நல்ல ஓநாய் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

அமெரிக்காவைச் சார்ந்த 'விர்ஜினியா பீச்' என்பவர் ஒரு மருத்துவமனைமீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.எப்படியெனில், அவர் தமது உடலின் எடையைக் குறைக்க அம்மருத்துவமனைக்குச் சென்றார். அவர்களோ முறைப்படி அவரது வயிற்றிலிருந்த சதைப்பகுதியை எடுத்து அறுவைச் சிகிச்சை செய்து தையல் போட்டார்கள்.

வயிற்றின் பெரும்பகுதி குறைக்கப்பட்டதோடு, இனி அவரால் அதிகமாகச் சாப்பிட முடியாத நிலையும் ஏற்பட்டது. இரண்டு நாள்களுக்குப்பின் பீச் தன்னுடைய படுக்கையறையிலிருந்து திருட்டுத்தனமாகச் சமையலறைக்கு வந்தார். அங்கு குளிர்சாதனைப் பெட்டியைத் திறந்து வேண்டிய மட்டும் உண்டார். வயிறு பெரிதாகி, தையல்கள் அனைத்தும் பிரிந்துவிட்டன. கோபமடைந்த அவர் வழக்குத் தொடர்ந்தார்.

"சாப்பிட்டது என் தவறல்ல... குளிர்சாதனப் பெட்டியின் கதவை அவர்கள் பூட்டவில்லை. இது மருத்துமனையின் தவறு." இதுதான் வழக்கு.

தான் சாப்பிட்டதற்கு தான் பொறுப்பல்ல. பிறர்தான் பொறுப்பு என்னும் இவரின் வாதம் இவருடைய வாழ்வுநிலையைத் தீர்மானிக்கிறது. அது தவறாக அமைந்துவிடுகிறது.

மாறாக, நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற, அனுபவிக்கின்ற நல்லவையோ, தீயவையோ அனைத்திற்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். அனைத்தும் என்று சொல்லும்போது,நாம் உண்பது. கேட்பது, காண்பது ஆகும். இவற்றில் நல்லவையும் உண்டு, வேண்டாதவையும் உண்டு.

இவை நம் தலைக்குள் நுழைந்து கண்கள் வழியாகப் பயணித்து இதயத்தை அடைகின்றன. உண்மையில் சொல்லப்போனால், நாம் அனுமதித்தால் மட்டுமே. இவை நம்முள் நுழையமுடியும். மற்றவர்கள் இதற்குப் பொறுப்பில்லை. எனவே, நல்லவற்றை அனுமதிப்போம்.

நம் உடலுக்கு நல்ல உணவை அனுமதிக்கும்போது, நம் உடல் நன்றாகத் தோற்றமளிக்கும். நம் மூளையிடம் நல்ல சுற்றலை அனுமதிக்கும்போது எதையும் தன்னம்பிக்கையோடு சந்திக்க இயலும்.

அன்பை அனுமதிக்கும்போது தனிமையில் இருக்க முடியாது. இதில் ஒரே ஒரு விஷயம் மட்டுமே முக்கியம், எப்படி எதை அனுமதிக்கிறோம் என்பதே.

முதியவர் ஒருவர் தன் பேரனிடம் இவ்வாறு சொன்னார்:

"நமக்குள்ளே ஒரு போர் நடந்துகொண்டேயிருக்கிறது. அது இரு ஓநாய்களுக்கிடையே நடக்கும் பயங்கரப் போர்.

ஒன்று - தீமை;

அதாவது கோபம், பொறாமை, பெருமை, பிடிவாதம், சுயப் பரிதாபம், தன்னலம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, பொய், தற்பெருமை, அதிகார உணர்வு மற்றும் நான் என்னும் அகங்காரம்.

மற்றொன்று - நன்மை,

மகிழ்ச்சி, அமைதி, அன்பு, நம்பிக்கை, தூய்மை, தாழ்ச்சி, இரக்கம், பரிவிரக்கம், பரந்தமனம், உண்மை.

இந்தப் போர் உனக்குள், எனக்குள் ஏன் ஒவ்வொருவருக்குள்ளும் நடந்து கொண்டேயிருக்கிறது'' என்றார்.

ஒரு நிமிடம் அமைதியாயிருந்த பேரன், தாத்தாவிடம் கேட்டான்.

"எந்த ஓநாய் ஜெயிக்கும்?"

"நீ எந்த ஓநாயின் தன்மையை உன்னுள் அனுமதிக்கிறாயோ? அதுதான் வெற்றி பெறும்" என்றார்.

நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ, அதனை நமக்குள் அனுமதிக்கின்றோம். எதனை அனுமதிக்கின்றோமோ, அதனால் நிரப்பப்படுகின்றோம். எது நம்முள் நிரம்பியிருக்கிறதோ, அதுவாகவே நாம் மாறுகிறோம். இதற்கு மற்ற யாரும் பொறுப்பல்ல. நமது அறிவை, இதயத்தை, மனதை, வாழ்க்கையை நல்லவற்றால் நிரப்புவோம்...

நல்ல ஓநாய் ஜெயிக்கட்டுமே..