இறைவார்த்தை வழிகாட்ட, கிறிஸ்து நம் ஆண்டவராய் விளங்குவார்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 9 ஆம் வாரம் – வெள்ளி
2 திமொ 3: 10-17
மாற்கு 12: 35-37
இறைவார்த்தை வழிகாட்ட, கிறிஸ்து நம் ஆண்டவராய் விளங்குவார்!
முதல் வாசகம்
இவ்வாசகப் பகுதியல், பவுல் திமொத்தேயுவிடம் அவருடைய துன்பம் கலந்த வாழ்க்கை முறை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைப் பின்பற்றியதை நினைவூட்டுகிறார். பல துன்புறுத்தல்களையும் பாடுகளையும் அனுபவித்தபோதிலும், ஆண்டவர் தம்மை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்தார் என உறுதிபட பகிர்கிறார்.
கிறிஸ்து இயேசுவுக்குள் இறைப்பற்றுடன் வாழ விரும்புகிற அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள் என்றும், தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள், வழிதவறிச் செல்வார்கள் என்றும் எச்சரிக்கிறார். ஆகையால், திமொத்தேயு தான் கற்றும் நம்பியும் வந்த உண்மையில் நிலைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
சிறுவயதிலிருந்தே அறிந்திருந்த திருமறை நூல்கள் அவருக்கு மீட்பிற்கான ஞானத்தை அளிக்க வல்லவை என்று பவுல் கூறுகிறார். மேலும், மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது என்று உண்மையை முன்வைத்து போதிக்கிறார். அவை கற்பிப்பதற்கும், குற்றத்தை உணர்த்துவதற்கும், திருத்துவதற்கும், நீதியில் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளதாக உள்ளன. இதன் மூலம் இறை மனிதர் முழுமையாகத் தயாராகி, எல்லா நற்செயல்களுக்கும் தகுதியானவராக இருப்பார் என்று போதிக்கிறார் பவுல்.
நற்செய்தி.
இயேசு ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது, “மெசியா தாவீதின் மகன்” என்று மறைநூல் அறிஞர்கள் கூறுவதைப் பற்றி மக்களிடம் கேள்வி எழுப்புகிறார். தாவீது தாமே தூய ஆவியின் தூண்டுதலினால்,“ ‘ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று கூறியிருக்கிறார் (திருப்பாடல் 110:1) என இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
அதனால், தாவீது மெசியாவை “என் ஆண்டவர்” என்று அழைக்கும்போது, மெசியா வெறும் தாவீதின் சந்ததியினர் மட்டுமல்ல; அவர் தாவீதைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதைக் இயேசு வெளிப்படுத்துகிறார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியை, கூர்ந்து வாசித்தால், இயேசு கிறிஸ்து தாவீதின் மகனாகிய மனித மெசியா மட்டுமல்ல; அவர் இறை அதிகாரமும் மகிமையும் உடைய ஆண்டவர் என்பது தெளிவாகும். மெசியாவின் உண்மையான அடையாளத்தை வெளிப்புற மனித பார்வையால் மட்டும் புரிந்துகொள்ள முடியாது. இயேசுவின் தெய்வீகத்தையும் உயர்ந்த அதிகாரத்தையும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
மேலும் இன்றைய வாசகங்களை ஒருமித்தே தியானிக்கும்போது, இறைவார்த்தையில் நிலைத்திருத்தல் மற்றும் இயேசுவின் உண்மையான அடையாளத்தை அறிதல் எனும் இரு படிப்பினைகளை நாம் பெறுகிறோம்.
முதல் வாசகத்தில், பவுல் திமோத்தேயுவிடம், "நீ கற்றுக்கொண்டவற்றில் நிலைத்திரு" என்று அறிவுறுத்துகிறார். பவுல் பல துன்பங்களையும் துரோகங்களையும் அனுபவித்தார். இருந்தாலும் அவர் இறைவனில் உறுதியாக நின்றார். அதுபோல நாமும் உலகின் பல சோதனைகளுக்கு மத்தியில் நம் நம்பிக்கை வாழ்வில் உறுதியாக இருக்க அழைக்கப்படுகிறோம். பவுல் மேலும், நமக்கு அருளப்பட்ட மறைநூல் நம்மை மீட்பின் பாதைக்கு வழிநடத்தி, நற்செயல்களுக்கு தகுதியானவராக உருவாக்குகிறது என்று கூறுகிறார். எனவே தினமும் இறைவார்த்தையை வாசித்து தியானிப்பது நம் ஆன்மீக வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் எனும் படிப்பினை வலியுறுத்தப்படுகிறது.
நற்செய்தியில் இயேசு, மெசியா தாவீதின் மகன் மட்டுமல்ல, தாவீதின் ஆண்டவரும் ஆவார் என்பதை எடுத்துரைக்கிறார். இதன் மூலம் இயேசு ஒரு சாதாரண மனிதத் தலைவர் அல்ல; அவர் இறைமகன், உலகின் மீட்பர் என்பதை வெளிப்படுத்துகிறார். இயேசுவை வெறும் வரலாற்று நபராக அல்லாமல், நம் வாழ்க்கையின் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நிறைவாக, இன்றைய வாசகங்கள் நம்மிடம் ஒரு கேள்வியை எழுப்புகின்றன: நாம் இறைவார்த்தையில் வேரூன்றி வாழ்கிறோமா? இயேசுவை நம் வாழ்க்கையின் ஆண்டவராக உண்மையில் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? என்தே அவை.
பெயரளவில் கிறிஸ்தவர் என்பது ஏட்டுச் சுரக்காய். அத்தகைய பற்றற்ற வாழ்வு எதற்கும் உதவாது. "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என் வாழ்வதும் மடமை.
இறைவார்த்தையை அன்புடன் வாசித்து, இயேசுவின் வழியில் நடந்து, அவரை நம் வாழ்வின் ஆண்டவராக ஏற்றுக்கொள்வதிலும், கிறிஸ்தவ வாழ்வுக்காக துன்பங்களை ஏற்பதும் நாம் ஏற்ற சீடத்துவ வாழ்வுக்கு ஏற்றதாக மாறும். ஆம், இறைவார்த்தையில் நிலைத்திருந்து, துன்பங்களிலும் விசுவாசமாக வாழ்ந்து, மறைநூலின் வழிகாட்டுதலால் நற்செயல்களில் வளர்வதே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை அழைப்பு ஆகும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, இறைவார்த்தையை அன்புடன் வாசித்து, உமது வழியில் நடந்து, உம்மை எந்நாளும் எச்சூழலிலும் என் வாழ்வின் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளும் அருளைத் தாரும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452