ஆண்டவரின் விண்ணேற்றம் நம்மை மாட்சியுறச் செய்கிறது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

29 மே 2025
பாஸ்கா 6-ம் வாரம் – வியாழன்
ஆண்டவரின் விண்ணேற்றம்- பெருவிழா
தி.பணிகள் 1: 1-11
எபிரேயர் 9: 24-28; 10: 19-23; லூக்கா 24: 46-53
ஆண்டவரின் விண்ணேற்றம் நம்மை மாட்சியுறச் செய்கிறது!
இன்று ஆண்டவரின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். சில மறைமாவட்டங்களில் இந்நாள் எதிர்வரும் ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது.
முதல் வாசகம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “இயேசு தாம் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியாரின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்” என்று அறிகிறோம்.
தூய ஆவியின் வருகையையொட்டி, திருத்தூதர்கள் ஆற்றவேண்டிய பணிகளையொட்டி இயேசு மிகவும் தெளிவாக விவரிக்கிறார். அவற்றுள், மனமாற்றத்திற்கான செய்தி முதலிடம் பெறுகிறது. மனமாற்றத்திற்கு இன்றியமையாதது பாவ மன்னிப்பு பெறுதலாகும். ஆகவே, திருத்தூதர்கள் பாவமன்னிப்பையும் மனமாற்றத்தையும மக்கள் மத்தியில் வலியுறுத்த வேண்டும் என்று இயேசு பணிக்கிறார்.
நிறைவாக, திருத்தூதர்களின் சாட்சிய வாழ்வை மிகவும் வலியுறுத்துவதோடு, ‘நீங்களே சாட்சிகள்’ என்கிறார்.
இரண்டாம் வாசகம்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில், அதன் ஆசிரியர், “விண்ணுலகத்திற்குள்ளே நுழைந்திருக்கும் இயேசு அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்” என்கிறார். நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கின்றார் என்று சொல்லும் ஆசிரியர், “நமக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கின்றார்” (எபி 7:25) என்ற உண்மையையும் நமக்கு எடுத்துரைக்கிறார். .
நற்செய்தி.
புனித லூக்கா நற்செய்தியின் இறுதிப் பகுதியில், எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் நற்செய்தி பறைசாற்றப்பட வேண்டும் என்று, அதற்கான அதிகாரம் அளிப்பது பற்றிப் பேசுகிறார். தொடர்ந்து, “என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்'' என்று கூறியபின், அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இயேசு, எவ்வாறு பாடுகளுக்கு முன் 40 நாள் தியானத்துடன் பாடுகளை ஆரம்பித்தாரோ அவ்வாறே உயிர்த்த பின் 40- நாள் மகிழ்ச்சியுடன் சீடர்களைத் திடப்படுத்தி விண்ணேற்றம் அடைந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்று நாம் கொண்டாடும் இயேசுவின் விண்ணேற்ற பெருவிழா நமக்குத் தரும் படிப்பனை என்ன என்றறிவது அவசியம். இந்த யூபிலி ஆண்டின் கருப்பொருளாக ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற சிந்தனைக்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆம், நமது பயணத்திற்கு ஓர் இலக்கு உண்டு. அது, இயேசு விண்ணகம் சென்றது போல, நம் வாழ்வின் பயணமும் விண்ணக வாழ்வை மையப்படுத்தியே அமைய வேண்டும் என்பதாகும்.
மண்ணகம் நமது நிரந்தர இல்லம் அல்ல. மாறாக, ‘நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்’ (பிலி 3:20) என்று புனித பவுல் கூறுகிறார். பவுல் அடிகளின் அவ்வார்த்தைகளை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்களும், ஆசைகளும் விண்ணகம் சார்ந்ததாகவே இருந்திடல் வேண்டும். நாம் மண்ணில் கிடைக்கும் புழு பூச்சிகளைக் கிளறித் தின்னும் கோழிகள் அல்ல, மாறாக, வானில் உயரே பறந்து திரியும் கழுகுகள்.
ஆனால், நமது கண்மூடித்தனமான வாழ்க்கையால் கழுகு ஆகிட முடியாது. நம் விண்ணக வாழ்வை கண்முன் கொண்டவர்களாக மண்ணகத்தில் இறையாட்சியை மலரச் செய்ய அரும்பாடுபட வேண்டும். இறைமகன் சென்ற இடமெல்லாம் நன்மைகள் செய்து கொண்டே சென்றதுபோல, நாமும் செயல்பட வேண்டும். நம்மை தூய ஆவியார் இயக்கிக்கொண்டிருக்கிறார் என்ற விழிப்புணர்வு இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
இன்று புனித அகுஸ்தினார் இயேசுவின் விண்ணேற்றம் குறித்து பகிர்ந்த கூற்றை நினைவுகூர்வோம். ‘அவர் நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார். இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம். ஏனெனில் அவருடைய அருளால் நாமும்அவரோடு இணைந்துள்ளோம்’ என்றார்.
இன்றைய வாசகங்கள் வழியாக இயேசுவின் விண்ணேற்றத்தால் நாம் தூய ஆவியைக் கொடையாகப் பெற்றுள்ளோம் என்பதை அறியவருகிறோம். மேலும் விண்ணேற்றமடைந்த ஆண்டவர், இப்போது தந்தையின் வலப்பக்கம் இருந்து, நமக்காகப் பரிந்துபேசுகிறார் ((எபி 9:24) என்றும் தெளிவுப்படுத்தப்படுகிறோம். ஆனாலும், அவர் மீண்டும் வருவார் என்பதும் நமது எதிர்நோக்காக உள்ளது (எபி 9:28).
ஆகவே அவரது இரண்டாம் வருகை மட்டும் இப்புவியில் அவருக்கான சாட்சிய வாழ்வு வாழ்வதில் இணைந்திருப்போம்.
இறைவேண்டல்.
‘ஆண்டவரே, நீர் வருமளவும்
உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்,
உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்’ ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
