பெருமை அழிவுக்கு முன் வரும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 20ஆம் வாரம், செவ்வாய்
18ஆகஸ்ட் 2026,  

எசேக்கியேல்  28: 1-10
மத்தேயு 19: 23-30

‘பெருமை அழிவுக்கு முன் வரும்!’

முதல் வாசகம்.

இவ்வாசகப் பகுதியில் தீர் நாட்டின் அரசனுடைய ஆணவத்தையும் பெருமையையும் இறைவாக்கினர் எசேக்கியேல் கடுமையாகக் கண்டிக்கிறார்.
தீர் நாட்டின்  அரசன், “நான் கடவுள்; கடல்களின் நடுவில் கடவுளின் அரியணையில் அமர்ந்திருக்கிறேன்” என்று தன்னை இறைவனுக்கு நிகராக உயர்த்திக் கொண்டான். அவனது ஞானம், அறிவு, செல்வம் ஆகியவற்றின் மீது அவன் பெருமை கொண்டிருந்தான். அவனுடைய அகந்தையின் காரணமாக,  அவனுடைய ஞானமும் செல்வமும் இறைவனிடமிருந்து கிடைத்தவை என்பதை மறந்து, தன்னையே கடவுளாகக் கருதினான்.
இதனால் இறைவன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கிறார். அந்நியர்களும் கொடூரமான மக்களும் அவனைத் தாக்கி, அவனுடைய பெருமையை அழிப்பார்கள். அவன் இறைவன் அல்ல என்பதை அவன் உணர வேண்டிய நிலை ஏற்படும் என்ற இறை செய்தியை எசேக்கியேல் பகிர்கிறார்.


நற்செய்தி.

மத்தேயுவின் நற்செய்தியின் தொடர்ச்சியாக,  செல்வந்தர் ஒருவர் விண்ணரசில் நுழைவது எவ்வளவு கடினம் என்பதை இயேசு எடுத்துரைக்கிறார்.
“செல்வந்தர் விண்ணரசில் நுழைவது கடினம்” என்று இயேசு கூறியபோது, சீடர்கள் வியப்புடன், “அப்படியானால் யார் மீட்புப் பெற முடியும்?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “மனிதர்களால் இது இயலாது; ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்” என்று பதிலளிக்கிறார்.
பின்னர் பேதுரு,  அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிய தங்களுக்கு (சீடர்களுக்கு)  என்ன கிடைக்கும் என்று கேட்கிறார். இயேசு, தம்மைப் பின்பற்றுவதற்காக வீடு, உறவுகள், சொத்துகள் போன்றவற்றைத் தியாகம் செய்பவர்களுக்கு நூறுமடங்கு பலனும் நிலைவாழ்வும் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறார்.

இறுதியில் இயேசு, “முதலானோர் பலர் கடைசியாவர்; கடைசியானோர் பலர் முதலாவர்” என்று கூறுகிறார்.  

சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களையும் கூர்ந்து கவனித்தால்,   உலகத்தின் அளவுகோல்களைக் காட்டிலும் இறைவனின் அளவுகோல்கள் வேறுபட்டவை என்பதை நம்மால் அறிய்தணர முடியும். ஆம், நமக்குள்ள அறிவு, திறமை, செல்வம், பதவி, அதிகாரம் ஆகியவை அனைத்தும் இறைவனின் கொடைகள். அவற்றைக் கொண்டு இறைவனை மறந்து “நான்” என்று பெருமைப்படாமல், தாழ்மையுடன் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

நாம் உழைத்துப் பெற்ற பொருள் செல்வம் தீமையானது அல்ல; ஏனெனில் நமது தேவைகளையும், நமது குடும்பத்தினரின் தேவைகளையும் கவனித்துக்கொள்ள அது அவசியமாகிறது. ஆனால் பணமும் பொருட்செல்வமும் எந்த வகையிலும் நமக்கு முழுமையான நிறைவைத் தர முடியாது. பணத்தையும் பொருட்களையும் நாம் அனுபவிக்கலாம்; அவை நமது ஆசைகளைத் தற்காலிகமாக நிறைவேற்றி, நம்மை மகிழ்விக்கும்.  ஆனால் நிலையான ஆறுதலும், உண்மையான நிறைவும் இறைவனிடமும், அவருடைய தூய திருவுளத்தை நிறைவேற்றுவதிலுமே அடங்கியுள்ளன என்பதை எண்ணிப் பார்க்க தவறுகிறோம்.

எசேக்கியேல் இறைவாக்கினர், தன்னுடைய செல்வத்தையும் ஞானத்தையும் அதிகாரத்தையும் நம்பி, “நான் கடவுள்” என்று பெருமை கொண்ட தீர்  அரசனை எச்சரிக்கிறார். அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் செல்வம் அல்ல; செல்வத்தால் ஏற்பட்ட ஆணவமும், இறைவனை மறந்த மனப்பான்மையும் ஆகும். இது இன்று நமக்கும் பொருந்தும். 

நாம் அதிகளவு பணம் வைத்திருக்கலாம்; ஆனால் பணம் நம்மை வைத்திருக்கக் கூடாது. நாம் விலை உயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தலாம்; ஆனால் அவை  நமது இதயத்தை ஆளக்கூடாது. ஏனெனில், இயேசுவின் கூற்றின்படி, “செல்வர் ஒருவர் விண்ணரசில் நுழைவது அரிது”. நற்செய்தியில், பேதுரு, “எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றிய எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்கிறார். அதற்கு, இயேசு, தம்மைப் பின்பற்றுவதற்காக எதையாவது விட்டுக்கொடுப்பவர்களுக்கு நூறு மடங்கு பலனும் நிலைவாழ்வும் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறார். 

செல்வம் அதிகம் இருந்தால்தான் நமக்கு இவ்வுலகில் பாதுகாப்பும் மரியாதையும் என்று நினைக்கிறோம். எனவே, இன்று நாம் எழுப்ப வேண்டிய கேள்வி,  “என் வாழ்க்கையில் முதலிடம் யாருக்கு—இறைவனுக்கா, செல்வத்துக்கா?” “என் பாதுகாப்பு இறைவனிடமா, எனது பணத்திலும் சொத்துகளிலுமா?” என்பதாகும்.

நிறைவாக, பெரும் செல்வர்கள் அல்ல, மாறாக  ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், எளியவர்கள், பிறருக்காகத் தியாகம் செய்பவர்கள் —ஆகியோரே  இறைவனின் பார்வையில் முதன்மையானவர்களாக இருப்பார்கள். 

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, செல்வத்தை அல்ல, உம்மையே என வாழ்வின் மிகப்பெரிய செல்வமாகக் கருதும் தூய இதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.” 
 

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய கலவி  மையம்
+60122285452

Tamil Survey Popup Image