ஆண்டவரில் மகிழ்ந்து பேருவகை கொள்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

22 மே 2025
பாஸ்கா 5-ம் வாரம் – வியாழன்
தி.பணிகள் 15: 7-21
யோவான் 15: 9-11
ஆண்டவரில் மகிழ்ந்து பேருவகை கொள்வோம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், பேதுருவும் யாக்கோபும் புறவினத்தாருக்கு நற்செய்தி பரவுவதைப் பற்றிப் பேசுவதைக் கேட்கிறோம். பவுலும் பர்னபாவும் யூதரல்லாதவர்களிடையே சிறிய ஆசியா பகுதியில அவர்கள் ஆற்றிய பணியின் விபரங்களை எடுதுதரைக்கிறார்கள். இயேசு தம் சீடர்களை உலகம் முழுவதும் சென்று நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்படி பணித்தபோது, அவர் என்ன சொன்னார் என்பதை அப்போது புரிந்து செயல்பட்டார்கள்.
நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக, எருசலேமில் பவுலும் பர்னபாவும் திருத்தூதர்களுடன் இணந்தபோது, புறவினத்தாருக்கு விருத்தசேதனம் அவசியமா? அவசியமற்றதா என்று விவாத்தித்து தெளிவுப்பெற்றனர். நிறைவாக, பேதுரு எழுந்து அவர்களை அழைத்த கடவுள்தான் புறவினத்தாரையும் அழைத்துள்ளார் என்றும், கடவுள் மனமாறிய யூதர்களுக்கும் புறவினத்தாருக்குமிடையே எந்த வேறுபாடும் காட்டவில்லை என்றும், அனைவரும் ஓர் குலம் என்றும் எடுத்துரைத்து, ‘நாம் மீட்புப் பெறுவதுபோலவே புறவினத்தாரும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்’ என்று உரக்கக் கூறினார்.
அதே வேளையில், அப்போது எருசலேம் திருஅவைக்கு ஆயராக இருந்த திருத்தூதர் யாக்கோபும் பேதுருவின் உரையை ஏற்று புறவினத்தாருக்கு ஆதாரவாகப் பேசியதோடு, ‘என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது’ என்றும் விருத்தசேதனம் தேவையற்றது என்று முடிவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.
நற்செயதி.
தந்தை தம்மை அன்பு செய்வதைப்போல் , இயேசு நம்மையும் அன்பு செய்கிறார் என்று விவரிக்கிறார். அதனால்தான் இன்றைய நற்செய்தியில் அவர் கூறுகிறார்: “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்., என் அன்பில் நிலைத்திருங்கள்" (வசனம் 9) என்று அவரது அனபில் நிலைத்திருக்க அழைக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லும் மூன்று சொற்றொடர்களைப் பற்றி சிந்திப்பது சிறப்பு.
முதலாவதாக, “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல’ என்பதாகும். தந்தையாம் கடவுள் தம் ஒரே பேறான மகன் இயேசுவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். அது தெய்வீக, முழுமையான அன்பு. அது ஒன்றிப்பு, கீழ்ப்படிதல் மற்றும் ஆழ்ந்த உறவில் வேரூன்றிய அன்பு. தந்தை இயேசு மீது கொண்டிருக்கும் அன்பு, எல்லாவற்றிற்கும் மேலாக தனிப்பட்டதும் என்றும் மாறாததுமாகும்.
இரண்டாவதாக, ‘என் அன்பில் நிலைத்திருங்கள்’ என்ற இயேசுவின் வேண்டுகோளாகும். கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்பதன் மூலம்தான் நாம் அவரில் நிலைத்திருக்கவும், அவருடைய அன்பில் நிலைத்திருக்கவும் முடியும். ஏனென்றால் கிறிஸ்துவும் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்துதான் அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறார்.
வழக்கமக நாம் அன்பில் நிலைத்திருப்பதில்லை. நமது அன்பு மனநிலையைச் சார்ந்ததும், நமது வசதி, சுற்றுச் சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடுகிற அன்பாகவும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அன்பு காட்டுவதில் நாம்மில் பலர் பச்சோந்திகளாக உள்ளோம். எனவே, என்றும் நிலை மாறா, நிறம் மாறா அவரது அன்பில் நிலைத்திருக்க ஆண்டவர் அழைக்கிறார். என்றும், மாற்றத்தைக் கண்டு மாறினால் அது உண்மை அன்பாகாது.
மூன்றாவதாக, ‘ உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே’ என்று முடிக்கிறார். ஆம், கடவுளுக்கான நமது கீழ்ப்படிதலில்தான் மகிழ்ச்சி நிறைவு பெறும். இத்தகைய மகிழ்ச்சியை அன்னை மரியாவில் கண்டோம்.
‘ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது’ (லூக்கா 1:47) என்று அக்களிப்புடன் அவர் பாடினார்.
கிழ்ப்படிதல் இன்றி மகிழ்ச்சியை நம்மால் அனுபவிக்க முடியாது. நாம் கீழ்ப்படிய விரும்பாமல், மனம் போன போக்கில் வாழலாம். அதன் விளைவு துன்பமும் துயரமும் கொண்டதாகவே இருக்கும்.
தந்தை தம்மிடம் வைத்திருக்கும் அதே நிலையான அன்பைதான் ஆண்டவர் இயேசு நம்மோடு கொண்டிருக்கிறார். இது நிறைவான அன்பு- அது சமமானதும் சுயநலமற்றதுமாகும்.
நிறைவாக, தந்தையின் அன்பும் அவரது ஒரே மகனாகிய இயேசுவின் அன்பும் நிலையானவை, நிபந்தனையின்றி நம்மில் பொழியப்படுபவை. - நானும் உங்களை அன்பு செய்கிறேன் என் அன்பில் நிலைத்திருங்கள்" எனும் ஆண்டவரின் வேண்டுகோளை மனதில் கொண்டு வாழ்வோம், நமது மகிழ்ச்சியும் நிறைவு பெறும்.’
முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரின் அன்பில் நிலைத்திருந்து நற்செய்திப் பணியில் துன்பத்திலும் மகிழ்ந்திருந்ததை லூக்கா வெளிப்படுத்தியதை மனதில் கொள்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உம் அன்பிலே என்றும் நிலைத்திருந்து, என் சீடத்துவ வாழ்வை வெற்றியோடு வாழ்ந்து நிறைவு செய்ய அருள்வீராக. ஆமென்.”
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
