சுமையும் சுகமே | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
சுமையும் சுகமே
சிலுவை என்பது முடிவல்ல.. தோல்வியலை நம்பிக்கையே அதன் தொடக்கம் வெற்றியே அதன் பரிசு இயேசு எனும் இனிய கனியை இனிதே சுமந்த அந்த மரமே நமது நம்பிக்கை
ஆலயத்தில் சிலுவையின் முன் நின்று. ஒருவர் சொன்னாராம், "ஓ சிலுவையே! கொஞ்சம் கீழே இறங்கி வா! உன்னை நான் சுமந்து பார்க்க வேண்டும்."சிலுவை கீழே இறங்கி வந்தது. தன்னைச் சுமக்கச் சொன்னது. அவரால் இயன்றவரை முயன்று பார்த்தார். சுமக்க முடியவில்லை. தோற்றுப்போனார்.
சிலுவை சொன்னது "உன்னை நீ சுமக்காதவரை நீ எதையும் எவரையும் சுமக்கப்போவதில்லை." இதில், “உன்னை நீ" என்ற சொற்களின் பொருள் பரந்து விரிந்தது. ஆம், அதனுள் 'இன்பம் - துன்பம், வெற்றி -சிரிப்பு, கலக்கம் தோல்வி, ஏற்றம் - இறக்கம், கவலை கண்ணீர் இவையனைத்தும் அடக்கம். மகிழ்ச்சி, தெளிவு
நம்பிக்கையோடு இவையனைத்தையும் நீ சந்தித்து ஏற்றுக்கொண்டால், உன்னை நீ சுமக்கிறாய். சிலுவையின் பொருளும் இதுதான். நமது வாழ்வின் இயலாமைகளை, கசப்பு நிகழ்வுகளைச் சிலுவையின் நிழலாகப் பார்ப்பதால்தான் நிலை தடுமாறிப் போகின்றோம். நம்பிக்கை இழக்கிறோம். மாறாக, தியாகம் நிறைந்த பிறரன்புச் செயல்களால் இவற்றை மேற்கொள்ளும்போது, இனிமை பிறக்கிறது. நம்பிக்கை துளிர்விடுகிறது. சிலுவையின் பொருள்புரிகிறது. ஏனெனில் 'சிலுவை நமது நம்பிக்கை.' இந்த நம்பிக்கையால்தான் உன்னை நீ சுமக்கவும், பிறரைச் சுமக்கவும் வலிமை கிடைக்கிறது.
கனடா நாட்டின் புகழ்வாய்ந்த மருத்துவர்களில் டாக்டர் வில்லியம் ஆஸ்லர்' என்பவரும் ஒருவர். அவரின் வாழ்க்கை பற்றிய நிறை படைப்புகள் வெளிவந்த போதிலும், முதலாம் உலகப்போரின்போது நடந்த நிகழ்வு அவரை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றது. ஆம், முதலாம் உலகப்போரின்போது ஆஸ்லர் பிரிட்டன் இராணுவ மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். நாள்தோறும் தவறாமல் ஒவ்வொரு நோயாளியையும் பார்வையிட்டு சிகிச்சைச் செய்துவந்தார். இவ்வாறு இவர் தன் பணியில் ஈடுபட்டிருந்த நேரம் அவசரச் செய்தி ஒன்று வந்தது.
"பிரான்ஸ் நாட்டின் போர்க்களத்தில் அவருடைய மகள் கொல்லப்பட்டார்" என்பதே அச்செய்தி. தனக்கு அதிர்ச்சியும், மனவேதனையும் தந்த அந்தச் செய்தியால் அவர் முடங்கிவிடவில்லை தொடர்ந்து தன் பணியை நிறைவேற்ற நோயாளிகளைச் சந்திக்கச் சென்றார். வெகுநேரம் கழித்த பின்பே அவருடைய நண்பர்கள் அவரிடம் சில மாற்றங்களைக் கண்டனர். அவருடைய கலகலப்பான, மகிழ்ச்சியான, கேலியான பேச்சு மாறியிருந்தது. அதற்குப் பதில், அவர் மேலான ஒன்றைத் தேர்ந்தெடுத்திருந்தார்.
தன் பணியில் புதிய நம்பிக்கை துளிர்க்க, அன்போடும், பரிவிரக்கத்தோடும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களைக் கவனிக்கத் தொடங்கினார். இதற்குமுன் மருத்துவத்தைப் பணம் தரும் தொழிலாகப் பார்த்த அவர், தற்போது நோயாளிகளைத் தன் தனிப்பட்ட அன்பிற்குரியவர்களாகவும், தம் சொந்த மகனைப் போலவும் கவனித்துக் கொண்டார். தம் மகளின் இழப்பு தந்த துன்பம், துயரம், மனவேதனை என்னும் சிலுவைகளை நம்பிக்கையாக மாற்றி, தன் அன்பு மற்றும் பரிவிரக்கச் செயல்களால் அதனைச் சுமந்தார்.
ஆம், சிலுவையே அவரது நம்பிக்கையானது. "வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய அருள். அது நம்மைப் பொறுமையுள்ளவர்களாகவும், நம்பிக்கையுடையவர்களாகவும், கடவுளின் மனிதர்களாகவும், ஆக்குகிறது"- ஹெலன் கெல்லர்.
எனவே, நமது சிலுவைகளை நாம் சுமந்து, அன்பு மற்றும் பரிவிரக்கச் செயல்களால் பிறரையும் சுமந்து, புதிய வாழ்வின் நம்பிக்கை ஒளி பெறுவோம். ஏனெனில் சுமையும் சுகமே!
சிலுவையே நமது நம்பிக்கை!