மனிதநேயமும் மனச் சுத்தமும் போதும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

7 செப்டம்பர் 2024 
பொதுக்காலம் 22 ஆம் வாரம் –சனி

1 கொரி 4: 6-15
லூக்கா 6: 1-5

 
மனிதநேயமும்  மனச் சுத்தமும் போதும்!
 

முதல் வாசகம்.

 
இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் மனிதரிடையே வேறுபாடு காட்டுவதில்லை என்றும்,  அறிவிலிகளாகத்   தோன்றுகிறவர்களுக்கும் அறிவாளிகளுக்கும்  கடவுளாக இருப்பவர் ஒருவரே என்பதை நினைவூட்டுகிறார். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? என்ற கேள்வியை அவர்கள் முன்னால் வைக்கிறார் பவுல் அடிகள்.
 
மேலும், இவ்வாசகப் பகுதியில், கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களைக் கடவுளின் அன்பே மீட்டது என்பதை  அவர்கள் மறந்துவிட்டார்கள் என்றும்,  அவர்கள் பெற்ற கொடைகள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை என்றும், கடவுள் அழைத்த  வேறு யாரையும் விட அவர்கள் வேறுபட்டவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் அல்ல என்று  கூறும் வேளையில்  

•    ‘நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள், நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். 
•    நாங்கள் வலுவற்றவர்கள், நீங்களோ வலிமை மிக்கவர்கள்.
•    நீங்கள் மாண்புள்ளவர்கள், நாங்களோ மதிப்பற்றவர்கள்

என்று கிண்டல் கலந்த சொற்றொடர்களையும் கொண்டு  கொரிந்திய கிறிஸ்தவர்களை இந்த உலகின் ஞானிகளுக்கு ஒப்பிட்டுச் சாடுகிறார். தொடர்ந்து,  “நற்செய்தி வழியாக அவரே அவர்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தார் ” ஆதலால் அவர் அவர்களின் ஆன்மீகத் தந்தையாக உள்ளார் என்றும் இம்மடலில் குறிப்பிடுகிறார். 
 

 நற்செய்தி.


 நற்செய்தியில், இயேசுவும் அவரது சீடர்களும்,   ஒரு வயல் வழி பயணம் செய்கிறார்கள். அன்று ஓய்வுநாள்.   வயல் வழியே நடந்து செல்லும்போது, சீடர்கள் பசியின் நிமித்தம்  வயலில் இருந்து கதிர்களைக் கொய்து உண்டனர். கதிர்களைப் பறிப்பது ஒரு வேலை என்பதால் ஓய்வுநாளில் சீடர்கள்  கதிர்களைக் கொய்தது பரிசேயர்களால் குற்றமாகப் பார்க்கப்பட்டது. 

எனவே, இது குறித்து இயேசுவிடம் ஓய்வுநாள்  சட்டங்களை மீறுவதாக பரிசேயர்கள்  புகார் செய்கின்றனர். அப்போது இயேசு அவர்களிடம், தாவிது அரசரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொல்லி, ஓய்வுநாளை விடவும் மனிதர்கள், அவர்களுடைய தேவை மிக முக்கியமானவை என்று விளக்குகின்றார்.

இங்கே, இயேசு பரிசேயர்களின் வாயை அடைக்க  ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.

தாவீது அரசர் தமது பணியாளர்கள் பசியுடன் இருப்பதை அறிந்து, குரு அகிமெலக் வைத்திருந்த, குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய   தூய அப்பங்களை  உண்டார்களே, முறையா? (1 சாமு 21:1-6).  நிறைவாக, இயேசு அவர்களிடம்  ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்று  முடிக்கிறார்.


சிந்தனைக்கு.


இன்றைய இரு வாசகங்களையும் வாசித்துணரும்போது,  பொதுவாக நாம் கடவுப் பற்றிய தவறான எண்ணதில் வாழ்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது. முதல் வாசகத்தில்,   ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்வதை பவுல் அடிகள் கண்டிக்கிறார்.   

நற்செய்தியில், பரிசேயர்கள் சட்டத்தைப் பிடித்துக்கொண்டார்கள் மனிதநேயத்தைக் காற்றில் பறக்கவிட்டார்கள்.  இயேசுவோ மனிதநேயத்தை வலியுறுத்துகிறார். மனிதரின் பசியைப்போக்க கடவுள் அளித்த உணவை அவரது ஓய்வுநாளில் உண்ணக்கூடாது என்பது நியாமில்லை என்றும்  உணவு உண்பதும் ஒரு வேலைதானே, அப்படியென்றால் பரிசேயர்கள் ஓய்வுநாளில் உண்வு உண்பதில்லையா?  என்று வினவுகிறார்.  கடவுளுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின்  எதிர்ப்பார்ப்பு.  

இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பின்பற்ற அனைத்தையும் விட்டுக்கொடுத்து நற்செய்திக்காக ஓட்டாண்டியானவர்கள்.  அடுத்த வேளை உணவுக்கு ஆண்டவரின் தயவை எதிர்ப்பார்த்து இருந்தவர்கள். பசிக்கு இயற்கை உணவளித்தது. அதுவும் குற்றமாகப்பட்டது. ஆனாலும், இயேசு தம் சீடர்களை விட்டுக்கொடுக்காமல் தற்காக்கிறார். நாம் ஆண்டவர் பக்கம் இருக்கும்போது, அவர் நம் பக்கம் இருப்பார்.  நமது  ஆலயப் பாடல் ஒரு நினைவுக்கு வருகிறது. 

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னை தேடுகிறார்.
நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்’

நம்மை வாட்டி வதைப்பவர் கடவுள் அல்ல மாறாக, அவர் நம்மை வாழ வைப்பவர். `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்று கடவுளைப் பற்றி இயேசு சாட்சியம் பகர்ந்தார்.  எனவே, அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கு அடிமையாகாமல், கடவுளுக்கு நன்றி உள்ளவர்களாக வாழ்வோம்

சடங்கு சம்பிரதாயங்களை நம்பி போலி நம்பிக்கையாளர்களாக வாழ்வதை விட, கடவுளை நம்பி  மனிதனாக வாழ்வதே மேல். 


இறைவேண்டல்.


பொருளற்ற சட்டங்களை புறந்தள்ளிய ஆண்டவரே, நம்பிக்கை செயல்பாட்டில் நல்லொழுக்கம் கொண்டு   வாழும் வரத்தை எனக்கு அருள்வீராக. ஆமென்.
 


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452