உள்ளூர் திருஅவைகளின் அருள்கொடைகள் உலகளாவிய திருஅவையை வளப்படுத்துகின்றன: கர்தினால் மரியோ கிரெச் | FABC | Veritas Tamil
உலகளாவிய திருஅவை இழக்க முடியாத தனித்துவமான அருள்கொடைகள் ஒவ்வொரு உள்ளூர் திருஅவையிடமும் உள்ளன என்று, ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலரான கர்தினால் மரியோ கிரெச் அவர்கள், ஜூலை 24 அன்று இடம் பெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது நிறைவிறுதிப் பேரவையின் அமர்வில் பங்கேற்றவர்களிடம் தெரிவித்தார்.
ஹோட்டல் முலியாவின் வாண்டா அரங்கில், "ஆயர் மாமன்றத்தின் செயல்படுத்தலுக்கான வழிமுறைகள்" என்ற தலைப்பில் உரையாற்றிய கர்தினால் கிரெச் அவர்கள், ஆயர் மாமன்றத்தின் செயல்படுத்தலை வெறும் நிர்வாகப் பணியாக அல்லாமல், உள்ளூர் திருஅவைகள் ஒன்றையொன்று "அருள்கொடைகளின் பரிமாற்றம்" மூலம் வளப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாகக் காணுமாறு ஆசியா முழுவதிலுமிருந்து வந்த ஆயர்களை அழைத்தார்.
"எல்லா அருள்கொடைகளையும் கொண்டிருக்கும் திருஅவை எதுவும் இல்லை; அதேபோல், பிறருக்குப் பகிர்ந்து வழங்க எந்த அருள்கொடையும் இல்லாத திருஅவையும் இல்லை" என்று அவர் கூறினார்.
கர்தினால் கிரெச் அவர்களைப் பொறுத்தவரை, இந்த நம்பிக்கையே ஆயர் மாமன்றப் பயணத்தின் மையமாகும். ஒவ்வொரு மறைமாவட்டமும் ஒரே மாதிரியான மேய்ப்புப் பணிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, தூய ஆவியார் ஒவ்வொரு உள்ளூர் திருஅவைக்கும் அளித்திருக்கும் தனித்துவமான அருள்வரங்கள், மறைப்பணியின் அனுபவங்கள், கலாச்சார மரபுகள் மற்றும் ஆன்மீக ஞானத்தை அடையாளம் கண்டு, அவற்றைப் பகிர்ந்துகொள்ள திருஅவை அழைக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஆயர் மாமன்றத்தின் வெற்றியை அது உருவாக்கும் அறிக்கைகள், மேய்ப்புப் பணித் திட்டங்கள் அல்லது ஆவணங்களின் எண்ணிக்கையால் அளவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். "மற்றொரு ஆவணத்தை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கமல்ல. செயல்படுத்தும் இந்தக் கட்டம், திருஅவைகளுக்கிடையே உண்மையான அருள்கொடைகளின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காகவே அமைந்துள்ளது" என்று அவர் கூறினார். ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணம் வெளியிடப்பட்டதன் மூலம் அந்தப் பயணம் முடிவடைந்துவிடவில்லை; மாறாக, ஒரு புதிய கட்டம் தொடங்கியுள்ளது என்று கர்தினால் கிரெச் அவர்கள் விளக்கினார். இப்போது அந்தப் பொறுப்பு மறைமாவட்டங்களுக்கும் உள்ளூர் திருஅவைகளுக்கும் உரியது. தங்களது மேய்ப்புப் பணி சூழல்களில் ஆயர் மாமன்றத்தின் பார்வையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை அவர்கள் பகுத்தறிய அழைக்கப்படுகிறார்கள்.
இந்தச் செயல்முறை நிர்வாக ரீதியானதல்ல; அடிப்படையில் அது ஓர் ஆன்மீகப் பயணம் என்பதை அவர் வலியுறுத்தினார். ஆவணங்கள் முக்கியமானவை என்றாலும், அவை திருஅவையின் வாழ்வுக்குப் பணியாற்றுவதற்கே; அதை மாற்றுவதற்கல்ல. உண்மையான ஆயர் மாமன்றப் புதுப்பிப்பு செபம், செவிமடுத்தல், உரையாடல், பகுத்தறிதல் மற்றும் ஒன்றிப்பை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் ஆகியவற்றின் வழியாகவே வளர்கிறது என்று அவர் கூறினார். தனது உரை முழுவதும், ஒவ்வொரு உள்ளூர் திருஅவையும் உலகளாவிய திருஅவையின் வாழ்விற்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கும் "திருஅவைகளின் ஒன்றிப்பு" என்ற உருவகத்தை கர்தினால் கிரெச் அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எடுத்துக்காட்டாக, ஆசியாவில் சிறுபான்மை திருஅவைகள் காட்டிவரும் மறைப்பணி உறுதிப்பாடு, மதச்சார்பின்மை அல்லது பிற மேய்ப்புப் பணிச் சவால்களை எதிர்கொள்ளும் உலகின் பிற திருஅவைகளுக்கு மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது என்றார். அதேவேளையில், ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓஷியானியாவில் உருவாகிவரும் அனுபவங்கள் மற்றும் மேய்ப்புப் பணிமுயற்சிகளிலிருந்தும் ஆசிய திருஅவைகள் கற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
"இந்த உறவு இருதரப்பானது என்று கூறிய அவர், ஒவ்வொரு திருஅவையும் ஒரே நேரத்தில் கற்பிப்பவராகவும் கற்றுக்கொள்பவராகவும் இருக்கிறது என்று விளக்கினார். இந்த ஒருவரையொருவர் வளப்படுத்தும் பகிர்வு திருஅவையின் கத்தோலிக்கத் தன்மையின் மிகத் தெளிவான வெளிப்பாடுகளில் ஒன்றாகும் என்று கர்தினால் கிரெச் அவர்கள் குறிப்பிட்டார்.
2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திருஅவைப் பேரவையை முன்னிட்டு, வரவிருக்கும் ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளுதல், பகுத்தறிதல் மற்றும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வதற்கான காலமாக இருக்கும் என்று கர்தினால் கிரெச் அவர்கள் தெரிவித்தார். உலகம் முழுவதிலுமுள்ள உள்ளூர் திருஅவைகளிலிருந்து உருவாகும் அனுபவங்களையும் கருத்துகளையும் அந்தப் பேரவை ஒருங்கிணைத்து, அவை ஒன்றையொன்று வளப்படுத்தவும், திருஅவையின் ஒன்றிப்பையும் மறைப்பணியையும் வலுப்படுத்தவும் உதவும் என்று அவர் விளக்கினார்.
இறுதியாக, திருஅவை வெறும் கட்டமைப்புகளால் அல்ல; நற்செய்தியால் வடிவமைக்கப்படும் உறவுகளின் வழியாகவே வளர்கிறது என்பதை அவர் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினார்.
