அழவுக்கு வழி ஆணவம், வாழ்வுக்கு வழி பரிவிரக்கம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
14 பிப்ரவரி 2026
பொதுக்காலம் 5ஆம் வாரம் –சனி
1 அரசர் 12: 26-32; 13: 33-34
மாற்கு 8: 1-10
அழவுக்கு வழி ஆணவம், வாழ்வுக்கு வழி பரிவிரக்கம்!
முதல் வாசகம்.
இந்த வாசகப் பகுதியைப் புரிந்துகொள்ள, வாசகத்தில் வரும் இரு அரசர்களைப் பற்றி சிறிது அறிந்து கொள்ள வேண்டும். முதலில் சாலமோனுக்குப் பின் இஸ்ரயேல் வடநாடு, தென்னாடு என இரண்டாகப் பிரிந்தது என்பதை அறிந்ந்திருக்க வேண்டும்.
1. எரொபவாம்- இவன் வடநாட்டின் (10 கோத்திரங்களின்) அரசனாக பதவி ஏற்றிருந்தான். வடநாட்டின் பெயர் இஸ்ராயேல் என்பதாகும். இதன் தலைநகர் சமாரியா.
2. ரெகொபெயாம் – தென்னாட்டின் (யூதேயாவின்) அரசன். சாலமோனின் மகன். இதன் தலைநகர் எருசலேம். எருசலேம் ஆலயம் இங்குள்ளது.
இஸ்ரயேல் எனும் வடநாட்டில் எரொபவாம் பயத்தாலும் சுயநலத்தாலும் ஒரு மோசமான முடிவை எடுக்கிறான். வடநாட்டு மக்கள் தென்னாட்டு எருசலேமில் இருக்கும் எருசலேம் ஆலயத்திற்கு வழிபடவும் பலிகளைச் செலுத்தவும் சென்று கொண்டிருந்தார்கள். ஏனெனில் எருசலேம் ஆலயம்தான் வழ்பாட்டின் மையம், பாஸ்கா போன்ற பெருவிழாவுக்கு இந்த ஆலயத்திற்கு வரவேண்டும்.
ஆனால், தொடர்ந்து வடநாட்டு மக்கள் அவ்வாறு செய்தால், அவர்களின் விசுவாசம் யூதாவின் அரசனான ரெகொபெயாம் மீது திரும்பிவிடும் என்றும், ரெகொபெயாம் மீண்டும் வலவடைந்து, அடைந்து அவரைக் கொல்லக்கூடும் என்றும் ரெகொபெயாம் கவலையுற்றான்.
இதன் விளைவாக வடநாட்டு மக்கள் தென்னாட்டிக்குள் செல்வதைத் தடுக்க, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்து, மக்களை நோக்கி, அவைதான் எகிப்து நாட்டிலிருந்து அவர்களை மீட்டுவந்த தெய்வங்கள் என்று உண்மைக்கு எதிராக நம்ப வைத்தான். அத்துடன், தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி, லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான். இது கடவுளின் நியமனத்திற்கு எதிராக அமைந்தது.
தொடரந்து, எருசலேமில் கொண்டாடப்படும் விழாக்களைப் போல இங்கும் விழாக்கள் ஏற்படுத்தினான். இத்தகைய தகாதச் செயல்களுக்காகக் கடவுளால் தண்டிக்கப்பட்டு, வடநாடு விரைவில் அசீரியர்களிடம் தோல்வியுற்றது.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியும் நேற்றைய நற்செய்தியின் தொடர்ச்சியாக உள்ளது. இயேசு புறவினத்தார் மிகுதியாக வாழ்ந்த பகுதியில் இருந்தார் (மாற் 7: 31). மேலும் அவர் செய்த வல்லசெயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பலரும் அவரிடம் கூடி வந்ததோடு, மெய்மறந்து தொடர்ந்து மூன்று நாள்களைக் கழித்தனர். இதனால் அவர்களைப் பட்டினியாக அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைவார்கள் என்று இயேசு அவர்களுக்கு, அங்குக் கிடைத்த ஏழு அப்பங்களைக கொண்டு அனைவருக்கும் உணவு அளித்தார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில், வடநாட்டு அரசன் எரொபவாம் மக்கள் தங்கள் இதயங்களை (யாவே) கடவுளிடம் திருப்புவதற்குப் பதிலாக அவர்கள் வழிபட பொன் கன்றுகளை உருவாக்கினதன் மூலம் தனது ஆட்சியைப் பாதுகாக்க முயற்சிக்கிறான். அவனது இச்செயல், உலக "தெய்வங்கள்" எவ்வாறு நம்மை உண்மை கடவுளிடமிருந்து வழிதவறச் செய்யக்கூடும் எனப்தை எடுத்துரைக்கிறது. இன்றும், அதிகாரத்தில் இருக்கும் தீயசக்திகளால் நாம் பாதை மாறத் தூண்டப்படலாம். மண் ஆசை, பதவி ஆசை போன்றவற்றால் கவரப்பட்டு, நம்பிக்கை வாழ்வில் நாம் வழிதவறக்கூடும்.
மனந்திரும்புதல் என்பது கடவுளின் நன்மையை நினைவில் கொள்வதிலிருந்தும், அவருடைய வழியில் அல்லாமல் நம் சொந்த வழியில் நாம் எங்கு வழித்தவறி சென்றோம் என்பதை ஒப்புக்கொள்வதிலிருந்தும் தொடங்குகிறது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று வடநாட்டு மக்கள் அரசனின் தீய வழியில் நடந்தார்கள், அழிவைத் தேடிக்கொண்டார்கள்.
நற்செய்தியைக் கூர்ந்து கவனித்தால், இயேசு நம் பற்றாக்குறையில் நம்மைக் கைவிடுவதில்லை - நாம் கொண்டு வரும் சிறியதை அவருடைய கைகளில் வைக்கும்போது அவர் பெருக்குகிறார். நம்மில் பல காரியங்கள் பற்றாக்குறையாகத் தோன்றினாலும் கடவுளின் பாதுகாப்பில் நம்பிக்கை வைக்க நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. பற்றாக்குறையைக் கண்டு அஞ்சி ஓடுவதிலும், உலக மாயைகளில் அடைக்கலம் தேடுவதிலும் மிஞ்சுவது அழிவு ஒன்றே.
உலகம் ஒரு மாயை. இது நிலையற்ற உலகப் பொருட்களை மெய் என நம்பும் அறியாமையைக் கொண்டிருக்கிறது. கயிறைப் பாம்பென்று தவறாக எண்ணி பயப்படுவது போல, நிலையற்ற உலகத்தை உண்மையானது என நம்பி அதில் பற்றுறுதி கொள்வது மடமை. உலகம் தராத அன்பை, ஆதரவை, அரவணைப்பை, அமைதியைத் தரவல்லவர் ஆண்டவர் இயேசு ஒருவரே.
ஆகவே, நம் வாழ்வில் கடவுளை புறந்தள்ளச் செய்யும் பொய்யான உலக ‘தெய்வங்களை’ நிராகரிப்போர் வாழ்வர் என்பதை ஏற்று மனந்திரும்பிய இதயங்களுடன் கடவுளிடம் திரும்புவோம். நமது கூடைகளும் நிரம்பி வழியும்.
இறைவேண்டல்.
என் பரிவிரக்கமுள்ள ஆண்டவரே, இந்த நாள் முழுவதும் என்னோடு நடப்பீராக. நான் செய்யும் அனைத்திலும் உமக்கு மாட்சி உண்டாவதாக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
+6 0122285452