தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

28 ஏப்ரல் 2025
பாஸ்கா 2ஆம் வாரம் - திங்கள்
தி.பணிகள் 4: 23-31
யோவான் 3: 1-8
தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்!
முதல் வாசகம்.
நமது முதல் வாசகத்தில், தலைமைக் குருக்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாக விசாரிக்கப்பட்டப் பிறகு, திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் இயேசுவின் திருப்பெயரை துணிவோடு அறிவிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறார்கள். பின்னர் பேதுரு, திபா 2:1,2 ஆகிய பகுதியில் கூறப்பட்டுள்ள, ‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப்பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்’ என்பதை மேற்கோள் காட்டி, இயேசுவே அந்த ஆண்டவரும் அருள்பொழிவு செய்யப்பட்டவரும் ஆவார்’ என்று தலைமைக் குருக்களும் மூப்பர்களும் முன்பாக முழங்குகிறார்கள்.
அத்துடன், கடவுளை நோக்கி, “உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக் கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும்” என்று கடவுளின் உதவிக்காக மன்றாடினதை லூக்கா எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், யூதத் தலைவர்களுள் ஒருவரான நிக்கோதேமு என்பவர் இரவில் இயேசுவிடம் வருகிறார். இவர் ஒரு பரிசேயர். இயேசுவை ஒரு தலைசிறந்த போதகராக ஏற்றதோடு இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை அறிந்திருக்கிறார்.
இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று கூறிய போது, நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்கிறார். இயேசு இவ்வாறு சொன்னதை நிக்கதேம், மீண்டுமாகத் தாயின் வயிற்றுக்குள் புகுந்து பிறப்பதா என்று நினைத்துக்கொண்டிருக்கையில், இயேசுவோ அவரிடம் தூய ஆவியாரால் பிறக்கவேண்டும் என்றும் அப்படிப் பிறப்பவர் மட்டுமே இறையாட்சியைக் காணமுடியும் என்று உறுதியாகச் சொல்கின்றார்.
சிந்தனைக்கு.
இயேசுவோடு அடிக்கடி வாக்குவாதம் செய்தவர்கள் பரிசேயர்கள் என்பதில் ஐயிமில்லை. ஆனாலும் சேற்றிலும் ஒரு முத்து என்பதுபோல், பரிசேயர்களில் நிக்கதேம் என்ற பெயர் கொண்டவர் இரவு நேரத்தில் இயேசு கடவுளிடமிருந்து வந்த ஒரு போதகரென நினைத்து அவரோடு பேச வருகின்றார். அப்பொழுது இயேசு இரத்தின சுருக்கமாக அவரிடம், “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காணமுடியாது” என்கிறார். தொடக்கத்தில், அவருக்குப் புரியவில்லை.
திருமுழுக்கின்பொழுது தூய ஆவியார் நம்மீது பொழியப்படுகின்றார். இத்தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப நாம் வாழ்கின்றபொழுது, இறப்பிற்குப் பின் மறுவாழ்வு பெறும் கடவுளின் தயவைப் பெறுகிறோம்.
ஆம், திருமழுக்கு இறைக்குடும்பத்தில் இணைய கடவுள் அருளும் ஒரு கொடையும் அழைப்புமாகும். மரணத்துக்குப் பின் அவருடைய மகனாகவோ, மகளாகவோ முடிவில்லாத வாழ்க்கைக்குள் நுழைவதுதான் மறுபிறப்பு. ஒருவர் கிறிஸ்துவுக்குள் திருமுழுக்குப் பெற்று தூய ஆவியின் கொடைகளைப் பெறும்போது இந்தப் மறுபிறப்பு சாத்தியமாகும் என்பதை அறிந்துணர வேண்டும்.
மேலும், இன்றைய முதல் வாசகத்தில், அனைத்து விசுவாசிகளும் ஒரே இருதயத்தோடும் ஒரே மனதோடும் கடவுளிடம் தங்கள் குரல்களை எழுப்பியதாக லூக்கா பதிவு செய்கிறார். இயேசுவுக்கு நடந்தது அநீதியான தண்டனைத் தீர்ப்பைப்போல் அவருடைய சீடர்களுக்கும் நடக்கக்கூடும் என்று பயந்த இதர சீடர்கள் கடவுளிடம் இறைஞ்சி மன்றாடுகிறார்.
ஆம் நமது தேவைகளுக்காக, குறிப்பாகத் திருஅவையின் தேவைகளுக்காக நாம் ஒரு குடும்பமாக இணைந்து மன்றாட வேண்டும். எனவேதான் திருப்பலியில் இடம்பெறும் ‘ நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு மிகவும் இன்றியமையாதது. இந்த மன்றாட்டுகளில் முழு இதயத்தோடும் ஒரே எண்ணத்தோடும் பங்கேற்க வேண்டும்.
இறைவேண்டல்
உயிர்த்த ஆண்டவரே, எனது வாழ்வில் உம்முடைய தூய ஆவியாரின் உடனிருப்பு பற்றிய எனது விழிப்புணர்வினை எனக்குத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+60122285452
Daily Program
