சிலுவையின் நிழல் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

நம்பிக்கை அதுதான் எல்லாம்.
வாழ்வின் எந்த ஒரு நிலையிலும், தடுமாறாமல், நிலையாகக் கால்பதித்து நிற்கத் தேவைப்படுவது 'நம்பிக்கை',
நம்பிக்கை -அது மலையைப் பிளக்கும்
நம்பிக்கை - அது வலிமையைத் தரும்
நம்பிக்கை - அது வெற்றியைத் தரும்
நம்பிக்கை - அது உயர்வைத் தரும்

ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஓர் இளம் ஆசிரியைத் தன்னுடைய அலமாரியின் பூட்டைத் திறக்க, வெகுநேரம் போராடிக்கொண்டிருந்தார். அந்தப் பூட்டானது எண்களைச் சரியாக இணைத்து திறக்கும் பூட்டு. அந்த இணை எண்கள் நினைவுக்கு வராததால், எவ்வளவு முயன்றும் அவரால் திறக்க முடியவில்லை. எனவே, அவர் பள்ளியின் முதல்வரான குருவிடம் சென்று, தனக்கு உதவும்படி கேட்டார். அவரும் விரைவாக வந்து அந்தப் பூட்டைத் திறக்க முயன்றார். முதல் இரு எண்கள் சரியாக அமைந்து விட்டன. மூன்றாவது எண் சற்று தடுமாற்றத்தில் இருந்தது. முயற்சியைக் கைவிடாத அவர் தன் கண்களை மேலே உயர்த்தி, ஏதோ முணுமுணுத்தார். பிறகு மீண்டும் எண்களை இணைக்க, பூட்டும் திறந்துவிட்டது. ஆச்சரியமடைந்த அந்த ஆசிரியை, "குருவே உமது இந்த நம்பிக்கை என்னை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், மெய்மறக்கச் செய்துவிட்டது" என்றார்.

குருவோ, சிறிதும் பெருமிதம் கொள்ளாமல், "மிகப் பெரிய செயல்களைச் செய்ய, மிகப் பெரிய தடைகளைத் தாண்டிச் செல்ல சிறிதளவு நம்பிக்கை போதும்" என்றார்.
சிறிதளவு நம்பிக்கை இருந்தால் பெரியதைச் சாதிக்க முடியும். சிறிதளவு நம்பிக்கை இருந்தால் துன்ப, துயரம் தூரம் போகும். சிறிதளவு நம்பிக்கை இருந்தால் எல்லாம் கைகூடும். இந்த நம்பிக்கையின் அடையாளச் சின்னமே சிலுவை. சிலுவையின் நிழல் எப்போதுமே நம்பிக்கையைத் தாங்கி இருக்கிறது. வாருங்கள் அதன் நிழலில் இளைப்பாறுவோம். புதிய நம்பிக்கை பெறுவோம் -அதுவே நம்மை வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

"சூரிய உதயமில்லை ஆனாலும் சூரியன் இருப்பதை நம்புகிறேன். உணர முடியவில்லை - ஆனாலும் அன்பு இருப்பதை நம்புகிறேன். பார்க்க முடியவில்லை ஆனாலும் கடவுள் இருப்பதை நம்புகிறேன்".
(இரண்டாம் உலகப்போரின்போது வார்சோ கெட்டோ சுவரில் எழுதப்பட்டிருந்த வசனம்)
சிறியதோ, பெரியதோ... நம்பிக்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நம்புவோம்.... நம்பிக்கைகொள்வோம்.