மனோபலமின்றி சீடத்துவம் இல்லை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

24 மே 2025                                                                                                                  
பாஸ்கா 5-ம் வாரம் – சனி
தி.பணிகள்  16: 1-10
யோவான்  15: 18-21 


மனோபலமின்றி சீடத்துவம் இல்லை!
 
முதல் வாசகம்.

முதல் வாசகத்தில்,   பவுல் அடிகள் தனது மறைத்தூதுப் பயணத்தைத் தொடர்கிறார். முதன்முறையாக தீமோத்தேயுவைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம், அவருடைய தாய், யூனிக்கி (2 திமொ 1:5)  ஒரு யூத-கிறிஸ்தவர், அவருடைய தந்தையோ ஒரு கிரேக்கர். திமொத்தையு மக்கள் மத்தியில் நற்சான்று பெற்றவராகத் திகழ்ந்தார். எனேவ, பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச் செல்ல விரும்பினார். ஆனால். யூதர்களால் அவருக்குத் தொல்லைகள் நேரிடக்கூடும் என்பதால் அவருக்கு விருத்தசேதனம் செய்து, ஒரு யூதராகக் கூட்டிச் செல்கிறார்.

இப்பகுதியில் பவுல் எப்போதும் தூய ஆவியாரின் வழிகாட்டுதலின் படி செயல்படுபவர் என்பதை அறிகிறோம். அவர் தனது மறைத்தூதுப் பயணங்களை கவனமாகத் திட்டமிட்டார்.   பவுல் மேற்கே எபேசு நகரத்திற்குத் தொடர விரும்பினார். ஆனால் தூய ஆவியானவர் அவர்களைத் தடுத்தார் என்றும், மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர் என்றும்  லூக்கா குறிப்பிடுகிறார்.
 
நிறைவாக, அவர்கள் மாசிதோனியாவுக்கு செல்ல வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப பவுலும் திமோத்தேயுவும் அங்கு செல்கிறார்கள்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், தாம் இறப்பதற்கு முந்தைய இரவில், இயேசு தம் சீடர்களிடம், தம்முடைய பணியைத் தொடருவார்கள் என்றும், இயேசு நடத்தப்படுவதைப் போலவே தாங்களும் நடத்தப்படுவார்கள் என்றும் - அதாவது, சிலரால் நிராகரிக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள், ஆனால் மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.


சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்கள்  சீடத்துவத்திற்கான அழைப்பைப் பற்றி அறிவுறுத்துகின்றன. நற்செய்தியை அறிவிப்பதன் மூலம் இயேசு நம்மை  தனது பணியையும் தொடர அழைக்கிறார். இது உற்சாகமாகத் தோன்றினாலும், பலருக்கு செவிடன் காதில் ஊதிய சங்குபோல உள்ளது என்றால் மிகையாகாது.

குறிப்பாக இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடும்  "எந்த பணியாளரும்  தன் தலைவரை விட பெரியவர் அல்ல’ என்பதும், ‘நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது’ என்பதும் பலருக்குக் கசப்பான செய்தியாகத் தோன்றக்கூடும். ஆனால், உண்மையான சீடத்துவம் இத்தகைய அச்சத்திற்கு அப்பாற்பட்டது. நாம் நற்செய்தியின் பொருட்டு நிச்சயம் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்பது இயேசுவுக்குத் தெரியும். எனவேதான், என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள் என்று எச்சரித்தார்.

“உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்கிறார் ஆண்டவர். மறைநூலில் "உலகம்" என்பது கடவுளுக்கு விரோதமாகவும் அவருடைய திருவுளத்திற்கு எதிராகவும் இருக்கும் மக்கள் கூட்டத்தைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளலாம்.

துன்பம் நமது சீடத்துவ வாழ்வின் ஒரு பகுதியாகும். ஏனென்றால் இயேசுவுடனான வாழ்க்கை ரோஜாப் படுக்கையிலானது  அல்ல, மாறாக, அது அதன் முட்களிலானது.  எனவே, நாம் ஓர் எளிதான, சொகுசான  வாழ்க்கைக்காக இறைவேண்டல் செய்யக்கூடாது.  மாறாக, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதில் வலிமையான நபர்களாக மாறி, கடவுள் நமக்குக் கொடுத்த சிறந்ததை வெளிக்கொணர மன்றாட வேண்டும். 

நாம் இயேசுவின் சீடர்களாக இருந்தால், தூய ஆவியாரின் வழிநடத்துதலைப் பின்பற்றுவோம். நாம் மீண்டும் மீண்டும் வந்து ஆண்டவரின்  பாதத்தில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதை நடைமுறைப்படுத்தும்போது மட்டுமே தூய ஆவியாரின் வழிநடத்துதலைப் பின்பற்ற முடியும். அதற்கு அர்ப்பணிப்பும் ஏழையோர் உள்ளமும் தேவை.  

சீடத்துவத்தில் நாம் அனைவரும் பணியாளர்களே. இதில் தாழ்ச்சி நம்மை ஆட்கொள்ளாவிட்டால், சீடத்துவம் சிதைந்துவிடும். 

இறைவேண்டல்.

ஆண்டவரே, தூய ஆவியாரின்  வல்லமையால், நீர் என்னை சீடத்துவத்தில் முன்னேறச் செய்கின்றீர். நற்செய்தியின் பொருட்டு எதிர்கொள்ளும் துன்பத்துயரங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபலத்தைத் தந்தருள்வீராக.  ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452