மூடநம்பிக்கை அற்றதே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

10 பிப்ரவரி 2026,  
பொதுக்காலம் 5-ஆம் வாரம் – செவ்வாய்

1 அரசர் 8: 22-23, 27-30
மாற்கு 7: 1-13
 
 மூடநம்பிக்கை அற்றதே சீடத்துவம்!
 
 முதல் வாசகம்.

இந்தப் பகுதியில், சாலமோன் அரசர் இஸ்ரயேல் மக்களின் நடுவில் ஆண்டவருடைய பலிபீடத்தின் முன் நின்று, எருசலேமில் கடவுளுக்காகக்  கட்டிய ஆலயத்திலருந்து இறைவேண்டல் செய்கிறார்.  

உடன்படிக்கையைக் காத்து, தம்மோடு உண்மையாக நடப்பவர்களுக்கு இரக்கம் காட்டும்   இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை, மனித கைகளால் கட்டப்பட்ட ஆலயம் நிச்சயமாக உங்களைக் கொண்டிருக்க முடியாது, ஏனென்றால் கடவுள் எந்தக் கட்டிடத்தையும் விடப் பெரியவர் என்பதை சாலமோன் ஒப்புக்கொள்கிறார். 

இருப்பினும், சாலமோன் அந்தப் தூய ஆலயத்தில் இருந்து எழுப்பப்படும் இறை வேண்டல்களுக்குச் செவிசாயக்கும்படி கடவுளிடம் கெஞ்சுகிறார் - கடவுளின் கண்கள் இரவும் பகலும் ஆலயத்தை நோக்கித் திறந்திருக்கவும், அவர் தம்முடைய மக்களின் வேண்டுதல்களைக் கேட்டு அவர்களுக்கு இரக்கம் காட்டவும் வேண்டும் என்று இறைஞ்சுகிறார்.


நற்செய்தி.


இந்த நற்செய்தியில், எருசலேமிலிருந்து வந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் இயேசுவை நேருக்கு நேர் சந்திக்கின்றனர்,  அவரில் குற்றம் பார்க்க முனைகின்றனர்.  யூத மூப்பர்களின் பாரம்பரியம் பரிந்துரைத்த சடங்குகளில்  கழுவுதல்களை - குறிப்பாக உணவுக்கு முன்   கை கழுவுதல் சடங்கு - முதலில் செய்யாமல் இயேசுவின் சீடர்களில் சிலர் சாப்பிடுவதை அவர்கள் கவனிக்கிறார்கள். பாரம்பரியத்தை இந்த வெளிப்படையான அவமதிப்புக்காக பரிசேயர்கள் இயேசுவின் சீடர்களை விமர்சிக்கின்றனர்.


விமர்சிக்கும் மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் குறத்து, இயேசு "இந்த மக்கள் தங்கள் உதடுகளால் என்னை மதிக்கிறார்கள், ஆனால் அவர்களின் இதயம் என்னிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது..."என்று  இறைவாக்கினர் ஏசயாவின் கூற்றை மேற்கோள்காட்டி பேசுகிறார்.

பரிசேயர்கள் மனித பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பற்றிக் கொண்டு, மிக முக்கியமானவற்றை புறக்கணிக்கிறார்கள் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்:  

சிந்தனைக்கு.


முதல் வாசகமும் நற்செய்தியும் மிகவும் மாறுபட்ட சூழல்களிலிருந்து வந்தாலும்  அவை கடவுளின் உண்மையான உடனிருப்பை கடவுளின் மக்களின் மனநிலையையும் எவ்வாறு சுட்டிக்காட்டுகின்றன என்பதில் இறையியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன.


முதல் வாசகத்தில் சாலமோன், அவர் எழுப்பிய அற்புதமான, எழிலான ஆலயத்தில் கூட கடவுளைக் கொண்டிருக்க முடியாது என்பதை ஏற்கிறார். ஏனெனில், கடவுள் எந்த அமைப்பையும் இடத்தையும் விடப் பெரியவர் – அவர் விரும்புவதோ அவர் ஆலயமாகக்  கொண்டிருக்கும் தூய உள்ளம் என்பதைப் புலப்படுத்துகிறார். 


மாற்கு நற்செய்தியில், வெளிப்புற சடங்குகளும் கட்டிடங்களும் ஒருவரை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக  மாற்றுவதில்லை என்று இயேசு கற்பிக்கிறார்; மாறாக, கடவுள் உள்ளிருந்து அவரை மதிக்கும் உண்மையான இதயங்களை விரும்புகிறார் என்பத்தைத் தெளிவுப்படுத்துகிறர்.  வெளிச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்மை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக ஒருபோதும் மாற்றாது. 


குறிப்பாக மூட நம்பிக்கைகள் கொண்ட சடங்குகள் நம்மை அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும். நம் பாட்டன் பூட்டி செய்தார்கள் என்று கண்மூடித்தனமாக அர்த்தமற்ற சடங்குகளை நிறைவேற்றுவதால் கடவுளைத் திருப்திப்படுத்த இயலாது. ‘உண்மையான வழிபாடு இதயத்திலிருந்து வருகிறது, கழுவுதல் அல்லது பொருட்கள் பற்றிய மூடநம்பிக்கை விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அல்ல என்று இயேசு கற்பித்தார்.


மிகப் பெரிய மற்றும் தூய்மையான வழிபாட்டுச் செயல், தூய திருப்பலியில் கிறிஸ்துவின் தியாகத்துடன் நம்மை முழுமையாக ஒன்றிணைத்து, அன்பான கீழ்ப்படிதலுடனும் முழுமையான நம்பிக்கையுடனும் கடவுளுக்கு ஒரு உயிருள்ள பலியாக நம்மை - உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவை - ஒப்புக்கொடுப்பதாகும்.


கடவுள்  ஆலயத்தையும் அல்லது சடங்கையும்  விடவும் மிக உயர்ந்தவராக உள்ளார். நமது வீண், அர்த்தமற்ற சடங்குகளால் அவர் மகிழ்வதில்லை. திருப்பலியில் ‘நறுகருணை’ வாங்கி உட்கொள்ளும் நல்ல கத்தோலிக்கர்கள் மூடநம்பிக்கைக்குத் துணை போகமாட்டாரகள்.  மூடநம்பிக்கைகள் ‘சாத்தானின்’ கருவிகள் என்பதை அறிந்துணர்ந்து வாழ்வோம்.

இறைவேண்டல்.


ஆண்டவரே, என் கடவுளே, நீர் மட்டுமே எனது எல்லா அன்புக்கும், எனது நம்பிக்கை மற்றும் சாட்சிய வாழ்வுக்கும்   எனது வழிபாட்டின் தூய்மைக்கும் ஏற்புடையவர் என்பதை நான் எந்நாளும் ஏற்று வாழும் வரமருள்வீராக. ஆமென்.

 
ஆர்கே. சாமி (மலேசியா)
 +6 0122285452