கிறிஸ்துவைச் சார்தந்தவரே கிறிஸ்தவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

4 மே 2024                                                                                            

பாஸ்கா காலத்தின் 5ஆம் வாரம் -சனி

திருத்தூதர் பணிகள் 16: 1-10

யோவான்  15: 18-21

முதல் வாசகம்

பவுல் அடிகளும் சீலாவும், அந்தியோக்கியாவை விட்டு, தரை வழியாக தர்சுவுக்கு வந்து, அங்கிருந்து தெருபைக்கும் லிஸ்திரவுக்கும் வந்தனர். தர்சு, தெருபை மற்றும் லிஸ்திரா ஆகியவை  சிலிச்சியா மாநிலத்தில் உள்ள நகர்களாகும். தனது முதல் பயணத்தின் போது, பவுல் பர்னபாவுடன் லிஸ்திராவில் ஒரு கிறிஸ்தவச் சமூகத்தை ஏற்படுத்தியிருந்தார் (14: 22-23).
இந்த இரண்டாவது பயணத்தின்போது, ஆண்டவர் பவுலுக்கு மற்றொருவரை அடையாளம் காட்டினார். அவர்தான் திமொத்தேயு என்பவர்.   ’திமொத்தேயு என்றால், ‘கடவுளை மதித்துப் போற்றுபவர்” என்று பொருள். தன் பெயருக்கு ஏற்றபடி, வாழ்விலும், பணியிலும் அவர் லிஸ்திராவில் நன்மதிப்போடு சிறப்புற்று விளங்கினார்.   இவர் லிஸ்திராவில் ஒரு கிரேக்கத் தந்தைக்கும்  ஒரு யூதத் தாய்க்கும்  பிறந்தவர்.à பல ஆண்டுகள் பவுலோடு பயணித்து அவருக்கு மிக நெருங்கிய பணியாளராக, நண்பராக மற்றும் ‘தந்தை-மகன்’ உறவில் மறைதூதுரை பணியில் வளர்ந்தவர் திமொத்தேயு (1கொரி 4:17).

தன்னோடு இணைந்து மறைபரப்பு பணியில் ஈடுபடும்போது, யூதர்களால் எவ்வித எதிர்ப்பும், இடரும்  நிகழாதிருக்க, பவுல் முன்யோசைனையோடு தீமோத்தேயுவுக்கு யூதச் சமய மரபின்படி விருத்தசேதனம் செய்து வைத்தார் என்று லூக்கா விவரிக்கிறார்.

நிறைவாக, பவுல் அடிகள் துரோவாவில், இரவில் ஒரு காட்சி கண்டார்   அக்காட்சியில்,  மாசிதோனியாவைச் சேர்ந்த ஒருவர்,  அவரின் ஊருக்கு (மாசிதோனியாவுக்கு)  ஓர் இறைப்பணியாளர் வரவேண்டும் என்று பவுலிடம் கேட்டதாக லூக்கா குறிப்பிடுகிறார்.  இதன் வழி கடவுள் அவர்களை மாசிதோனியா மாநிலத்திற்கு செல்ல பணிப்பதைப் பவுல் புரிந்துகொண்டு புறப்பட தாயாரானார். இந்நூலை எழுதிக்கொண்டிருக்கும் லூக்கா, தன்னையும் இந்த மூவருடன் இணைத்துக்கொள்கிறார். ஆம், ‘நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்’ என்று கூறும்போது,   ‘நாங்கள்’ என்று கூறுகிறார். 
 

நற்செய்தி.

தம்முடைய போதனைகளைப் பின்பற்றுபவர்களாகவவும் எதிர்காலச் சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க  இயேசு தம் சீடர்களைத் தயார்படுத்துகிறார்.

இயேசு, “உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்”  உலகில் பின்னர் எழக்கூடிய கிறிஸ்தவத்திகான வெறுப்பை முன்னறிவிக்கிறார். 

