இந்தியா வருமாறு திருத்தந்தை லியோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்த பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் | Veritas Tamil

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCI) தலைவர் மற்றும் திருச்சூர் மறைமாவட்ட பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத், 2025 அக்டோபர் 22 அன்று வத்திக்கானில் நடைபெற்ற பொது பார்வையாளர்கள் (General Audience) நிகழ்ச்சியில் திருத்தந்தை லியோ XIV அவர்களை சந்தித்தார்.

சந்திப்புக்குப் பிறகு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட பேராயர் தாழத் அவர்கள் “இன்று திருத்தந்தை லியோ XIV அவர்களை மீண்டும் சந்திக்கும் பெரும் வாய்ப்பும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்தது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். அவரின் தேர்விற்குப் பிறகு, 2025 மே 14 அன்று கிழக்கு கத்தோலிக்க ஆயர்களுக்கும் விசுவாசிகளுக்கும் வழங்கிய விசிட் நேரத்தில் அவரை முதன்முறையாக சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது,” என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, இந்திய திருச்சபையின் சார்பில் திருத்தந்தை லியோ XIV அவர்களை விரைவில் இந்தியா வருமாறு அருட்தந்தை தாழாத் அதிகாரப்பூர்வமாக அழைத்து, அதற்கான கடிதத்தையும் வழங்கினார். மேலும், இந்திய கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையையும், அதில் அதன் பணிகள், சவால்கள், மற்றும் நேர்மறையான பங்களிப்புகள் ஆகியவற்றை விளக்கும் SWOT ஆய்வு அறிக்கையையும் (Strengths, Weaknesses, Opportunities, Threats) திருத்தந்தைக்கு அளித்தார்.

அருட்தந்தை தாழாத்து கூறியதாவது: “இந்த விஷயத்தை நான் இந்திய அரசாங்கத்துடனும் விவாதிக்க உள்ளதாக திருத்தந்தையாரிடம் தெரிவித்தேன்.” மேலும், திருத்தந்தையின் இந்தியா வருகை குறித்து விவாதங்கள் தொடரும் வகையில், வத்திக்கான் வெளியுறவு செயலாளரான கார்டினல் பியட்ரோ பாரோலினுடன் அக்டோபர் 23 அன்று நடைபெறவுள்ள சந்திப்பில் இதுகுறித்து மேலும் ஆலோசிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திருத்தந்தை இந்த அழைப்பை மிகுந்த அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டு, இந்திய திருச்சபைக்கும் இந்திய மக்களுக்கும் தனது அப்போஸ்தல ஆசீர்வாதங்களை வழங்கினார். “திருத்தந்தை லியோ XIV மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இந்திய கத்தோலிக்க திருச்சபைக்கும் நம் தேச மக்களுக்கும் தனது ஆசீர்வாதங்களை தெரிவித்தார்,” என பேராயர் தாழத் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்திய ஆயர்கள் மாநாட்டின் அடுத்த பொது கூட்டம் 2026 பிப்ரவரியில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வுக்காக திருத்தந்தையின் சிறப்பான வாழ்த்தும் ஆசீர்வாதமும் அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.” எனவும்,“திருத்தந்தை இந்திய திருச்சபையை மிகவும் நேசிக்கிறார்; எப்போதும் நம்மை ஆசீர்வதித்து வருகிறார்,” என்று அருட்தந்தை தாழத் உறுதியாக கூறினார்.