவாசம்கூட இல்லை" என்று கூறுகிறார்.

இயேசு கூறிய "கடுகு விதை அளவு விசுவாசம்" என்பது விசுவாசத்தின்
அளவைப் பற்றி அல்ல; அதன் உண்மைத்தன்மையைப் பற்றியது. கடுகு
விதை மிகச் சிறியதாக இருந்தாலும், அது வளர்ந்து பெரிய மரமாகிறது.
அதுபோல, உண்மையான இறை நம்பிக்கையானது தொடக்கத்தில்
சிறியதாக இருந்தாலும், அது நாளடைவில் இறைவனின் வல்லமையை
வெளிப்படுத்தும்.
நமது வாழ்க்கையிலும் பல நேரங்களில் அபக்கூக்கைப் போல
 "ஆண்டவரே, என் இறைவேண்டலுக்க ஏன் பதில் இல்லை?"
 "ஏன் இந்த துன்பம்?"
"ஏன் இந்த நோய், இந்த இழப்பு?" என்றெல்லாம் நாம் கேள்வி
கேட்பதுண்டு. சிலர் “நீர் என்ன கல்லா?” என்றுகூட இறைவனை
விமர்சிப்பதுண்டு. இறைவன் நமக்கு கூறுவது ஒன்றே: "நம்பிக்கையில்
நிலைத்திரு."

அதே நேரத்தில், சீடர்களைப் போல நாமும் சில நேரங்களில் முயற்சிகளில்
தோல்வியைச் சந்திக்கிறோம். நமது விண்ணப்பங்கள் பலன் தராதது
போலத் தோன்றலாம். அப்போது நமது திறமையை அல்ல, இறைவனின்
வல்லமையை நம்பி வாழ வேண்டும். நிறைவாக, நம் தந்தையாகிய
இறைவனிடம் கேள்விகள் கேட்டு மன்றாட நமக்கு உரிமை உண்டு.
ஆனால் அவர்மீது நம்பிக்கையை இழக்கக் கூடாது. அடுத்து,
இறைவனின் நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
இறைவனின் வாக்குறுதி தாமதிக்கலாம்; ஆனால் அது ஒருபோதும்
பொய்யாகாது.

இறைவேண்டல்.

ஆண்டவரே, என்னை நம்பிக்கையில் உறுதியாகவும்,
நிலைத்தவரராகவும் என்றும் வாழ அருள்புரிவாராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image