கிறிஸ்துவின் சீடர்கள் இயேசு  உலகிலிருந்து தேர்ந்தெடுத்து, வேறுபட்ட வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்றும் சீடர்கள்  உலகைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், இதன் காரணமாகவே, உலகம்  தம்  சீடர்களை  வெறுக்கிறது என்றும் தெளிவுப்படுத்துகிறார். 

இதன் விளைவாக, இயேசுவுடன் சீடர்கள்  இணைந்திருப்பதால், அவர் துன்புறுத்தலை எதிர்கொண்டது போலவே சீடர்களும்  விரோதத்தையும் துன்புறுத்தலையும் எதிர்நோக்கும் நிலை ஏற்படும் என்கிறார். இருப்பினும், சீடர்கள் இத்துன்பதில்  தனியாக இல்லை என்றும் அவர் அவர்களுக்கு உறுதியளிக்கிறார். 

நிறைவாக, பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல எனும் அவரது போதனையை நினைவில் நிறுத்த சீடர்களை வேண்டுகிறார்.

 
 சிந்தனைக்கு.

‘ஊருடன் கூடி வாழ்’ என்பது ஆன்றோர் வாக்கு. நம்மில் பலர் இக்கூற்றை மறுப்பதில்லை. நல்லதோ கெட்டதோ அனைத்திற்கும் ‘ஆமாம்' என்பது வழக்கமாகிவிட்டது. யாருடைய வெறுப்பையும் தேடிக்கொள்ளக்கூடாது என்பது நமது ஆழ்மனதில் பதிந்துவிட்டது. நம்மை யாரும் வெறுப்பதை நாம்  விரும்புவதில்லை. 

ஆனால், ஒரு கிறிஸ்தவரின் மனநிலை இப்படி இருக்கலாகாது என்கிறார் ஆண்டவர். ஒவ்வொரு நாளும் "உலகம்" கடவுளிடமிருந்து நம்மை வெல்ல விரும்புகிறது. வேறுபட்ட உலகில் மாறுபட்ட வாழ்வுக்கு நாம் அழைக்கப்பட்டவர்கள். ‘பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று' என்பதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை. முதல் வாசகத்தில்.   திமொத்தேயு  தன் பெயருக்கு ஏற்றபடி, வாழ்விலும், பணியிலும் அவர் லிஸ்திராவில் நன்மதிப்போடு சிறப்புற்று விளங்கினார் என்று லூக்கா கூறுவதைப்போல், கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் சிறப்புற்று வாழ் வேண்டியவர்கள்.

நம் ஆன்மாவின் மூன்று எதிரிகளைப் பற்றி இயேசு கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும்.  உடல் சார்ந்த ஆசை,  அலகை (பிசாசு)  மற்றும் உலகம். இந்த நற்செய்தியில், "உலகம் சார்ந்த மக்கள்' என்று இயேசு குறிப்பிடுவதும் ஒரு மாயை வாழ்வுதான். ஆசைக்காட்டி மோசம் செய்யும் உலக வாழ்வ அது.

ஓர் உண்மை கிறிஸ்தவர் எதிர்ப்பின்றி இவ்வுலகில் பயணிக்க முடியாது.   நாம் ஒருவித வெறுப்பை அனுபவித்தால், அதனை மகிழ்வோடு ஏற்று முன்னோக்கிச் செல்ல  நம் இறைவன் நம்மைத்  தயார்படுத்தி, அதை மகிழ்ச்சியுடன் தாங்கும் வலிமையையும் தைரியத்தையும் நமக்கு வழங்குகிறார் என்பதை அறிந்துணரவதோடு, இயேசுவின் இந்த உறுதிமொழியில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். 

“இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! ” உரோ 12”2) என்று தான்  பவுல் அடிகளும் அழைப்பு விடுக்கிறார். 


இறைவேண்டல்.
 
எங்களை உம்மைச் சார்ந்த மக்களாகத் தேர்ந்தெடுத்த ஆண்டவரே, என்றும் உண்மைக்குச்  சான்று பகரும் சீடராக வாழ என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென். 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452