மன்னிக்கப்பட மன்னிப்போம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

தவக்காலம் மூன்றாம் வாரம் – செவ்வாய்
தானி (இ) 3:25, 34–43
 மத்தேயு  18: 21-35

 
மன்னிக்கப்பட மன்னிப்போம்!
 
முதல் வாசகம்.

 இந்தப் பகுதி, சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ ஆகியோரின் கதையிலிருந்து வருகிறது, அவர்கள் தங்கச் சிலையை வணங்க மறுத்ததால், நேபுகாத்நேச்சார் அரசனால் அக்கினிச் சூளையில் வீசப்பட்டனர். அவர்கள் நெருப்பில் இருந்தபோது, அசரியா (ஆபேத்நேகோ) கடவுளிடம் மன்றாடினார்.

மக்கள் தங்கள் பாவங்களால் துன்பப்படுகிறார்கள் என்பதை அசரியா ஒப்புக்கொள்கிறார். அவர் கடவுளைக் குறை கூறவில்லை, ஆனால் அவர்களின் தவறுகளை நேர்மையாக ஒப்புக்கொண்டு மக்களின் மனமாற்றதிற்காக இறைவேண்டல் செய்கிறார்.

அவரது இறைவேண்டலில் கடவுள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேலுடன் செய்த உடன்படிக்கையை நினைவில் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறார்.

அக்லாக்கட்டத்தில் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்ட நிலையில், மக்களுக்கு கோவிலில் பலி செலுத்த குருக்கள இல்லை. எனவே அவர்கள் பலிகளுக்குப் பதிலாக ஒரு தாழ்மையான மற்றும் நொறுங்கிய இதயத்தை பலியாகச் செலுத்துகிறார்கள்.   உண்மையான வழிபாடு என்பது பலிகள் மட்டுமல்ல, உண்மையான மனந்திரும்புதலும் என்பதை இது காட்டுகிறது.


நற்செய்தி.


நற்செய்தியில், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். யூத மரபில், மூன்று முறை மன்னிப்பது ஏற்கனவே போதுமானதாகக் கருதப்பட்டது. ஆகவே,  பேதுரு ஏழு முறை மிகவும் தாராளமானதாககக் கருதுகிறார்.

ஆனால் இயேசுவோ,“ஏழு முறை அல்ல, எழுபது ஏழு முறை” என்கிறார். இயேசு ஒரு எண்ணைக் கொடுக்கவில்லை. அவர் வரம்பற்ற மன்னிப்பைக் குறிக்கிறார். மன்னிப்பு ஒரு வாழ்க்கை முறையாக மாற வேண்டும். இப்படிப்பினையை விவரிக்க ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். 


உவமையில்,  ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் அவர்கள் வாங்கிய கடன்தொகை கணக்குக் கேட்க விரும்பினார்.  ஒரு வேலைக்காரன் அவனுக்கு ஒரு பெரிய தொகையை (பத்தாயிரம் தாலந்து – அடைக்க சாத்தியமற்ற கடன்) கடன்பட்டிருக்கிறான். அப்பணியாளன் இரக்கத்திற்காக மன்றாடுகிறான். அரசரோ அவன்மீது இரக்கம் கொண்டு முழு கடனையும் மன்னிக்கிறான்.

 
அரசனின் மன்னிப்பைப் பெற்ற பிறகு, அதே பணியாளன் தனக்கு மிகக் குறைந்த அளவு கடன்பட்டிருக்கும் மற்றொரு வேலைக்காரனை சந்திக்கிறான். அவனுக்குக் இரக்க்ம் காட்டுவதற்குப் பதிலாக, அவன்: அவனைப் பிடித்து, கடனை திரும்பத்தருமாறு துன்புறுத்தி அவனைச் சிறையில் தள்ளுகிறான்.

 
அரசனின் தீர்ப்பு.


இதைப் பற்றி அரசர் கேள்விப்பட்டதும், அவர் கோபமடைந்து, இவ்வாறு கூறுகிறான்:
“நான் உனக்கு இரக்கம் காட்டியது போல நீயும் உன் சக பணியாளனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று, மன்னிக்காத பணியாளனை தண்டிக்கிறார்.  இந்த உவமையை இயேசு பின்வரும் கடுமையான எச்சரிக்கையுடன் முடிக்கிறார்:

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.” என்கிறார்.

சிந்தனைக்கு.


நற்செய்தியில், கடவுளின் அளவற்ற இரக்கத்தை இயேசு எடுத்தியம்பியதைக் கேட்டோம். கடவுள் நம்மை பெரிதும் மன்னிக்கிறார். கடவுளுக்கு எதிரான நமது பாவங்கள் மிகப்பெரிய கடனைப் போன்றவை. ஆனால், நமது பாவத்தை (கடனை) கடவுள் மன்னிக்க வேண்டுமாயின் இங்கே ஒரு நிபந்தனை உண்டு. நாம் நமக்கு எதிராக குற்றம் புரிந்தோரை மன்னிக்க வேண்டும். இதையே வலியுறுத்தி ஆண்டவர் இயேசு அவர் கற்பித்த இறைவேண்டலில், ‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதைப்போல எங்கள் குற்றங்களை மன்னியும்’ என்று மன்றாட கற்றுக்கொடுத்தார். 


இயேசுவின் உவமையில் வரும் அரசர் எனும் கதாப்பாத்திரம்  கடவுளைக் குறிக்கிறது.  நாம் ஒவ்வொருவரும் மிகப்பெரிய கடனுக்காக மன்னிக்கப்பட்ட முதல் பணியாளராக உள்ளோம்.  நாம் இரக்கத்திற்காக மன்றாடும்போது, கடவுள் அதை மிகுதியாக வழங்குகிறார். நம் பாவங்களின் கடனை நம்மால் திருப்பிச் செலுத்த முடியாது என்பதை அவர் அறிவார், எனவே அவர் ஒரு நிபந்தனையுடன் அதைத் துடைக்கிறார்: நமக்கு எதிராகப் பாவம் செய்யும் அனைவரையும் நாம் மன்னிக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை.

மன்னிப்பு என்பது வெறும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது - அது இதயத்திலிருந்து வர வேண்டும் - அது நேர்மையாகவும், முழுமையாகவும், எந்த நிபந்தனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று இயேசு கற்பிக்கிறார்.

பெரும்பாலான மக்களுக்கு இருப்பது போல, நமக்கும் மன்னிப்பு கடினமாக இருந்தால், மன்னிப்பு கொடுக்காதிருப்பதன்   விளைவுகளைப் பற்றி யோசித்துப் பாரக்க வேண்டும், இந்த உவமையில் அரசர் தனது பணியாளரை தனது சக பணியாளரின் சிறிய கடனை மன்னிக்க மறுத்ததை அறிந்தபோது, "அவன் முழு கடனையும் திருப்பிச் செலுத்தும் வரை அவனை சிறைப்படுத்துகிறார்.  நாம் மனமாற பிறரை மன்னிக்காவிடில் அதே நிலைதான் நமக்கும். 


 இறைவேண்டல்.


ஆண்டவரே, நீர் எனக்கு அளித்த அதே இரக்கத்தை நானும் மற்றவர்களுக்கு வழங்கும்படி, தயைக்கூர்ந்து என் இருதயத்தை மென்மையாக்குவீராக. ஆமென்.


ஆர்.கே.சாமி (மலேசியா)
+60122285452