இறைப்பணியாளரை இதயத்தில் ஏற்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
4 மார்ச் 2024
தவக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்
2 அரசர் 5: 1-15
லூக்கா 4: 24-30
முதல் வாசகம்:
இன்றைய முதல் வாசகம், சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமானைப் பற்றிய கதையாகும். நாமான் அந்நாட்டின் படைத் தளபதி. அவர் தனது இராணுவ வலிமைக்காக மிகவும் மதிக்கப்பட்டவர். இருப்பினும், நாமான் கடுமையான தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவரது தொழுநோயிற்கு முன்னால், அவரது வலிமை எடுபடவில்லை, அவரும் தன் மதிப்பை இழந்திருந்தார்.
அவ்வேளையில், நாமான் இஸ்ரயேலிலிருந்து ஒருமுறை கடத்தி வந்த ஓர் இளம் பெண், அவரது மனைவிக்குப் பணிப்பெண்ணாக இருந்து வந்தாள். தன் எசாமானின் நிலையைக் கண்டு, மனமிரங்கி தன்னுடைய நாடான இஸ்ரயேலில், இறைவாக்கினர் எலிசாவிடம் சென்றால் நலமடைவார் என்று கூறவே, நாமானும் அரசனின் சிபாரிசுக் கடிதம் பெற்று இஸ்ரயேலுக்கு (சமாரியாவுக்கு) சென்றார்.
இஸ்ரயேலின் அரசன், தாமான் அளித்தக் கடிதத்தைப் படித்தவுடன், அதை போருக்குத் தூண்டும் ஓரு சூழ்ச்சியாகச் சந்தேகித்து, துயரத்தில் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார். எலிசா இறைவாக்கினர், அரசனின் துயரத்தைக் கேள்விப்பட்டு, தோழுநோய் கண்ட நாமானை தன்னிடம் அழைத்து, “நீ யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்” என்று கூறவே, நாமான், தன் ஊரான் சிரியாவிலேயே அவ்வாறு செய்திருப்பேனே என்று கோபமடைந்தார். நிறைவாக, எலியாவின் சொல்லுக்குப் பணிந்து, யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் முழுமையாக நலமடைந்தார்.
நற்செய்தி:
இன்றைய நற்செய்தியான லூக்கா நான்காம் அதிகாரத்தின் தொடக்கத்தில், இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, வழக்கப்படி, ஓய்வுநாளான அன்று தொழுகைக்கூடத்தில் மறைநூலை வாசித்தார். அது இயேசுவைப் பற்றி எசாயா இறைவாக்கினர் முன்னுரைத்தப் பகுதியாகும். பின்னர், மக்களிடம் “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்று, தன்னைப் பற்றி சாட்சியம் பகர்ந்தார். அவர்கள் அவரை ஏற்கனவே அறிந்திருந்தப்படியால் அவரது சொல்லையும் அவரையும் மதிக்கவில்லை. அப்போது, “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” என்று அவர்களிடம் கூறினார்.
இயேசு தான் மேற்கண்டவாறு கூறியதற்கு எடுத்துக்காட்டாக, முதல் வாசகத்தில் இடம்பெற்ற எலியா. நாமான் கதையைக் கூறுகிறார். நாட்டில் மழை இல்லாததால், கடவுள் எலியாவைக் காப்பாற்ற அவரை சீதோன் பகுதியில் இருக்கும் சாரிபாத்துக்கு அனுப்பினார். அங்கு எலியாவுக்கு உணவு வழங்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டார். இயேசு இந்த நிகழ்வை நினவைகூர்ந்து, இஸ்ரயேலில் பல கைம்பெண்கள் இருக்கும் போது, எலியா அவர்களிடம் அல்லாது, அந்நிய கைம்புண்ணிடமே அனுப்பப்பட்டார் என்று கூறி, சொந்த ஊரில் இறைவாக்கினர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று தெளிவுப்படுத்தினார்.
