மேகங்களை நீங்கள் இரசித்ததுண்டா? | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
**சிந்தை குளிர... அகம் மகிழ **
மேகங்கள் இயற்கை வரையும் கண்கவர் ஓவியங்கள். மேகங்களை நீங்கள் இரசித்ததுண்டா? அவை ஒய்யாரமாக வானில் வலம் வரும் அழகே அழகுதான்!
ஒரு முறை நீங்கள் காணும் மேகத்தின் வடிவத்தை மீண்டும் காண முடியாது. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் மாறும் புதுமையை என்னென்பது? அப்புதுமையைப் பொறுக்காமல் கலைக்க வரும் காற்று போல மனிதர்கள் வருவார்கள். கவலைப்படாதீர்கள்!
மேகங்கள் சூரியனையே மறைக்க வல்லவைதான்... ஆனால், சிறிது நேரத்திற்கு மட்டுமே. அந்த மேகங்களுக்குப் பின்னாலும் சூரியன் ஒளிர்ந்து கொண்டுதான் இருப்பான். உங்களை ஒளிர விடாமல் மேகம் போன்ற யாராலும் நிரந்தரமாக தடுத்துவிட முடியாது!
கருமேகங்கள் சூழும்போது பயமாக இருக்கிறதா? அவை மனதை மகிழ்விக்கும் மழைக்கு முன்னோடி. உங்கள் வாழ்வின் துன்பங்களும் அப்படியே... அழகிய வாழ்வு பின்தொடரும் என்ற நம்பிக்கையை அளிப்பதற்கே!
பூமி வெப்பமாகி நிலத்தின் நீரை ஆவியாக்கி மேகத்திற்குத் தருகிறது. மேகம் அதைப் பெற்றுக்கொண்டு குளிர்ந்த, தூய மழை நீரைப் பரிசாய் நிலத்திற்குத் தருகிறதே... மேகத்தின் நல்லெண்ணம் யாருக்கு வரும்?!
மேகம் போன்று மென்மையாய் இருங்கள்; மேன்மையாய் வாழுங்கள்!!
எழுத்து
அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி