பெண்களின் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி | Veritas Tamil

பெண்களின் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 
              “பெண்களின் தலைமைக்கு சக்தியூட்டுவோம்”


சேலம், 07 அக்டோபர் 2025: சேலம் தொன்போஸ்கோ அன்பு இல்லம் மற்றும் திருச்சி காவேரி வளர்ச்சி திட்ட அலுவலகம் இணைந்து, அயோத்தியப்பட்டினம் வட்டாரத்தில் உள்ள அதிகாரிப்பட்டி பஞ்சாயத்தில், “பெண்களின் தலைமைக்கு சக்தியூட்டுவோம்” என்ற தலைப்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்வின் நோக்கம் - பெண்களின் சமூக மற்றும் நிர்வாக பங்கேற்பை ஊக்குவித்து, அவர்களின் தலைமைத்திறனை மேம்படுத்தி, தன்னம்பிக்கையுடன் சமூக முன்னேற்றத்தில் பங்காற்றச் செய்வது ஆகும். நிகழ்ச்சியில் முனைவர். அமல ஜெயராயன் ச.ச. இயக்குனர், தொன்போஸ்கோ அன்பு இல்லம், பணி. ஆல்பர்ட் ராசா ச.ச. பொருளாளர் மற்றும் திருமதி. கௌரி, பஞ்சாயத்து அலுவலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


முனைவர் அமல ஜெயராயன் ச.ச. அவர்கள் தனது உரையில்,“பெண்கள் அடுப்படியில் மட்டும் அல்லாது, சமூதாயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும். நமது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க பெண்கள் தான் முக்கிய சக்தி. அனைவரும் இணைந்து உறுதியேடுப்போம் - எல்லோரும் எல்லாவற்றிலும் இணையானவர்கள், எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள்,”என்று வலியுறுத்தினார்.


பணி ஆல்பர்ட் ராசா ச.ச. அவர்கள், “பெண்கள் தலைவர்களாக உருவாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பெண்களின் பங்களிப்பே சமூக வளர்ச்சியின் அடித்தளம்,” என்று ஊக்கமளித்தார். திருமதி. கௌரி அவர்கள், “பெண்களின் சக்தியையும் தலைமைத்திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தொன்போஸ்கோ நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி,”என்று தெரிவித்தார்.


இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, “பெண்களின் முன்னேற்றத்திற்கு நாமும் துணை நிற்போம்,” என்ற உறுதிமொழி எடுத்து கையொப்பமிட்டனர்.
நிகழ்வை திருமதி. தேவி மற்றும் திருமதி. சரண்யா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திறம்பட ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வு, பெண்களின் சமூக பங்கேற்பு, தலைமைத் திறன், மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது.