தோற்காத முயற்சி | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
முயற்சி திருவினையாக்கும்.
முயற்சி செய்வதுதானே வாழ்க்கை.
தவழ முயற்சி.
நடக்க முயற்சி.
பாட,ஆட, ஓட... எல்லாம் முயற்சிதான்.
வாழ்க்கையின் தொடக்கத்தில் நம்மையறியாமல் நாம் செய்வது முயற்சி. வளர்ந்தபின் தடைபடுகிறது. காரணம் 'முயற்சியின்மை'. முயலாமல் விட்டுவிடுவது நமது மிகப் பெரிய பலவீனம்.
ஆமி ஓர் அழகான சிறுமி. ஆனால், மற்றவர்களைப் போல நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. அவள் நடக்க முடியாத தன்நிலை அறிந்து ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. நடக்க வேண்டுமென்று அவள் கால்கள் ஏங்கினாலும், ஓடவேண்டும் என்று மனம் துடித்தது. அவள் ஊரிலும், சுற்றியுள்ள இடங்களிலும் எங்கெல்லாம் தடகளப் போட்டி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் தன்னை அழைத்துச் செல்லும்படி தன் பெற்றோரை வற்புறுத்தினாள். அவர்களும் அவளை மகிழ்ச்சிப்படுத்த எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றனர்.
கால்களையே ஒவ்வொருவர் ஓடும்போதும் ஆமி அவர்கள் உற்றுநோக்குவாள். அதனை இரசித்தவாறே தானும் அவ்வாறே ஒவ்வோர் அசைவாக, ஒவ்வோர் அடியாக எடுத்துவைக்க முயலுவாள். இவ்வாறே சிறிது சிறிதாக முயற்சி செய்து, தட்டுத்தடுமாறி நடக்கத் தொடங்கினாள். அவளுடைய பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சி. அவளின் இந்த முயற்சியை, தன்னம்பிக்கையை ஊக்குவித்தார்கள்.
பள்ளியில் ஆசிரியர்களும், அவளுக்குச் சிறப்பு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தார்கள். வளர வளர அவளது முயற்சி அதிகமானது. விடா முயற்சியின் விளைவாக ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தடகளப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அப்போட்டியின் நாளைப் பெருவிழாவாகக் கருதி மகிழ்ச்சியோடும், விடாமுயற்சியோடும் இலக்கை நோக்கி ஓடினாள். குறிப்பிட்ட தூரத்தை 4 நிமிடம் 30 நொடிகளில் அடைந்து சாதனை படைத்தாள். அதோடு அவள் முயற்சியை, தொடர் பயிற்சியை விட்டுவிடவில்லை.
மீண்டும், முழுமூச்சோடு முயன்று, அடுத்த ஆண்டு அதே தூரத்தை 4 நிமிடம் 27 நொடிகளில் அடைந்து தன் சாதனையை இரட்டிப்பாக்கினாள்.
முயற்சிக்குக் கிடைத்த பரிசு சாதனை.
முயற்சி செய்யும் மனிதரே வெற்றிபெற முடிகிறது.
வளர்ச்சியடைய முடிகிறது.
முயலும்போது முன்னேற்றம் பிறக்கிறது.
வெற்றி பெற்ற மனிதருக்கு முயற்சி மட்டுமே ஏணிப்படியாக இருக்கும்.
எந்த முயற்சியும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.
முடியாது என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்கும்
மனநிலையைத் தூக்கி எறிவோம்.
மூச்சிருக்கும் வரை முயற்சியைத் தொடருவோம்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி என்பது முடியும் வரை அல்ல;
நீ நினைத்தது முடியும் வரை.