வாழ்வின் ஆதாராம் ஆண்டவர், அவரிலே நமக்கு வாழ்வுண்டு. | ஆர்.கே. சாமி | VeritasTamil

16 மே 2025
பாஸ்கா4-ம் வாரம் – வெள்ளி
தி.பணிகள் 13: 26-33
யோவான் 14: 1-6
வாழ்வின் ஆதாராம் ஆண்டவர், அவரிலே நமக்கு வாழ்வுண்டு.
முதல் வாசகம்.
பவுல், யூதர்களுக்கும், இயேசுவை ஏற்றுக்கொண்ட புறவின கிறிஸ்தவர்களக்குமிடையே உரையாற்றுகிறார். அவர் அவர்களை “அபிரகாம் ” வழிமரபினர் என்று அழைக்கிறார். இது அவர்கள் யூத மரபைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.
தொடர்ந்து, கடவுள் இயேசுவை நம்முடைய மீட்பராக நமக்கு அனுப்பினார் என்றும் எருசலேமில் வாழ்ந்த யூதர்களும், அவர்களது தலைவர்களும் இயேசுவை உண்மையிலேயே யார் என்பதை அறியவில்லை என்றும், அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றபோதும், அவர்கள் இயேசுவை மறுத்து, மரணதண்டனைக்குக் கட்டாயப்படுத்தினர் என்றும் விவரிக்கிறார்
ஆனால், சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்ட அவரை கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்றும், திருத்தூதர்கள் எல்லாம் அந்த நிகழ்வுகளுக்கு நேரடி சாட்சிகள் என்றும் இவ்வாறு, கடவுள் பழைய ஏற்பாட்டில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார் என்றும் சாட்சியம் பகிர்கிறார்.
நற்செய்தி.
இயேசு தம்முடைய சீடர்களிடம், உள்ளத்தைக் கலங்க விடாதீர்கள் என்று கூறுகிறார். கடவுள் மீதும் அவர் மீதும் நம்பிக்கை வைக்க அவர்களை ஊக்குவிக்கிறார். தம்முடைய தந்தையின் இல்லத்தில் அவர்களுக்காக ஓர் இடத்தைத் தயார்படுத்துவது பற்றிப் பேசுகிறார்,
அவர்களைத் தம்மிடம் அழைத்துச் செல்ல அவர் திரும்பி வருவார் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார். இந்த இடத்திற்குச் செல்லும் வழி குறித்து தோமா கேள்வி கேட்டபோது, இயேசு, இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில், தோமாவும் மற்ற சீடர்களும் இயேசுவின் பணியையும் அவரது வருகையின் நோக்க்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாததை அறிந்து இயேசு வருத்தப்படுகிறார். தமது தந்தையின் இல்லத்தில் (வான்வீட்டில்) அவர்களுக்காக தயார் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல அவர் வந்திருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இயேசுவே ‘வழியும் உண்மையும் வாழ்வும்’ என்று நமக்கும் தெரியும். ஆனால் நாம் அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதில் நம்மில் தடுமாற்றம் உண்டு. இயேசுவே ‘வழியும் உண்மையும் வாழ்வும்’ என்றால், பின்னர் ஏன் உலகப் பற்று? இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி நம்பிக்கையோடு அனைத்து விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவரில் இணைந்து பயணிக்க அவர் அழைக்கிறார். பாவம் என்ற கல்லறைக்கு பல வழிகள் நம் முன்னே உள்ளன.
தந்தையிடமிருந்து வந்தவர். தந்தையிடம் போகப்போவதாகச் சொல்கிறார். "தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் என்கிறார். இயேசுவின் போதனைப்படி வாழ்வோர் விண்ணக வாழ்வை அடைவர். விண்ணக வாழ்வுதான் அவர் விரும்பி அளிக்கும் மரணமற்ற வாழ்வு.
இயேசு ‘நானே வழியும் உண்மையும் வாழ்வும்’ என்றுரைக்கும்போது, அவரது வார்த்தை வாழ்வுக்கான வெறும் ஆலோசனை அல்ல. நாம் மிகவும் தேவையில் இருக்கும்போது, அவர் மிகவும் போதுமானவராக இருக்கினார். நாம் முற்றிலும் உதவியற்றவராக தவிக்கும் போது, அவர் மிகவும் உதவுபவராக இருக்கிறார். நாம் மிகவும் பலவீனமாக இருக்கும்போது, அவர் நமக்கு மிகவும் ஆற்றல் அளிப்பவராக இருக்கிறார். இப்படி பல நெருக்கடிகளை அடிக்கிக்கொண்டே போகலாம். அவரில் கொள்ளும் பற்றுறுதி (trust) மட்டுமே நமக்கு வாழ்வாக மாறும்.
இந்த இயேசுவைத்தான் முதல் வாசகத்தில் பவுல் அடிகள் உலகம் எதிர்ப்பார்த்திருந்த மீட்பராக விவரிக்கிறார். ‘என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்’ (திபா 27:10) என்று திருபாடல் ஆசிரியர் வலியுறுத்திக் கூறுவதை மனதில்கொள்வோம். ஆம், வாழ்வின் ஆதாராமாக இருப்பவர் ஆண்டவர். அவரிலே நமக்கு வாழ்வுண்டு.
இறைவேண்டல்.
இயேசுவே! என்னையும் உம்மைப் போல வாழ்வளிக்கும் செயல்புரியும் சீடராக மாற்றுவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
