பணியற்ற சீடத்துவம் நிறைவற்றது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

23 மே 2025                                                                                                                  
பாஸ்கா 5-ம் வாரம் – வெள்ளி
தி.பணிகள்  15: 22-31
யோவான்  15: 12-17
 

 பணியற்ற சீடத்துவம் நிறைவற்றது!
 
முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் எருசலேம் திருச்சங்கத்தின் இறுதியில், அங்கு கூடிய  திருத்தூதர்களும் மூப்பர்களும் திருஅவையார்  அனைவரும் பர்சபா எனும்  யூதாவையும் சீலாவையும் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவில்  நிலவும்  நிலவும் குழப்பங்களுக்கு நிவர்த்தி காண அவர்களுக்குக் கடிதம் கொடுத்து அங்கு அனுப்புகிறார்கள். 

அக்கடிதத்தில்,  எருசலேம் பகுதியிலிருந்துச் சென்ற  சில யூதக் கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியாவில் அவர்கள் விருப்பத்திற்கு குழப்பங்கள் ஏற்படுத்தி வருவதால் அவர்கள் மட்டில் கவனமாக இருக்க எச்சரிக்கிறார்கள்.   அவர்களது  பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை என்று விவரித்து எழுதி கடிதத்தை கொடுத்தனுப்புகிறார்கள் என்று லூக்கா குறிப்பிடுகிறார், 

நிறைவாக, மிக முக்கியமானவற்றறைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தியதை நாம் அறிகிறோம்.
 
சிந்தனைக்கு.

நற்செய்தியில், இயேசு தனது கடைசி இராவுணவு  உரையைத் தொடர்கிறார். அவர் தனது சீடர்களை தம்முடனான ஒரு புதிய மற்றும் நெருக்கமான உறவுக்கு அழைக்கிறார். அவர், ‘நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள் என்றும்  இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன், உங்களை நான் நண்பர்கள் என்றேன்’ என்றும் சீடர்களை தம்மோடு இணைக்கிறார்.  

அவர் இறப்பதற்கு முந்தைய இரவான அன்று, ஓர் உண்மையான நண்பர் என்பவர்  மற்றொருவருக்காக தனது உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பவரே என்று இயேசு விவரித்ததை யோவான் இங்கே குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில் என்னைத் கவர்ந்த விடயங்களில் ஒன்று, எருலேமில் கூடிய திருத்தூதர்களும் , மூப்பர்களும் (ஆயர்களும்) மிகுந்த உற்சாகமான விவாதத்திற்குப் பிறகு,   "இது தூய ஆவியாரின்  முடிவும், எங்களுடைய முடிவுமாகும்’   என்று கூறுகிறார்கள். இயேசுவைப் பின்பற்ற விரும்பும் புறவினத்தார் விருத்தசேதனம் செய்வது தேவையா தேவையற்றதா?  என்ன செய்வது என்று அவர்கள் அதிக நேரம் விவாதித்திருந்தாலும், தங்கள் இறைவேண்டல் மூலம், தூய ஆவியானவரின் உதவியால் ஒரு சிறந்த முடிவெடுத்ததோடு, அன்னைவரும் அந்த முடிவின்படி செயல்பட்டார்கள். 

இயேசு, ‘உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்’ (யோவான் 14:16,17) என்று கூறியது இங்கே, தொடக்கத் திருஅவையில் நிறைவேறுவதைப் பார்க்கிறோம். 

ஆகவே, பிரச்சனைக்ள, குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் திருஅவையில் தலைத்தூக்கும்போது, அவற்றை வெளிப்படையாக விவாதித்து, நேர்மையான இறைவேண்டல் செய்து, தூய ஆவியாரின் வழிகாட்டுதலை நாடினால்,   திருஅவையில் பிளவுக்கு இடமிருக்காது.  தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்று நினைத்து செயல்பட்ட காரணத்தால் இன்று தெருவுக்கொரு சபை உருவாகியுள்ளது. மனிதன் தூய ஆவியாரையும் மிஞ்சிவிட்டான். 

இயேசுவின் அறிவுறுத்தலான, ‘மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்’ (மத் 12:32) என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். தூய ஆவியாருக்கு எதிராக முடிவெடுப்பவர்களின் பாவச் செயல் இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் (ஆன்மா) மன்னிக்கப்படாது என்கிறார். ஆகவே, இயேசுவின் திருவுடலான திருஅவையில் பிரிவினையை விதைப்போர் எத்தகையத் தண்டனை தீர்ப்பைப் பெறுவர் என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒன்று.  திருஅவை உறுப்பினர் ஒவ்வொருவரும், அவரது அன்பில் நிலைத்திருக்க வேண்டும் எனில், முதலில் அவரது திருவுடலாகிய ஒரே திருஅவையில் ஒன்றித்திருக்க வேண்டும். அதுவே உன்னத, உத்தமமான சீடத்துவத்திகு அழகு. 

புனித லூக்கா அவரது திருத்தூதுப் பணிகள் நூலில், ‘அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்’ என்று கூறுகிறார். ஆகவே, நமது ஒன்றிப்பின் நிமித்தம் எவர்  என்ன சொன்னாலும், எப்படி குழப்பினாலும் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஒருவருக்கொருவர் பணியாளர்களாக வாழ்வோம். பணிக்குருத்துவமே நமது குருத்துவம். 

 இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, நான் ஒவ்வொரு நாளும் தூய ஆவியாரின்  துணைகொண்டு, அனைவருக்கும் ஒரு பணியாளனாக,  திருஅவையைக் கட்டியெழுப்பும் பணியில் என்னை அர்ப்பணிக்க உதவுவீராக.  ஆமென்.

  

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452