ஆண்டவரின் உடனிருப்பு நம்மில் வெளிப்படுவதாக! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

9 பிப்ரவரி 2026,  
பொதுக்காலம் 5-ஆம் வாரம் – திங்கள்

1 அரசர் 8: 1-7, 9-13
மாற்கு 6: 53-56

 
ஆண்டவரின் உடனிருப்பு நம்மில் வெளிப்படுவதாக!
 
 முதல் வாசகம்.

இந்த வாசகம் இஸ்ரயேலின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை விவரிக்கிறது – அரசர் சாலமோன் தலைமையில் எருசலேமில் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்திற்குள் உடன்படிக்கைப் பேழை கொண்டு வரப்படுகிறது.  சாலமோன் இஸ்ரயேலின் தலைவர்களை - மூப்பர்கள், கோத்திரத் தலைவர்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள் – ஆகியோரை எருசலேமுக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து  உடன்படிக்கை பேழையைப் புதிதாக அவர் எழுப்பிய ஆலயத்திற்குக் கொண்டு வருகிறார். 

ஏழாம் மாதத்தில் (ஏத்தானிம்) நடைபெறும் பெரிய பண்டிகையின் போது, குருக்களும் லேவியர்களும் பேழையோடு இதர தூய வழிபாட்டு பொருள்களையும் தூக்கி வருகிறார்கள்.  சாலொமோனும் கூடியிருந்த அனைத்து மக்களும்  எண்ணற்ற ஆடுகளையும் எருதுகளையும் பலி செலுத்தி மகிழ்கிறார்கள். குருக்கள் பேழையை மகா தூய தூயகத்தில், கேருபீன்களின் விரிந்த இறக்கைகளின் கீழ் வைக்கிறார்கள். 

மோசேக்கு  சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட இரண்டு கல் பலகைகள் மட்டுமே பேழையில் உள்ளன. இது கடவுள் தனது மக்களுடன் செய்த உடன்படிக்கையின் நினைவூட்டலாகும். பின்னர் சாலமோன், கடவுள் தனது மக்களிடையே வசிப்பதாக அளித்த வாக்குறுதியை ஏற்று, இந்த ஆலயத்தைக் கட்டுவதன் மூலம் கடவுளுக்கு ஒரு பொருத்தமான இல்லத்தை  அவர் வழங்கியதாகக் கூறுகிறார்.

 
நற்செய்தி.


இந்த நற்செய்தி வாசகத்தில், இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் கலிலேயா கடலைக் கடந்து கெனேசரேத்தை அடைகிறார்கள். அவர்கள் கரைக்கு வந்தவுடன், மக்கள் உடனடியாக இயேசுவை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். செய்தி விரைவாகப் பரவுகிறது, மேலும் இயேசு இருக்கிறார் என்று கேள்விப்படும் இடங்களிலெல்லாம் மக்கள் நோயாளிகளைப் படுக்கைகளில் சுமந்து வருகிறார்கள்.

அவர் நுழையும் ஒவ்வொரு ஊரிலும், நகரத்திலும்,   மக்கள் நோயாளிகளை திறந்த வெளியில் படுக்க வைத்து, இயேசுவின் மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர் என்று மாற்கு விவரிக்கிறார்.
 

சிந்தனைக்கு.


நற்செய்தியில் நாம் கேட்டவாறு, கூட்டம் அழைப்பிற்காகக் காத்திருக்கவில்லை. அவர்கள் நோயாளிகளை அழைத்து வந்தார்கள். இது  இயேசுவில் அவர்கள் வைத்திருந்த  நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலம், அவரது ஆடையைத் தொட்டால் கூட போது, அது அவர்களைக் குணமாக்கும் என்று மக்கள் நம்பினார்கள்.  இது இயேசுவின் உடனிருப்பு மற்றும் வல்லமையில் உள்ள ஆழமான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது - அவரது உடனிருப்பு இழந்த உடல் நலத்தை  மீட்டெடுக்கிறது.


முதல் வாசகத்தில், சாலமோன் கடவுளுக்கென்று அழகான ஆலயத்தைக் கட்டினர். அதில் கடவுளின உடனிருப்பு அவசியம் என்றெண்ணி கடவுளின் உடனிருப்புக்கு அடையாளமாக இருந்த உடன்படிக்கை பேழையை அந்த ஆலயத்தில் வைத்தார். 

கடவுள் நமது கண்களுக்கு புலப்படுவல்லை. ஆனால் அவரது உடனிருப்பை நம்மால் உணர முடியும்.  ‘இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28;20) என்றருளிய ஆணடவர் இன்றும் என்றும் நற்கருணையிலும், அருள்பணியாளர்கள் உருவிலும், வார்த்தையிலும் மற்றும் சமூகத்திலும் அவரது உடனிருப்பை நம்மோடு உணர்த்தி வருகிறார். நமது அலட்சியத்தால் அவரை அடையாளம் காண தவறுகிறோம். 


நாசரேத்து மக்களைப் போலல்லாமல், கலிலேயா கடலோர மக்கள் இயேசுவில் விரைவில் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.  இதன் விளைவாக, இயேசுவின் அற்புதங்கள் ஏராளமாக நிகழ்ந்தன என்று அறிகிறோம். அவர்களின் நம்பிக்கை உண்மையானது என்பதற்கான மற்றொரு அறிகுறி என்னவென்றால், மக்கள் சுயநலமாக நடந்து கொள்ளவில்லை. அவர்களின் கவனம் அவரை மிகவும் தேவைப்பட்டவர்கள் மீது, குறிப்பாக நோயாளிகள் மற்றும் முடவர்கள் மீது திரும்பியது. இது நம்பிக்கை வாழ்வுக்கும் தர்மத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துகிறது. ஆம் இயேசு, பகிரப்பட வேண்டியவர். அவரது உடனிருப்பு அனவருக்கும் உரியது. ஆகவே:


1.    நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நாம் இயேசுவை அணுகுகிறோமா? 
2.    இறைவேண்டலிலும் செயலிலும் மற்றவர்களை அவரிடம் கொண்டு வருகிறோமா? 

இவ்விரு  கேள்விகளையும் நமக்கு நாமே கேட்டுக்கொள்வது மிகவும இன்றியமையாதது. 


 
இறைவேண்டல்.


ஆண்டவராகிய இயேசுவே, கெனேசரேத்து மக்கள் உம்மை நம்பிக்கையில் அங்கீகரித்தது போல, உமது உடனிருப்பை என்னை சுற்றியுள்ளோரும் அனுபவிக்க என்னை உமது கருவியாகப் பயன்படுத்துவீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
 +6 0122285452