மேலும், எலியாவின் காலத்தில் இஸ்ரயேலில் பல தொழுநோயாளிகள் இருந்தார்கள், ஆனால் சிரியாவின் (இஸ்ரவேலர் அல்லாதவர்) நாமான் மட்டுமே எலியாவால் குணப்படுத்தப்பட்டார் என்றும் விளக்கிக் கூறினார்.
இதைக் கேட்டதும் தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் இயேசுவையும் அவருடைய செய்தியையும் நிராகரித்தனர். ஒருகால் கடவுளின் தயவுப் பரிவும் தங்களுக்கு மட்டுமை உரியது என்று அவர்கள் கருதியிருக்கலாம்.
இயேசுவைத் துன்புறுத்த நினைக்கும் அளவுக்கு மக்களின் கோபம் அதிகரித்தது. அவரை ஊரை விட்டு விரட்டி, கீழே தூக்கி எறிய எண்ணி மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், இயேசு அந்திடத்தை விட்டு வெளியேறினார்.
சிந்தனைக்கு:
முதல் வாசகம் மற்றும் நற்செய்தி ஆகிய இரண்டும் நம்மில், வாழும் கடவுளாக உள்ளவர் மேல் ஆழ்ந்த நம்பிக்கை வைக்க நம்மைத் தூண்டுகின்றன. கடவுள் எப்பொழுதும் நம் வாழ்வின் சூழ்நிலைகளில் நம்மை சந்திக்கிறார். நாம் நம் கண்களைத் திறந்தால் - நம்பிக்கையின் கண்கள் - நம் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளில் கடவுளின் கை செயல்படுவதைக் காண்போம். முதல் வாசகத்தில், இஸ்ரயேலின் வேலைக்காரி மூலம் கடவுள் தன்னை வெளிப்படுத்தினார்.
குணப்படுத்தக்கூடிய கடவுள் மீது அந்த எளிய பணிப்பெண்ணுக்கு நம்பிக்கை இருந்தது. அவள் தைரியமாக தன் எசமானிடம் எடுத்துச் சொல்கிறார். எலியாவிடம் நாமானை நம்பிக்கையோடு அனுப்புகிறாள். நாமானும் இந்த பணிப்பெண்ணின் வார்த்தையில் நம்பிக்கை வைத்துப் புறப்பட்டார், இறுதியில் நலம் பெற்றார்.
இயேசு எடுத்துக்கூறிய இந்த எலியா மற்றும் நாமான் கதை நாசரேத்து மக்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. இறைவாக்கினர்களை உதாசினப்படுத்தும்போது, அந்த ஊருக்கு நல்லது எதவும் நிகழாது என்று இயேசு குறிப்பிடுகிறார்.
இன்றும், நமக்கும் இந்த இரு வாசகங்களும் பெரும் சவாலாக உள்ளன. நமது நம்பிக்கை எதில் மையமிட்டுள்ளது? "நான் கடவுளை நம்புகிறேன்" என்று சொல்வது எளிது. ஆயினும் என் அன்றாட வாழ்வில் கடவுள் செயல்படுவதைக் காண நம் கண்கள் உண்மையில் திறந்திருக்கிறதா? என்ற கேள்வி நமக்குள் எழ வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு புது விடியல். ஒவ்வொரு வினாடியும் கடவுள் நம்மோடு பல நிகழ்வுகள் வாயிலாகத் தொடர்புகொள்கிறார். பதிலுரைப் பாடலில் உள்ளவாறு, “என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது” என்பதை ஏற்று, மனதோடு முழங்கியவாறு, அவரை நாடி வருவோம், .நம்மை நல்வழிபடுத்துவோம்... அவரது ஆற்றலிலும் குணப்படுத்துதலிலும் நம்பிக்கை கொள்வோம்.
இறைவேண்டல்:
அன்பின், இர்கத்தின் பிறப்பிடமான ஆண்டவரே, என் கண்கள் உம்மைக் காணவும், உம்மில் நான் நலம்பெற்று மகிழ்ந்திருக்கவும் அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452