நிலையற்றவற்றை நிலையற்றவை என்றறிக! | அருள்பணி. முனைவர் செ. ரெ. வெனி இளங்குமரன் | Veritas Tamil

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு (338)

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு என்பது முட்டைக் கூட்டுக்குள்ளிருந்த பறவைக் குஞ்சு பறந்து போன தன்மை போன்றது.

பள்ளிச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு நடந்தது. பேருந்து வந்து நின்றது. மாணவச் செல்வங்கள் ஊக்க மிகுதியால் அடித்துப் பிடித்து ஏறி அமர்ந்தனர். சிலருக்கு விருப்பமான இடங்களும், வேறு சிலருக்கு விருப்பமில்லா இடங்களும் கிடைத்தன. அந்த ஏழாம் வகுப்பு மாணவனுக்கு ஏமாற்றம். எப்படியாவது தனக்கு விருப்பமான அந்த இடத்தைப் பிடித்துவிட எண்ணம்...

பேருந்து விரைந்தது. சிறிது நேர பயணத்துக்குப் பின் ஆண் மாணவர்களுக்கு இயற்கை அழைப்பு. பேருந்து ஓரங்கட்டப்பட்டது. மாணவர்கள் இறங்கினர். அந்த ஏழாம் வகுப்பு மாணவன் இறங்கவில்லை. தன் விருப்ப இடத்தைப் பிடித்துக் கொண்டான். கீழே இறங்கியவர்கள் ஏறினார்கள். சண்டை தொடங்கியது. இடத்துக்கான போட்டி, கை, கால், கழுத்து எனச் சண்டை விரிவடைந்தது. நண்பர் குழுக்களாக, மூன்றாம் உலகப் போருக்கான அணிகள் போன்று சேர்ந்து கொண்டனர்.

தலைமை ஆசிரியர் வந்தார். உரையாடல் நடத்தினார். இரண்டு பேரையும் தன் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக அமர்த்தினார். பேருந்து, இலக்கு இடத்தை அடைந்தது.

பறவைகளின் காட்சியகம் அது. பலவகையான பறவைகள், அருள்மொழி கூறும் பறவைகளின் ஒலிகள். இனிமை. மாணவர்கள் மெய்சிலிர்த்தனர்.

"ஐயா, அங்கே மூன்று கல்லறைகள் இருக்கின்றனவே?" மாணவி ஒருவரின் குரல். அக்கல்லறைகளைச் சுற்றி 60 மாணவர்களும் வந்து நின்றனர். ஒவ்வொரு கல்லறையின் மீதும் இருந்த குறிப்பைக் கொண்டு கதை கூறினார் தமிழாசியரான அந்தத் தலைமை ஆசிரியர்.

முதல் கல்லறை: சிட்டுக்குருவியுடையது. அழகிய முளரி
(ரோசா) மலரை விரும்பியது சிட்டுக் குருவி. அச்செந்நிற முளரிப் பூ வன்கட்டு (நிபந்தனை) விதித்தது. "நீ என்னைப் போல் சிவப்பானால் நான் உன்னைக் காதல் செய்கிறேன்" என்றது.

சிட்டுக்குருவிக்கு வேறு வழி தெரியவில்லை. அம்மலருக்கு அடியில் இருந்த முட்களாலே தன்னைக் குத்திக் குத்தி சிவப்பாக்க முயன்றது. முழுவதும் சிவப்பான நேரத்தில் உயிரற்றுக் கிடந்தது.

இரண்டாம் கல்லறை: சில்லைக் குருவியுடையது.

ஒவ்வொரு முறையும் கூடு கட்டும் போது அதற்கு மனநிறைவு இருப்பதில்லை. 'ஏதோ ஒரு நாற்றம் அடிக்கிறது' என்று சொல்லிக் கொண்டே அடுத்த இடத்தில் கூடு கட்டும். ஆனால் அச்சில்லையின் நண்பர்கள் அறிவுரை சொல்லிப் பார்த்தனர். "நாற்றம் உன் கழிவுகளால்தான் உன் கூட்டிலிருந்து வருகிறது; வெளியிடத்திலிருந்து அல்ல".

இவ்வாறு, விளக்கம் சொன்னாலும் அக்குருவி தன் அறியாமையினால், தான் நினைத்ததுதான் சரி என்று விடாப்பிடியாக இருந்து கூடு கட்டியே தன் உடல் கூட்டை விட்டு உயிரை விட்டது. நண்பர்களின் நல்வழிகாட்டுதலை இறுதிவரை அது ஏற்றுக்கொள்ளவே இல்லை; இன்று உயிரோடு இல்லை.

மூன்றாம் கல்லறை: தூக்கணாங் குருவியுடையது. மழைக் காலத்தில் கூட்டுக்குள் இருந்தது குருவி. மரத்தில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த குரங்கிடம் கூறியது. “என்ன குரங்காரே, எங்களுக்கு அலகு மட்டும் தான் இருக்கு, நாங்களே வீடு கட்டியிருக்கிறோம். உங்களுக்குக் கைகளும் இருக்கின்றன. வீடு கட்ட வேண்டியது தானே. ஏன் மழையிலும் குளிரிலும் நடுங்குறீங்க?"

இந்த அறிவுரையைக் கேட்டு குரங்கு எரிச்சல் அடைந்தது. குரங்குக் கையில் கிடைத்த பூமாலை என்ன ஆகுமோ, அதே நிலைக்குத் தூக்கணாங் குருவிக் கூட்டைக் கொண்டு வந்து விட்டது. தன் குஞ்சுகளைக் காப்பாற்ற நடந்த போராட்டத்தில் தூக்கணாங் குருவி தன் உயிரை இழந்தது.

பொருந்தாத ஆசை, தப்பான எண்ணம், அடக்கம் இல்லாப் பேச்சு போன்றவை குருவிகளின் உயிருக்கு உலை வைக்கும் அணுஉலைகளாகி விட்டன. (நிலையில்லா இவ்வுலகில் நிலையற்றவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற செய்தி அக்கல்லறைகளிலிருந்து எதிரொலித்துக் கொண்டிருந்தது.

முட்டைக்கூடு, பின்பு பிரிந்து தனித்துக் கிடக்க அதினுள்ளிருந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு. முன்பு உடன் இருந்த பறவைக் குஞ்சு பறந்துபோன தன்மையுடையது. உலகின் நிலைபெறாத் தன்மையும் இதைப் போன்றதுதான் என்று மாணவர்களும் தெரிந்து கொண்டனர்.

பேருந்தில் மாணவர்கள் ஏறினார்கள். இடங்களை மாற்றி மாற்றி அமர்ந்தனர். இடப்பற்று அங்கு இடம் பெறவில்லை. நாம் விரும்பியது நடந்தால் இறைவனுக்கு நன்றி: நடக்காவிட்டால் இறைவனுக்குப் புகழ். 'போலாம்' ரைட்'. பேருந்து புறப்பட்டது. நம் வாழ்க்கைப் பயணமும் புறப்படட்டுமே!


எழுத்து, 
வெனி இளங்குமரன்.

Tamil Survey Popup Image