விண்ணகமே நமது தாயகம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
தவக்காலம் இரண்டாம் வாரம்–புதன்
எரேமியா 18: 18-20
மத்தேயு 20: 17-28
விண்ணகமே நமது தாயகம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், தென்னாட்டைச் சேர்ந்த யூதேயாவின் மற்றும் எருசலேம் வாழ் மக்கள் இறைவாக்கினர் எரேமியாவை எதிர்த்து “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராக சதி செய்வோம்...” என்று புறப்படுகிறார்கள். மேலும், குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.
இச்சூழலில், எரேமியா மக்கள் அவருக்கு எதிராக, அவரைக் கொல்ல நினைத்தப்போதும், அவர்களின் மனமாற்றத்திற்காக இரங்குமாறு கடவுளை வேண்டுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி இரு பிரிவுகளாக உள்ளது.
1. இயேசு கிறிஸ்து எருசலேமுக்குச் செல்லும்போது பன்னிருவரையும் தனியாக அழைத்துச் சென்று, தனக்கு என்ன நடக்கும் என்பதை அவர்களிடம் கூறுகிறார். தம் பாடுகளை முன்னறிவிக்கிறார். தொடர்ந்து, அவர் மரண தண்டனை விதிக்கப்படுவார், பிற இனத்தவரிடம் (உரோமையரிடம்) அவர் ஒப்படைக்கப்படுவார், என்றும் கேலி செய்யப்படுவார், அடிக்கப்படுவார், சிலுவையில் அறையப்படுவார் என்றும் அறிவித்த்தோடு, நிறைவாக மூன்றாம் நாளில், அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்பதை உறுதிபட கூறுகிறார்.
2. இரண்டாவது பகுதியில், இயேசு தனது துன்பத்தை முன்னறிவித்த வேளையில், யாக்கோபு மற்றும் யோவானின் தாய் தனது மகன்களை அவருடைய அரசில் அவருடைய வலது மற்றும் இடது பக்கத்தில் உட்காரச் செய்யுமாறு விண்ணப்பம் செய்கிறார். இதைக்கேட்ட மற்ற சீடர்கள் கோபப்படுகிறார்கள். அவர்களும் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் இரு துருவ செய்தியை நாம் கேட்கிறோம். இயேசு துன்பத்தையும் தியாகத்தையும் முன்னறிவிக்கிறார். சீடர்களோ மரியாதையையும் பதவியையும் தேடுகிறார்கள். இயேசு ஓர் உதவியற்ற நிலையில் சிலுவையில் அறையப்படவில்லை. தமக்கு என்ன உதவியும் தந்தையிடமிருந்து கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். அவரது துன்பம் தந்தையின் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அவர் அதை மனமுவந்து ஏற்கிறார்.
இயேசுவின் இந்த முன்னறிவிப்பு மரணத்துடன் முடிவதில்லை. அது ஓர் எதிர்நோக்குடன் முடிகிறது: "அவர் உயிர்த்தெழுப்பப்படுவார்." துன்பம் என்பது இறுதி வார்த்தை அல்ல – என்பது இது நமக்கு வெளிப்படுத்துகிறது.
இயேசு யோவானிடமும் யாக்கோபுவிடமும், நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். ஆம் இயேசு ஏற்ற துன்பமும் துயரம் நமது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனாலும் மனித சுபாவத்தில் இயேசு அந்த பாடுகளைச் சந்தித்தார்.
முதல் வாசகத்தில், எரேமியா தனக்கு நேரவிருந்த கொலை மிரட்டலை நினைத்து ஆண்டவரிடம் அடைக்கலம் நாடி மன்றாடினார். இன்றைய வாசகங்களின் வாயிலாக, மற்றொரு விடயத்தையும் நாம் அறிந்துணர வேண்டும். இந்த இரண்டு சீடர்களையும் அவர்களின் தாயையும் போல, தூய்மை நெறியில் வளர்வது என்பது கடவுள் நம்மை எல்லா நோய்கள், சிரமங்கள், சிலுவைகள் மற்றும் பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாப்பார் என்பதாக நாம் நினைக்கலாம். இதில் தவறில்லை. ஆனால், தூய்மையில் வளர்வது என்பது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப இறுதிவரை இயேசுவைப் போல் வாழ்வதாகும். பதவியும் பேராசையும் கடவுளின் திருவுளத்திற்கு எதிராகவே வாழ நம்மை அழைத்துச் செல்லும் என்பதை நினைவில் கொள்வோம்.
யாக்கோப்பின், யோவானின் தாயார், இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டார் எனவேதான் அவர் உயிர்தெழுந்து விண்ணில் அவரது அரியணையில் வீற்றிருக்கும் போது, தம் மகன்களுக்கு அங்கே இடம் கேட்டார். இயேசு மறுக்கவில்லை. ஆனால், அது தந்தையின் ஏற்பாடு என்று முடிக்கிறார். நமக்கும் அந்தகைய எண்ணமும் விருப்பும் எப்போதும் இருக்க வேண்டும். விண்ணகமே நமது தாயகம்.
இறைவேண்டல்.
தியாகச் சுடராகிய என் ஆண்டவரே, சொகுசுக்கும் ஆடம்பரத்திற்கும் நான் இசையாதவனாக வாழ என்னை ஆசீர்வதியும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
+6012 228 5452