இயேசுவே நமது அமைதி, அவரில் பற்றுறுதி கொள்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

20 மே 2025                                                                                                                  
பாஸ்கா 5-ம் வாரம் – செவ்வாய்
தி.பணிகள்  14: 19-28
யோவான்  14: 27-31b

 
இயேசுவே நமது அமைதி, அவரில் பற்றுறுதி கொள்வோம்!
  
முதல் வாசகம்.

இன்றைய வாசகங்களில், பவுல் அடிகளும் இயேசுவும் தங்கள் சீடர்களுக்கு அளித்த "பிரியாவிடை" உரைகளைக் கேட்கிறோம்.   முதல் வாசகமானது  பவுல் மற்றும் பர்னபா இவரும் மறைதூதுப் பயணத்தில் எதிர்கொண்ட சவால்களையும் கடவுளின் அருளால்  அவர்கள் எவ்வாறு சவால்களையும் எதிர்ப்புகளையம்  வெற்றிகொண்டனர்  என்பதை நமக்கு விவரிக்கிறது.  

கொடிய யூதர்கள்  மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரது உடலை எறிந்தார்கள். ஆனால், பவுலோ சீடர்கள் மத்தியில்  எழுந்து நகரினுள் சென்றார் என்றும், மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார் என்றும் லூக்கா செய்தி குறிப்பிடுகிறார்..

தெருபையில், விண்ணக இறையரசில் நுழைவதற்கு பல சோதனைகள் அவசியம் என்பதையும், கடவுளின் அருளால்  நாம் எவ்வாறு நம்பிக்கையில் நிலைத்திருக்க முடியும் என்பதையும் விவரிக்கிறார்.
 
நற்செய்தி.
 
இன்று நற்செய்தியில் இயேசு  தம் சீடர்களுக்கு உரைத்த இறுதி உரையின் தொடர்ச்சியைக் கேட்கிறோம்.   அவர், ‘அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல’ என்கிறார். அடுத்து, ‘நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்கிறார்.  

நிறைவ1க, ‘இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான்’ என்று முடிக்கிறார்.

சிந்தனைக்கு.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விவிலியப் பயணம்’ என்றொரு புத்தகத்தை நான் வெளியிட்டேன். நாம் எல்லாரும் விண்ணகத்தை நோக்கிய திருப்பயணிகள் என்றும் இப்பயணத்தில் நமது இலக்கை அடைய திசைக்காட்டியாக அருளப்பட்டதுதான் நமது விவிலயம் என்ற கருத்து மேலோங்கி இருந்தது. 

நமது இலக்கை நோக்கியப் பயணத்தில் சில சமயங்களில் நாம் வழிதவறுகிறோம்  இத்தருணங்களில், பெரும்பாலும் தூய ஆவியாரின்  வழிகாட்டுதலில்  நாம் மீண்டும் சரியான பாதையில் திரும்பி நம் பயணத்தைத் தொடர ஆண்டவர் உதவுகிறார்.  இப்பயணம் வானவீட்டை அடையும் நாள் வரை பல சவால்களுக்கிடையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

இன்றைய நற்செய்தியில், இயேசு சீடர்களுக்கு தனது அமைதியை வழங்குகிறார். அவர் அவர்களை உள்ளம் கலங்க வேண்டாம் என்று திடப்படுத்துவதோடு, அவர்   அவர்களுடன் உடனிருப்பார்   என்று விலிறுத்திக் கூறுகிறார்.ஆம்,  நமது நம்பிக்கை ஒன்றே நமக்கான துடுப்பு.   துடுப்புகள் இல்லாத படகு பாதுகாப்பாகக் கரை சேராது. அதுபோல நம்பிக்கை எனும் துடுப்பு நம்மில் இருக்கும்போது. நாம் அவர்மீது அன்பு கொண்டிருந்தால்  அவரில் என்றும் வாழ்வோம். அவரும் நம்மை பற்றிக் கொள்வார்.

மேலும், இன்றைய நற்செய்தியில் இயேசு, “ அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” என்கிறார். இயேசு பகிர்ந்த அமைதி  உலகம் அருளும்  பல வகையான அமைதியிலிருந்து வேறுபட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறார். கிறிஸ்துவின் அமைதி என்பது பிரச்சனைகள் அல்லது விரும்பத்தகாத விடயங்கள் இல்லாத ஓர்  சூழல் என்பதல்ல. பிரச்சனைகள், வேதனைகள் மற்றும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் கிறிஸ்துவில் கொண்ட நம்பிக்கை மட்டுமே நம்மை தொடர்ந்து பயணிக்கச் செய்யும் மன ஊக்கத்தை அளிக்கும். அந்த ஊக்கமே, மனோபலமே  அவர் அருளும் அமைதி. அவரது அமைதி நம்மில் நிலைக்க அவரில் நிலைத்திருப்போம். இயேசுவே நமது அமைதி.

இறைவேண்டல்.

அமைதியின் அரசராகிய இயேசுவே, எனக்கு வாழுவும், வழியுமாக இருப்பதற்காகவும் உமது அமைதியை என்னோடு பகிர்வதற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன்.  ஆமென். 

   

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452