திறவுகோல் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

ஒவ்வொரு முயற்சி விதையிலும் ஒரு விருட்சம் உறங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த விதை உருவெடுத்து மாபெரும் மரமாக மாறவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை முழுமை பெறும். அறியாத நேரத்தில், தெரியாத சூழலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சியால்தான் வாழ்க்கை நிரப்பப்படுகிறது. முயற்சியால் எந்தச் சாதனையையும் நிகழ்த்தலாம்.
ஒரு வயதான தச்சர் தன்னுடைய வேலையிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்து, தன் மேலாளரிடம் சென்று, "எனக்கு வயதாகிவிட்டது. இன்னும் இருக்கும் என் எஞ்சிய நாள்களை என் மனைவி மற்றும் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாகவும் மன நிறைவோடும் கழிக்க விரும்புகிறேன். எனவே, வேலையிலிருந்து ஓய்வுபெற எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" என்று கேட்டார். இயக்குநர் ஒரு நல்ல வேலையாளை இழக்கின்றோமே என்னும் மன வருத்தத்தோடு, "கடைசியாக எனக்கு ஓர் உதவி செய்யுங்கள். அதாவது ஒரு வீட்டிற்கான மர வேலைகளை (கதவு, சன்னல்) மட்டும் எனக்கு செய்து தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். தச்சர் 'சரி' என்று உதட்டளவில் மட்டும் சொன்னார்.
ஆனால் உள்ளார்ந்த விருப்பத்தோடோ,சிறந்த முயற்சியோடோ அந்த வேலையைச் செய்யவில்லை. மிகவும் தரம் குறைந்த பொருள்களைக்கொண்டு கவனக் குறைவோடு அவ்வீட்டிற்கான வேலையைச் செய்தார்.வீட்டிற்கான வேலைகள் முடிந்து, எழுச்சியோடு அக்கட்டிடம் நின்றது. இயக்குநர் வந்து அந்த வீட்டைப் பார்த்துவிட்டு, அந்த வீட்டின் நுழைவாயில் சுதவின் திறவுகோலை எடுத்து, "இது உன்னுடைய வீடு, இவ்வளவு நாள் என்னிடம் பணியாற்றியமைக்கு உமக்கு நான் தரும் பரிசு" என்று சொல்லி, திறவுகோலைத் தச்சரிடம் கொடுத்தார்.
தச்சர் வாயடைத்து நின்றார். அவருக்கு அதிர்ச்சியாகவும், அதே சமயம் அவமானமாகவும் இருந்தது. "இந்த வீடு எனக்குத்தான். இந்த வீட்டில் நானும், என் குடும்பமும் மகிழ்ச்சியோடு வாழப்போகிறோம் என்று முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், என் முயற்சி அனைத்தையும் ஒன்று திரட்டி மிகவும் நேர்த்தியாகக் கட்டியிருப்பேனே " என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
நீங்களும் நானும் அந்தத் தச்சர் போன்றவர்கள். வாழ்க்கை என்னும் வீட்டைக் கட்டுகிறோம். அந்த வீடு ஒரே ஒருமுறைதான் கட்டப்படுகிறது. இதில் நமது முயற்சி உயர்ந்ததாகவும் உன்னதமாகவும் இருந்தால் மட்டுமே அதில் நிறைவாகக் குடியிருக்க முடியும். இதில் ஒரு நாள் வாழக்கூடிய வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது என்றால்கூட, அந்த ஒரு நாளை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ நமக்கு உயர்ந்த முயற்சி அவசியம். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், அனைத்துச் செயல்பாடுகளிலும் நாம் எடுக்கின்ற முயற்சியின் அளவைப் பொறுத்துதான் அதன் முடிவு அமைகிறது.
"நேற்றைய நாளின் மனநிலை, வாய்ப்பு, முயற்சி, இவற்றின் முடிவுதான் இன்றைய நாள். இன்றைய நாளின் மனநிலை, வாய்ப்பு,முயற்சி இவற்றின் முடிவுதான் நாளைய நாள்."
எனவே, நாம் புதிய விதத்தில், புதிய கோணங்களில் நகர்ந்து கொண்டே இருப்போம். ஓடுகின்ற நதி ஒரு நாளும் அழுக்காகாது. சரியான அளவில் செய்யப்பட்ட எந்த ஒரு முயற்சியும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. மூச்சிருக்கும் வரை முயற்சியைத் தொடருவோம்.
Daily Program
