ஆசையை வெல்பவன் அகிலம் வெல்வான்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

17 பிப்ரவரி 2025                                                                                                                  
பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய்

யாக்கோபு: 1: 12-18
மாற்கு 8: 14-21


ஆசையை வெல்பவன் அகிலம் வெல்வான்!
 
முதல் வாசகம்.

 இந்த வாசகத்தில், புனித யாக்கோபு சோதனை, சகிப்புத்தன்மை, பாவம் மற்றும் கடவுளின் நன்மை பற்றிப் பேசுகிறார்.  சோதனையில் நிலைத்திருப்பவர் பேற்பெற்றவர் ஆவார் என்பதை வலியுறுத்துகிறார். அடுத்து, நம்மில் நிகழும் நல்லது கெட்டதற்கு நாம்   பொறுப்பேற்க வேண்டும். தீமை கடவுளிடமிருந்து வருவதில்லை, மாறாக சுயநல ஆசைகள் கட்டுப்படுத்தப்படாமல் பெருக அனுமதிக்கும்போது நமக்குள் இருந்து தீயன தோன்றுகின்றன என்கிறார்.

நற்செய்தி.

இந்தப் பகுதியில், இயேசு தம்முடைய சீடர்களுடன் ஒரு படகில் இருக்கிறார். அவர்கள் போதுமான உணவை (ரொட்டி) கொண்டு வர மறந்துவிட்டார்கள், அவர்களிடம் ஒரே ஒரு ரொட்டி மட்டுமே இருக்கிறது. "பரிசேயரின் புளிப்பைக் குறித்தும் ஏரோதின் புளிப்பைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்" என்று இயேசு அவர்களை எச்சரித்தபோது,  போதுமான ரொட்டி இல்லாததால் இயேசு அவர்களைக் கடிந்துகொள்கிறார் என்று நினைத்து, சீடர்கள் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்குகிறார்கள்.
 
அவர் அவர்களுக்கு இரண்டு பெரிய அற்புதங்களை நினைவூட்டுகிறார்: ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் மற்றும் நாலாயிரம் பேருக்கு உணவளித்தல் - அதன் பிறகு எத்தனை கூடை துண்டுகள் சேகரிக்கப்பட்டன (முறையே பன்னிரண்டு மற்றும் ஏழு). பின்னர் அவர், "உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?" என்று கேட்கிறார்.

சிநுதனைக்கு.

இன்றைய நற்செய்தியானது, பரிசேயர்கள் மற்றும் ஏரோது   ஆகியோரின் ஊழல் மனப்பான்மைகளுக்கு எதிராக இயேசு எச்சரிக்கிறார். சீடர்களோ  உண்மையில் உடல் ரீதியான உணவைப் பற்றி கவலைப்படும் வேளை இயேசுவோ, ஆன்மீக  பசி பற்றி கருத்துரைக்கிறார்.
 
நாளைய தினம், தவக்காலம் தொடங்குகிறது. ஆகவே இன்றைய வாசகம்  நமது  சுய பரிசோதனைக்கான  அழைப்பாக அமைகிறது. நமக்கான சோதனைகள் எங்கிருந்து வருகின்றன? முதல் வாசகத்தில் கண்டதுபோல், கடவுள் நம்மை சோதிப்பவர் அல்ல. சோதனை தீயோனிடமிருந்தே வருகிறது. நம்மை தாக்கும் தீயோனின் சோதனைகளில் விழுந்துவிடாமலிருக்க தந்தையை வேண்டுமாறு இயேசு இறைவேண்டல் செய்ய நமக்குக் கற்பித்தார். 

ஆம், கடவுள் நிலையானவர், உண்மையுள்ளவர். மனித பலவீனத்தைப் போலன்றி, கடவுளின் நன்மை ஒருபோதும் மாறாது.  சோதனைகள் நம்மைப் பலப்படுத்தும். நம்மை திடப்படுத்தவே கடவுள்  சோதனைகள் நம்மை அண்ட அனுமதிக்கிறார்.

 யாக்கோபு கூறுவதைப்போல், பேராசை தான் நம்மை நிலைத்தடுமாறச் செய்கிறது. கையளவு கொண்ட உள்ளத்தில் கடலளவு ஆசை கொண்டால் நாம் மூழ்கத்தான் செய்வோம். பேராசை பாவத்தைப் பிறப்பிக்கிறது. பேராசை  குறையும்போது மனக் குழப்பம் நீங்கி அமைதி நிலவும்.
 
தவக்காலம் தொடங்குவதற்கு  (நாளை விபூதி புதன்) இந்த வாசகங்கள்  நம்மை பின்வருவனவற்றிற்கு தயார்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்வோம்.
•    நமது பாவத்திற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். 
•    சோதனை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முற்பட வேண்டும். 
•    கடவுளின் மாறாத அன்பில் நம்பிக்கைகொள்ள வேண்டும். 

இறுதியாக, திருவள்ளுவரின் வாக்கையும் கருத்தில் கொள்வோம்.
 "இன்பம் இடையறாது ஈண்டு அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்." (குறள்: 369).
இக்குறளில், ஆசை என்பது துன்பங்களிலேயே மிகப் பெரிய துன்பம். அந்த ஆசையை ஒருவன் வென்றுவிட்டால், அவனுக்கு இவ்வுலகில் இடையறாத இன்பம் வந்து சேரும் என்ற போதனையை முன் வைக்கிறார் வள்ளுவர்.

இறைவேண்டல்.

ஆண்டவரே,  உமது வார்த்தையும் உண்மையும் என்னை வழிநடத்துவதாக.  ஆமென்.
  

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452