உழைப்பை முதன்மைப்படுத்துவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

01 மே 2024,  

தொழிலாளரான புனித யோசேப்பு-விழா

தொடக்க நூல் 1: 26- 2: 3                                  

மத்தேயு 13: 54-58

முதல் வாசகம்.
 
இன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.  இதனையொட்டி, தொடக்க நூலிலேயே இறைவனை ஓர் உழைப்பாளராகக் காண்கிறோம். முதல் ஆறு நாள்கள் அவர் இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததோடு அதனுள் உள்ள மனிதன் உட்பட அனைத்தையும் அவரே படைத்தார் என் மறைநூலில் வாசிக்கிறோம். அடுத்து அவர்   ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார். ஓய்வு நாளைப் புனிதமாக்கினார் என்பதை முதல் வாசகம் விவரிக்கிறது. இறைவன் முதற்கொண்டு அனைவருமே ஒரு விதத்தில் தொழிலாளர்கள் தான் என்பதை வாசகம் வலியுறுத்துகிறது. . 

    
நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சொந்த  ஊரில்  ஏற்கப்படாததை பற்றி மத்தேயு குறிப்பிடுகிறார். மேலும் இயேவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பு அவரது தச்சு தொழில் நிமித்தம் ஒரு தொழிலாளராக நினைவுகூரப்படுகிறார்.

இயேசுவின் போதனையில் மேலான ஞானம்'' வெளிப்பட்டதைக் கண்ட உள்ளூர் மக்கள் வியப்படைந்தனர்.  இயேசு  செய்த புதுமைகளில் கடவுளின்  வல்லமையை மக்கள் கண்டனர்.   ஆயினும் அவர்களுக்கு இயேசுவின் பெற்றோர் யார் என்றும், அவருடைய உறவினர் யார் என்றும் ஏற்கனவே தெரிந்திருந்ததால் இயேசுவை ஓர் இறைவாக்கினராகவோ அல்லது மீட்பராகவோ அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

ஆகவே, இந்த அலட்சியப் போக்கு நாசரேத்து மக்களின் இதயத்தை மூடிவிட்டது.  இயேசு உண்மையிலேயே யார் என்பதை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள்.  எனவேதான், இயேசு,  அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்”  என்று கூறி விடைபெறுகிறார்.


சிந்தனைக்கு.

இன்று மே திங்கள் முதலாம்  நாள். புனித யோசேப்பை தொழிலாளர்களின் பாதுகாவலர் என நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். முதல் வாசகத்தில் இறைவனும் ஒரு தொழிலாளியாகச் சுட்டிக்காட்டப்படுகிறார். இன்றைய நற்செய்தியிலும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு ஒரு தச்சராக வெளிப்படுத்தப்படுகிறார்.

இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்தூரில் புறக்கணிக்கப்படுவதை மத்தேயு (13:53-58), மாற்கு (6:1-6) மற்றும் லூக்கா (4:16-30) என்ற மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் பதிவு செய்துள்ளனர்.

 "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? என்று இயேசு அந்த ஊர் மக்களால் வியக்கப்படுகிறார். 

இயேசு நாசரேத்தூரில் சுமார் 27 ஆண்டுகள் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். அதிலும் ஒரு தச்சு தொழிலாளியின் மகன்.  ஆகவே அனைத்து மக்களுக்கும் அவருடன் பழக்கம் இருந்திருக்கும். நிச்சயமாக அவருடைய நல்ல குணங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவரோடு ஒரு தச்சு தொழிலாளி என்ற முறையில்தான் பழகியிருப்பார்களேயொழிய  மனுவுரு எடுத்த இறைமகன் என்ற முறையில் அல்ல. 

ஒருமுறை, நாசரேத்தூர் இயேசுதான் மெசியா என்று பிலிப்பு நத்தானியேலிடம் கூறியபோது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமா?" (யோவான் 1:46) அன்று அவர் ஏளனமாகக் கேட்டார். இயேசுவின் ஊரை வைத்து அவரை எடைபோட்டார் நத்தானியேல். 
ஆம். நாமும் இப்படிதான்     நம்மைச் சுற்றியுள்ளவர்களைப்  பார்க்கிறோம். ஒருவருடைய பணம், பதவி, பட்டம், ஊர், கல்வியறிவு மற்றும் உடை ஆகியவற்றைக் கொண்டே அவரை மதிப்பிடுகிறோம். ஆள் பார்த்து, அவரது பின்னணியை வைத்து எடைபோடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நமது பங்குகளிலும் இவ்வாறுதான் நடந்து கொள்கிறோம். குறிப்பாக  திருப்பணியாளர்களை விருப்பத்திற்கு குறைகூறுகிறோம்.  கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுபவர் அல்ல என்பது நமக்குத் தெரிந்திருந்தும் நாம் ஆள் பார்த்தும், தொழில் பார்த்தும் விமர்சிக்கிறோம். .
தன் சொந்த ஊரார் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்தாக இயேசு யாரையும் சபிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அவர்களின் மனநிலையை இயேசு  ஏற்றுக்கொள்கிறார். தனக்கு மதிப்பளிக்கவில்லை என்று  அவர் மன வேதனை கொள்ளவுமில்லை.   சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல தன் இயல்பை மாற்றிக்கொள்ள மறுக்கின்றார் இயேசு. நாமாக இருந்தால்,  உடனே முகம் சுழிப்பதோடு வெறுப்பை வெளிப்படுத்துவோம். 

அடுத்து, வழக்கமாக,  உடல் உழைப்பாளர்கள் மதிப்பு குறைந்தவர்கள்  என்ற எண்ணம் நம்மில் மலிந்துள்ளது.  உழைக்கின்ற அனைவரையும், குறிப்பாக உடல் உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோரை நாம் மதிக்க வேண்டும்.  உழைவன் சேற்றில  கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பார்கள். இறைவனும் ஒரு தொழிலாளி எனும் அடிப்படையில், தொழிலாளர்களைக் கடவுளின்  வாரிசுகளாகப் பார்க்க வேண்டும். நாமும் இந்த சமூகத்தின் உயர்வுக்காகவும், கடவுளின் படைப்பைப் பாதுகாக்கவும்  அயராது உழைக்க முன்வர வேண்டும்.

‘வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி’
(ஆலங்குடி சோமு)

இறைவேண்டல்.

ஒரு தொழிலாளியின் மகனாக உலகில் உலா வந்த இயேசுவே, எனது உழைப்பால் நான் வாழவும், ஓய்வு ஒழிச்சலின்றி அயராது உழைத்துக் கொண்டிருக்கும் அனைவரையும் என் சகோதர சகோதரிககளாக ஏற்கும் வரத்தை அருள்வீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Inbachudar Mut… (not verified), May 02 2024 - 8:04am
இன்றைய நாள் மக்களுக்கு ஒரு சிறப்பான நாளாக அமைகிறது.