பேராசை அழிவுக்கு காரணம்! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

ஆசையைத் தவிர்த்து வாழ்வைக் காத்திடுக!

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும் (171)

ஞாயம் இல்லாமல் பொருள்மேல் ஆசை கொண்டால், அது குடும்பத்தைக் கெடுத்துக் குற்றப் பழியையும் உண்டாக்கும்

பல்வகை விலங்கினங்கள் வாழ்ந்து வந்த காடு அது. அங்கே ஒரு பெரிய ஏரி. அதில் ஒரு முதலை... கரடுமுரடான பாறை போன்ற முதுகும், நீளமான உடம்பும், கூரிய பற்கள் கொண்ட வாயும், வலிமையான வாலும் கொண்ட அம்முதலையைப் பார்த்து அஞ்சி அலறி ஓடும் விலங்குகள் பல. அந்த ஏரி பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூட விலங்குகள் தயங்கும்.

ஏரிக் கரையில் ஒரு நாவல் மரம். கருநீலக் கனிகளைச் கருத்தாங்கியிருந்தது. அதில் பழங்களைச் சுவைத்துக் கொண்டிருந்த ஒரு குரங்கு முதலையின் கண்ணில் பட்டது. 'குரங்காரே எனக்கும் ஒரு பழம் பறித்துப் போடுங்களேன்'.

முதலையின் நீளமான வாயினில் ஒரு கனி விழுந்தது சுவைத்தது. மகிழ்ந்தது. 'என் மனைவிக்கும் நாவல் கனியை கொடுக்க விரும்புகிறேன்' என்றது முதலை.குரங்கும் நிறை பழங்களைப் பறித்துப் போட்டது. இது தொடர்ந்தது. முதலை, குரங்கு நட்பு மலர்ந்தது. முதலைக்கு ஒரு கிறுக்கு ஏற்பட்டது. 'குரங்கு சாப்பிடும் நாவல் கனியே இவ்வளவு சுவையாக உள்ளதே... நாவலைத் தின்னும் குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும்...! ஆசை வெறியானது.

'நண்பா, நீ ஒவ்வொரு நாளும் எனக்குக் கனிகள் தருகிறாய். என் மனைவி உனக்கு ஒரு விருந்து தர விரும்புகிறாள். நீ என்றைக்கு வருகிறாய்?'

முதலையின் சொல்லில் மயங்கியது குரங்கு. 'நாளை மறுநாள்' என்றது. நாளும் வந்தது. முதலையின் முதுகில் குரங்கு அமர்ந்தது. பயணத்தில் குரங்கு மகிழ்ந்தது. தண்ணீரைக் கண்டு வியந்தது. ஏரியின் நடுப் பகுதிக்கு முதலை உரையாடலைத் தொடர்ந்தது.

'குரங்காரே விருந்து உமக்கு அல்ல; எனக்குத்தான்' குரங்கு அதிர்ந்தது; வெளிக்காட்டவில்லை, முதலை தொடர்ந்தது; உன் ஈரலைச் சாப்பிட நான் வெறிகொண்டு இருக்கிறேன்.

குரங்கு குறுக்கிட்டது. 'ஐயோ நண்பா!... நான் மரத்துல இருந்தபோதே சொல்லியிருக்கக் கூடாதா... ஈரமா இருக்குதென்று ஈரலை எடுத்து மரத்தில் காய வைத்துவிட்டல்லவா வந்திருக்கிறேன். உனக்கு என் ஈரல் வேண்டும் என்றால் கரைக்குச் செல்வோம். நான் எடுத்து வருகிறேன் ' என்றது குரங்கு.

'அதுதான் நன்று' என்றது முட்டாள் முதலை. கரை வந்தது. குரங்கு துள்ளித் தாவி மரத்தில் ஏறியது. உனக்குப் பண்பும் இல்ல, அறிவும் இல்ல, ஈரலைக் காயப் போட்டுட்டு உயிரோடு இருக்க முடியுமா?'.. நையாண்டி செய்தது குரங்கு.

முதலைக்குக் கோவம். எப்படியாவது குரங்கைப் பிடிக்க வேண்டும். கரையோரத் தண்ணீரில் படுத்துக் கிடந்தது. அந்நேரத்தில் நரி தண்ணீர் குடிக்க வந்தது. முதலை நரியின் காலைப் பிடித்துக் கொண்டது.

நரி உயிர் பிழைக்கத் தந்திரம் செய்தது. 'முதலையாரே நீங்க இன்றைக்கு கவலையா இருக்கீங்களே'. உங்களுக்கு நான் உதவலாமா? என்றது நரி. முதலை நடந்ததையெல்லாம் நரியிடம் சொன்னது. 
கவலைப்படாதீங்க முதலையாரே, நானிருக்கேன். அந்தக் குரங்கை உங்கக் கையில் ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு, அதுவரைக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கை அழைத்து வருகிறேன். ஈரலைச் சுவையுங்கள்' என்றது நரி.

நரி தப்பித்தது. சொன்னபடியும் செய்தது. முயல், மான், ஆடு, முதலைக்கு எச்சில் ஊறியது. நரியை நண்பனாக்கிக் கொண்டது. மாடு, சிறுத்தைக் குட்டி, யானைக் குட்டி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை ஏமாற்றி அழைத்து வந்து தண்ணீர் குடிக்க வைத்தது. முதலை பிடித்துச் சாப்பிட்டது... இது தொடர்ந்தது... விலங்குகள் தங்கள் குட்டிகளைத் தேடி அலைந்தன.

அரிமா அரசன் (சிங்கம்) கூட்டத்தை நடத்தினார். நடந்ததைக் குரங்கு சொன்னது, உண்மை தெரிந்தது. நரி இழுத்து வரப்பட்டது. எல்லா விலங்குகளும் காரி உமிழ்ந்தன. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டம் தீட்டப்பட்டது. நரி ஒத்துக்கொண்டது.

அடுத்த நாள், நீண்ட நேரம் ஆகியும் நரி வரவில்லை. முதலைக்குப் பசி... கோவம் சீற்றம்.... அந்த நேரத்தில் நரி தட்டுத்தடுமாறி ஓடி வந்தது. தண்ணீர் அருகே வருவதற்குள் மயங்கி விழுந்தது. முதலை கோவத்தோடு திட்டியது...

'தண்ணீர்... தண்ணீர்... முதலையாரே தண்ணி கொண்டு வாங்க... குடித்துவிட்டு நடந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்' என்றது நரி.

தரையிலும் நீரிலும் வாழும் முதலையும் அதை நம்பி தண்ணீர் கொண்டு தரைக்கு வந்தது. நரி தண்ணீரைக் குடித்தது. ஊளையிட்டது. ஆங்காங்கே அருகில் பதுங்கியிருந்த விலங்குகள் பாய்ந்து வந்தன. முதலை மிரண்டது. விரைந்து தண்ணீருக்குள் ஓட முடியவில்லை. முதலையின் வாழ்வு முடிவானது.

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நன்று, இல்லையேல் துயரம் உண்டு. இருக்கும் இடம் என்பது பேராசை இன்றி, பெருநட்டமின்றி, பெருங்குற்றமின்றி வாழும் ஒரு நேர்மையான வாழ்வு. ஆசையே துன்பத்துக்குக் காரணம்; அதிலும் தகாதவற்றில் ஆசை கொள்தல் அழிவுக்கே காரணமாகிவிடும்.