நடித்து ஏமாற்றுவது நீடிக்காது என்றுணர்க!| அருள்பணி. முனைவர் செ. ரெ. வெனி இளங்குமரன் | Veritas Tamil

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (706)

தன்னை நெருங்கிய பொருளைத் தன்னுள் காட்டும் கண்ணாடி போல், ஒருவர் மனத்தில் மிகுந்துள்ள உணர்வை முகமே வெளிப்படுத்திவிடும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியையும் இக்குறள் நினைவூட்டுகிறது. இன்று அகத்தை அழகாக்கும் முயற்சியை விடவும் அழுக்காகிப் போன அகத்தை அழகானது போன்று முகத்தில் நடித்துக் காட்டும் முயற்சியே பெருகியுள்ளது.

ஒரூரில் (ஓர் ஊரில்) கவிப்பு வணிகர் (குல்லா/தொப்பி வியாபாரி)ஒருவர் இருந்தார். ஒவ்வொரு நாளும் வெயிலில் நடந்து 'சுவிப்பு வாங்கலியோ... கவிப்பு... சிவப்பு வண்ணக் கவிப்பு தான்... பச்சை வண்ணக் கவிப்பு தான்... மஞ்சள் வண்ணக் கவிப்பு தான்... வண்ணவண்ண கவிப்பு தான்...' என்று பாடிக் கொண்டும், கத்திக் கொண்டும் சென்றார்.

பலரும் வந்து எடுத்துப் பார்த்தனர்... சிலர் வாங்கினர்... சிறுவர் பலருக்கும் கவிப்பின் மீது ஆசை... ஆனால் கையில்
காசில்லை... கண்களாலே கவிப்புகளை வாங்கிக் கனவில் மிதந்தனர்.

கவிப்பு வணிகருக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த ஊரிலிருந்த குளத்துக் கரைக்கு வந்தார். பரந்து விரிந்த மரங்கள் தங்கள் நிழலைக் குளத்துக்கரைக்கு அன்பளிப்பாகத் தந்து கொண்டே இருந்தன. அந்தப் பெரிய மரத்தின் கீழ் தன் கவிப்பு மூட்டையை இறக்கினார். தன் மனைவி ஆசையாய்த் தந்திருந்த சோற்றுப் பொட்டலத்தை எடுத்தார்... விரித்தார்... மணம் மூக்குக்கு விருந்து படைத்தது.

சோற்றை வாய்க்குக் கொண்டு செல்கையில் பார்த்தார் சுற்றியும் குரங்குகள் இடக்கையில் குரங்குகளை விரட்டினார். வலக்கையில் சோற்றை ஒரு வெட்டு வெட்டினார். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு தானே...

கவிப்பு மூட்டைக்கு அருகே துண்டு விரித்து தலைக்குத் தலையணையாக கையை மடக்கி வைத்துக் கொண்டு உறங்கினார். களைப்பு... பாவம் குறட்டை விட்டுத் தூங்கினார். அரை மணி நேரத்திற்குப் பின் திடீரென கண்விழித்தார்.

கவிப்பு மூட்டையைக் காணோம். கல்லறையில் இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது போன்று, மூட்டைத் துணி கிடந்தது. தத்தளித்தார், திகைத்தார், மனத்தில் துயரம். அலையலையாய் எழுந்தது.

வம்பு செய்யும் இளைஞர்களா... குறும்புக்காரச் சிறுவர்களா... யாரெடுத்தாரோ... யாராவது நமக்கு எதிரிகளா... ஐயகோ என்ன செய்வேன்? என்று வான் நோக்கிக் கண்களை உயர்த்தி. கடவுளே... ஏன் இந்த சோதனை...' என்று சொல்வதற்கு முன்னதாகவே மரத்தின் மேலிருந்த குரங்குகளைப் பார்த்து விட்டார்.

குரங்குகளின் தலையில் கவிப்புகள்... பார்ப்பதற்கு மிகக் கவர்ச்சியாக...! சிரிப்பதா... அழுவதா... திகைத்த கவிப்பு வணிகர், அருள்கூர்ந்து கவிப்புகளைத் தந்திடுங்க...'
கெஞ்சினார், கூத்தாடினார்.. குரங்குகள் கைத்தட்டி ஆர்ப்பரித்தன. இதுதான் குரங்குச் சேட்டையோ... 'ஓ'வென கதறிக் கொண்டே தன் தலையில் இருந்த கவிப்பை அவ்வணிகர் தூக்கி எறிந்தார். என்னே வியப்பு...

பெரியவர் தொடங்கி இளையவர் வரை ஒவ்வொருவராகத் தத்தமது தலையில் இருந்த கவிப்புகளைக் குரங்குகள் தூக்கி வீசின. விரைவாக மிக விரைவாக கவிப்புகளையெல்லாம் எடுத்து மூட்டை கட்டிக் கொண்டு 'அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது' என்று சொல்லிக் கொண்டே நடந்தார்.

வீட்டில் மனைவி, பள்ளிக்குச் சென்று திரும்பி வந்திருந்த மகன் ஆகிய இருவரிடமும் வணிகர், நடந்ததை விவரித்தார். மூவரும் சிரித்துக் கொண்டனர். காலங்கள் உருண்டோடின.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள்...

வணிகரின் மகன் மிதிவண்டியில் கவிப்பு மூட்டையை எடுத்துக் கொண்டு சென்றார், கூவிகூவி விற்றார். பசி... அதே குளம் தண்ணீர் மட்டும் இல்லாமலிருந்தது. மர நிழல் கொஞ்சம் குறைவாயிருந்தது. உண்டார்... உறங்கினார்... கண்விழித்தார்... மூட்டையைக் காணவில்லை... ஆனால் பதற்றம் அடையவில்லை... மேலே பார்த்தார்... மீண்டும் குரங்குகள். தலைகளில் கவிப்பு...

குரங்குகளைப் பார்த்துக் கொண்டே தன் தலையிலிருந்த கவிப்பைத் தூக்கி வீசினார்...

என்னே வியப்பு... குரங்குகளின் தலையிலிருந்து கவிப்புகள் கீழே விழவில்லை... அதுமட்டுமல்ல... வணிகரின் அந்த ஒரு கவிப்பையும் தாவி வந்து ஒரு குரங்கு எடுத்துக் கொண்டது.

அழுதார்... கெஞ்சினார்... கையெடுத்துக் கும்பிட்டார்... தலையிலிருக்கும் கவிப்பைத் தூக்கி வீசினால் குரங்குகளும் 'தூக்கி வீசிவிடும் ' என்று அப்பா சொன்னது தப்பா?... புலம்பினார்...

அப்பொழுது அந்தத் தலைவர் குரங்கு சொன்னது. 'ஏம்பா... உனக்கு மட்டும்தான் உங்க அப்பா சொல்லித் தருவாரா...
'டேய் அந்தக் கவிப்புவணிகரிடம் நாங்க ஏமாந்துட்டோம் நீங்க ஏமாந்து கவிப்புகளை வீசி விடாதீர்கள்' என்று எங்களுக்கும் எங்க அப்பாமார்கள் சொல்லித் தந்துவிட்டுத்தான் போயிருக்காங்க டோய்...

அதிர்ந்து போனான் இளைய வணிகன்... கவிப்பு இருந்த தலையில் தன் கைகளை வைத்துக் கொண்டு துயரத்தில் மூழ்கிப் போனான்...

குரங்கு கண்ணாடி போன்று செயல்பட்டது அந்தக்காலம்... ஆனால், இப்பொழுது அப்படி அல்ல... விழிப்பு அடைந்து விட்டது... அகத்தை முகம் உள்ளவாறே வெளிப்படுத்தியது. ஆனால், இப்பொழுது அப்படி அல்ல... முகமும் நடிக்கத் தொடங்கி விட்டது. கள்ளங்கபடமற்ற அகங்கள் உருவாக வேண்டும். அவற்றை வெளிப்படுத்தும் முகங்கள் மலர வேண்டும். நடித்து ஏமாற்றும் நிலை மாற வேண்டும்.


எழுத்து, 
வெனி இளங்குமரன்.

Tamil Survey Popup Image