கனி தருவதில் நிலைத்திருப்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

14 மே 2025
பாஸ்கா4-ம் வாரம் – புதன்
புனித மத்தியா – திருத்தூதர்-விழா
தி.பணிகள் 1: 15-17, 20-26
யோவான் 15: 9-17
கனி தருவதில் நிலைத்திருப்போம்!
முதல் வாசகம்.
திருஅவையானது இன்று திருத்தூதரும் மறைசாட்சியுமான புனித மத்தியாசின் விழாவைக் கொண்டாடுகிறது.
இயேசு தேர்ந்துகொண்ட 12 சீடர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத்து ‘ஒரு பாவமும் அறியாத இயேசுவைக் காட்டிக் கொடுத்துவிட்டேனே’ என்று தற்கொலை செய்துகொண்டதால், திருத்தூதர்கள் மத்தியில் ஓர் இடம் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்தது. எனவே 120 சீடர்கள் ஒன்றாகக் குழுமியிருந்த நேரத்தில், பேதுரு அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “ஆண்டவர் இயேசுயின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக விளங்க, நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்மொழிகிறார். பேதுருவின் முன்மொழிதலை ஏற்று இருவர் முன்நிறுத்தப்பட்டார்கள் ஒருவர் யோசேப்பு (பர்சபா) மற்றவர் மத்தியா.
இறைவேண்டலைத் தொடர்ந்து, அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் இயேசு, தம்முடைய சீடராகவும் திருத்தூதர்களாகவும் இருப்பது அவரவர் சொந்த தேர்வு அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். இந்தப் சீடத்துவப் பொறுப்புகளுக்கு வேண்டியவர்களைத் தேர்வுச் செய்தவர் இயேசுவே. அவர் தேர்ந்துகொண்ட சீடர்களுக்கு, “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்” என்று பணிக்கிறார்.
1. எப்படி நிலைத்திருப்பது என்ற கேளிவிக்குப் பதிலாக, ‘நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்’ என்கிறார்.
2. அடுத்து எது உங்கள் கட்டளை என்ற கேள்வியை எழுப்பினால், ‘நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை’ என்று பதில் அளிக்கிறார்.
3. அன்பு எப்படிபட்ட அன்பாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, ‘தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை’ என்கிறார்.
4. அடுத்து, சீடர்கள் மத்தியில் அவரது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்திகிறார். சீடர்கள் கனி தரவும், தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன் என்றுரைக்கிறார்.
சிந்தனைக்கு.
திருஅவையானது இன்று திருத்தூதரும் மறைசாட்சியுமான புனித மத்தியாசின் விழாவைக் கொண்டாட நம்மை அழைக்கிறது. மத்தியா என்றால் “கடவுளின் கொடை” என்று பொருள். யூதாஸ் தற்கொலை செய்துகொண்டதால் அவரது இடத்தை நிரப்ப ஒருவர் தேவைப்பட்டார். இஸ்ரயேலருக்குப் 12 குலங்கள் இருந்ததைப்போல் இயேசுவும் தமக்கு திருத்தூதர்களாக பன்னிருவரை மட்டுமே தேர்ந்துகொண்டார். யூதாசுக்குப் பதிலாக தேர்வு செய்ய இருவர் நிறுத்தப்படுகின்றனர், அவர்கள் 'பர்சபா' மற்றும் 'மத்தியா ஆவர். இதில் கடவுளின் விருப்பத்தை அறிய தருவுளச் சீட்டு பயன்படுத்தப்பட்டது.
இதே மரபில் இன்றளவும் திருத்தந்தையர் தேர்வுச் செய்யப்படுவதை நாம் அறிவோம். மத்தியாவைப் பற்றி மேல் விபரங்கள் நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் கடவுளின் தேர்வு என்பது உறுதி. இவர் இயேசுவோடு அவருடைய விண்ணேற்றம் வரை இருந்ததாக பாரம்பரியம் கூறுகிறது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறும், “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்’ என்ற இறைவார்த்தையானது இப்படியாக மத்தியாவின் தேர்வில் நிறைவேறியதை நாம் அறிகிறோம்.
தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தைக் கவனித்தோமானால், ஆண்டவர் இயேசு, “நான் என் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்கவேண்டும் என்பதே என் கட்டளை... தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்கிறார். இக்கட்டளைக்கு உட்டபட்டு வாழ்ந்தவர் மத்தியாஸ் என்றால் மிகையகாது.
ஆகவே, புனித மத்தியாசின் விழாவை இன்று கொண்டாடும் நாம், அன்றாட வாழக்கையில் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழும் வாழக்கை வாழ முற்படுவோம். திருஅவையில் நமது சாட்சிய வாழ்வுக்காக நம்மையும் கடவுள் தேர்ந்துகொண்டார். அதிலும், கனி தரவும், தரும் கனி நிலைத்திருக்கவும் அவர் நம்மை அழைத்துள்ளார் என்பதில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.
இறைவேண்டல்.
என்னைத் தேர்ந்து வழிநடத்தும் ஆண்டவரே, அழைப்புக்கேற்ற கனி தரவும், தரும் கனி நிலைத்திருக்கவும் என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
