உண்மைக்குப் புறம்பாக வாழ்வது சீடத்துவம் ஆகாது. | ஆர்.கே. சாமி | Veritas Tamil

11 பிப்ரவரி 2025                                                                                                                  
பொதுக்காலம் 5ஆம் வாரம் –புதன்

1 அரசர் 10: 1-10
மாற்கு   7: 14-23
 

 உண்மைக்குப் புறம்பாக வாழ்வது சீடத்துவம் ஆகாது.

முதல் வாசகம்.

 இந்தப் பகுதி, எருசலேமில் அரசராக இருந்த சாலமோனை சேபாவின் அரசி நேரில் சந்தித்ததை விவரிக்கிறது:

சாலமோனின் மிகுந்த ஞானத்தையும், கடவுளுடனான அவரது உறவையும் பற்றி கேள்விப்பட்ட அரசி,  ஒரு பெரிய பரிவாரத்துடன், ஒட்டகங்கள், நறுமணப் பொருட்கள், தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களுடன் கடினமான கேள்விகளை மனதில் கொண்டு, அவரைச் சோதித்தறிய எருசலேமுக்கு வருகிறாள். 

அவள் வந்ததும், சாலமோனிடம் பல கடினமான கேள்விகளைக் கேட்கிறாள், அவர் அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கிறார்; எதுவும் அவரிடமிருந்து மறைக்கப்படவில்லை. சாலமோனின் ஞானம், அவர் கட்டிய வீடு, அவரது ஏராளமான உணவுப் பொருட்கள், அவரது அரண்மனையின் அமைப்பு மற்றும் அவர் ஆண்டவருக்குச் செய்யும் காணிக்கைகள் ஆகியவற்றைக் கண்டு, அவள் ஆச்சரியப்படுகிறாள். 

அவள் சாலமோனைப்பற்றி கேள்விப்பட்டவற்றைவிட அதிகமாக உள்ளதை  அரசி நினைத்து வியக்கிறாள். சாலமோன் மற்றும் இஸ்ரயேல் மக்கள் மீது கடவுள் காட்டிய தயவை உணர்ந்து, சாலமோனுக்கு அன்பளிப்புகளை வழங்குகிறாள்.

நற்செய்தி.

நேற்றைய நற்செய்தியின் தொடர்ச்சியாக இது அமைகிறது. இயேசு கூட்டத்தினரை அவரது விளக்கத்தைக் கேட்டுப் புரிந்துகொள்ள அழைக்கிறார். வெளியில் இருந்து ஒரு நபருக்குள் நுழையும் உணவு போன்ற பொருட்கள் அவரைத் தீட்டுப்படுத்த முடியாது, ஏனெனில் அது இதயத்திற்குள் செல்லாது என்று அவர் அவர்களுக்குக் கற்பிக்கிறார். ஒரு நபரை உண்மையிலேயே தீட்டுப்படுத்துவது அவரவர் உள்ளத்திலிருந்து வருகிறது:   பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்களே அவை என்கிறார்.  

இந்த உள் மனநிலைகள்தான் ஒரு நபரைத் தீட்டுப்படுத்துகின்றன, வெளிப்புற சடங்குகள் அல்லது உணவுச் சட்டங்கள் அல்ல என்றும்,  உணவு வகைகள் அனைத்தும் நல்லவையே என்கிறார்.

சிந்தனைக்கு.

இன்று திருஅவை  இரு  சவால்களாக உள்ள உண்மைகளை அறிந்துணர  நம்மை அழைக்கிறது. ஆம்,  உண்மையான குணப்படுத்துதல் எங்கிருந்து வருகிறது, உண்மையான தூய்மை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை விவரிக்கிறது.

நற்செய்தியில், இயேசு கூட்டத்தினரை நோக்கி,  வெளியில் இருந்து வரும் எதுவும் ஒருவரை அசுத்தமாக்குவதில்லை, ஆனால் உள்ளே இருந்து வருவதுதான் அசுத்தத்திற்கு காரணம் என்கிறார்.  இது குறித்து அவர் மேலும் விவரிக்கும்போது,  - பெருமை, பொறாமை, வஞ்சகம், இதயத்தின் கடினத்தன்மை போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாக முன்வைக்கிறார்.   

முதல் வாசகத்தில் சாலமோனின் ஞானத்தைப் பற்றி கேள்விப்பட்ட சேபா நாட்டு அரசி மேலோட்டமாக அவற்றை நம்பிவிடாமல், உண்மையைக் கண்டறிய நேரில் வந்தாள். கேட்றிந்தவற்றைவிட மேலான உண்மைகளை அறிந்து  அகமகிழ்ந்தாள். கானல் நீர் என்பார்கள். அது தூரத்தில் இருந்து பார்த்தால் நீர் தேங்கி இருப்பதைப்போல் தோன்றும். அது வெறும் தோற்றம்தான். அருகில் செல்ல செல்ல அங்கே ஒன்றுமிருக்காது. வெளித்தோற்றம் ஒரு மாயையாக இருக்கக்கூடும். 

இதேபோல், கிறிஸ்துவுடனான நமது உறவு தொடர்ந்து ஆழமாக வேண்டும். இருப்பினும், மனித உறவுகளைப் போலல்லாமல், கடவுள் நம்மை ஏற்கனவே முழுமையாக அறிந்திருந்தாலும்,  அவர் படிப்படியாக நம்மை நமக்கு வெளிப்படுத்தும்போது, அவர் நம்மை அறிவிலும், அன்பிலும், ஞானத்திலும் வளர அழைக்கிறார்.  இந்த உறவில் வெளித்தோற்றம் மட்டும் போதாது. கழுத்தில் சிலுவை, கையில் விவிலியம் என்பதல்ல சீடத்துவ, நம்பிக்கை வாழ்வு. 

நமது சிந்தனை, சொல். செயல் நம்மை கிறிஸ்துவின் சீடர்களாக வெளிப்படுத்த வேண்டும். வெளிப்புறச் சடங்குகளால் நாம் நல்ல சீடர்களாக ஒருபோதும் மாறிவிட முடியது. அது பிறருக்கு நம்மை கானல் நீராகவே காட்டும். நமது சிறந்த வாழ்வே நமது சீடத்துவத்தின் கண்ணாடி. நமது உள்ளதிலிருந்து வெளிப்படும் எண்ணம் நாம் யார் என்று உலகிற்கு எடுத்துரைக்கும்.  ‘நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” (யோவான் 13:35) என்கிறார் ஆண்டவர். அத்தோடு, ‘நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ (யோவான் 15:8) என்றும் வலியுறுத்துகிறார். 

சாலமோன் வாழ்வில் பொய்யும் பித்தலாட்டமும்  இருந்திருந்தால் அந்த அரசி அவரை வெகுவாக இகழ்ந்திருப்பாள். நமது சீடத்துவ வாழ்வு உண்மையும் நேர்மையும் கொண்டதாக இருக்கட்டும். இல்லையேல் அது யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொள்வது போலாகும்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, உம்மை அறியும் ஆவலையும், கவனத்துடன் கேட்கும் மன உறுதியையும், உமது படிப்பினையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் அருளையும் எனக்குள் பொங்கி எழச் செய்வீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image