Millennium மனிதர் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

பணம் உரம் போன்றது; அதைப் பரவலாகத் தூவுகின்றபோதுதான் பலன் இருக்கும்.

திருநெல்வேலி மாவட்டம் மேலக்கரிவேலம்குளம் என்ற ஊரில் பிறந்தவர் பாலம் கல்யாணசுந்தரம். கல்வியறிவற்ற ஏழைகளுக்காக இவர் வழங்கிய மொத்த தொகை முப்பது கோடி ரூபாய்.

இளம்வயதில் தந்தையை இழந்தார். ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வத்தை இவருக்கு ஊட்டியவர் இவரது தாய்தான். தூய சவேரியார் கல்லூரியில் பயின்ற இவர் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் நோக்கத்திற்காகத் திருமணம்கூட செய்துகொள்ளாமலேயே இருக்கிறார்.

நூலகக் கல்வியில் தங்கப்பதக்கம் வென்றார். இலக்கியத்திலும் வரலாற்றுத் துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றார். ஸ்ரீவைகுண்டம் நுண்கலைக் கல்லூரியில் நூலகப் பொறுப்பாளராக 35 ஆண்டுகள் பணிசெய்த இவர், இதில் கிடைத்த மாத வருமானத்தைப் பிறரன்பு பணிக்காகவே வழங்கினார்.

பணி ஓய்வு பெற்ற பின்னரும், ஓர் உணவு விடுதியில் வேலை செய்கிறார். அதில் கிடைக்கும் கொஞ்ச வருமானத்தையும் கருணை இல்லம் மற்றும் குழந்தைகளின் கல்விக்காகவே உதவி செய்கிறார். இவரது சேவையை அடையாளம் கண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு 2013ஆம் ஆண்டில் இவரை 'சிறந்த மில்லென்னியம் மனிதர்' என்று பாராட்டி முப்பது கோடி ரூபாயை விருது நிதியாக வழங்கியது. அந்த நிதி முழுவதையும் ஏழையர் கல்விக்காக வழங்கிவிட்டார்.

இந்திய அரசு இவரை 'சிறந்த நூலக மனிதர்' என்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் 'இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர்” என்றும், இந்திய ரோட்டரி கிளப் இவரை 'ஆயுள் காலச் சேவையாளர்' விருதையும் வழங்கிப் பாராட்டியுள்ளன. உண்மையில் நல்ல சமாரியராக வாழ்ந்துவரும் கல்யாண சுந்தரம் பாராட்டப்பட வேண்டியவர்தானே!

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.