பயனுற வாழ்தலே கிறிஸ்தவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

2 மே 2025
பாஸ்கா 2ஆம் வாரம் – வெள்ளி
தி.பணிகள் 5: 34-42
யோவான் 6: 1-15
‘பயனுற வாழ்தலே கிறிஸ்தவம்!’
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில் திருச்சட்ட அறிஞரான கமாலியேல் திருத்தூதர்களை வெளியே அனுப்பிவிட்டு, தலைமைச் சங்கத்தாரிடம் பேசியதை லூக்கா விவரிக்கிறார். அவர், திருத்தூதர்கள் செய்து வந்தது மனிதரிடமிருந்து வந்தது என்றால், விரைவிலேயே அது ஒழிந்துபோய்விடும் என்றும், மாறாக, அவர்களது சொல்லும் செயலும் கடவுளைச் சார்ந்தவை என்றால் அவர்களைத் தடுக்க இயலாது என்றும் எடுத்துரைக்கிறார். இதற்காக அவர் ஏமாற்றுப்பேர்வழிகளான தெயுதா’ மற்றும் ‘கலிலேயனான யூதா ஆகிய இருவரை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு, இந்த இருவரும் தங்களை மெசியா என்று சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றி வந்தனர் என்றும், ஒரு காலக்கட்டத்தில் இவர்களது சாயம் வெளுத்து உரோமையர்களால் ஒடுக்கப்பட்டார்கள் என்றும் விவரிக்கிறார்.
தொடர்ந்து, திருத்தூதர்கள் அப்படியே விட்டுவிடும்படியும், அவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார். அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தன்னுடைய போதனையைக் கேட்கவும் தன்னிடமிருந்து நலம்பெறவும் வந்த மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு உணவளிக்க முடிவுசெய்கின்றார். அதனால், அவர் பிலிப்பிடம், “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். பின்னர், இயேசு அவரிடம் கொடுக்கப்பட்ட ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அவற்றை மக்களுக்குக் கொடுத்தார். நிறைவாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் பேர் உண்டார்கள் என்று யோவான் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
“இவர்கள் உண்பதற்கு நான் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பைப் பார்த்துக் கேட்கிறார் இயேசு. பிலிப்புவோ யாது சொல்வது, செய்வது என்றறியாமல் தடுமாறும்போது, அந்திரேயா, சிறுவன் ஒருவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருப்பதைச் சொல்லி, அவற்றைச் சிறுவனிடமிருந்து வாங்கி இயேசுவிடம் கொடுக்கின்றார். தொடர்ந்து வாசிக்கும் போது, ‘கொடுத்தார்’, ‘பகிர்ந்தளித்தார்’ என்ற இரு வினைச்சொற்களை அறிகிறோம்.
கடவுள் தேவையில் உள்ளோருக்கு இருப்பதைக்கொண்டு பகிர்ந்தளித்தார். இருப்பவர் மனமுவந்து கொடுத்தால்தான் எதையும் பகிர்ந்தளிக்க முடியும். நற்செய்தியில், சிறுவன் கொடுக்க முன்வந்ததைப் போன்று கொடுக்க முன்வரவேண்டும். முதல் வாசகத்தில் திருச்சட்ட அறிஞரான கமாலியேல் அவரது ஞானத்தைப் பகிர்ந்ததினால், திருத்தூதர்கள் விடுதலைப் பெற்றனர். அவர் ‘எனக்கென்ன’ என்று நழுவியிருந்தால் திருத்தூதர்கள் தண்டிக்கப்படிருக்கலாம், துன்புறுத்தப்பட்டிருக்கலாம்.
லூக்கா நற்செய்தியில் ‘கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்’ (6: 38) என்று இயேசு அறிவுறுத்தியதை வாசிக்கிறோம். பகிர்ந்து வாழ்தலே கிறிஸ்தவம். நற்கருணை திருவிருந்தில் ஆண்டவரும் அவரது திருவுடலை பகிர்ந்தளிக்கிறார். அவரது திருவுடல் பகிர்ந்தளிப்புக்காகப் பிட்கப்படுகிறது. கவிஞர் வாலி ஒரு பாடலில், ‘பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை’ என்பார்.
அன்னமிட்டு உண்" என்றொரு பழமொழி உண்டு. பசித்திருப்போருக்கு உணவளித்துவிட்டு பின்னர் உணவை ஏற்பவரே மகான். இல்லை என்பார் இருக்கையில், இருப்பவர்கள் இல்லை என்றால், இது துரோகம். இயேசு பெற்றுக்கொண்டதை தனக்கென்றோ, சீடர்களுக்கென்றோ பதுக்கவில்லை. அனைவருக்கும் முன்பாகப் பகிர்ந்தார்.
நிறைவாக, இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததைப் பார்த்துவிட்டு மக்கள் அவரை அரசராக்க முயன்றபோது, அவர் மக்களிடமிருந்து விலகிச் செல்கின்றார். பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு கொடுப்பவர்களாக நாம் இருத்தல் கூடாது என்று இன்று அறிவுறுத்தப்படுகிறோம்.
‘பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு யாரே அநுபவிப்பார் பாவிகள் அந்தப் பணம்’ (நல்வழி, பாடல் 22)
இறைவேண்டல்.
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்றுரைத்த ஆண்டவரே, இருப்பதைப் பகிரந்தளிக்கும் மனதை எனக்கு அருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
