நற்செயலை மனஎழுச்சியோடு தொடர்ந்திடுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்

உற்றார் உறாஅ தவர்? (1245)

நெஞ்சே நாம் விரும்பினாலும் விரும்பியவரை, அவர் நம்மை வெறுத்தார் என்றெண்ணி விட்டுவிட முடியுமோ?

எழில்மிகு இயற்கை வளங்களோடு அறிவூர் திகழ்ந்தது. அங்கே ஒரு பெரிய குளம் இருந்தது. நிறைமாத தாய்மைப் பேற்றுப் பெண்ணைப் போன்று குளக்கரைக்குப் பொருத்தமாகத் தண்ணீர் நிறைந்திருந்தது. குளிப்பதற்கு ஏற்ற அடிப்படை வசதிகளோடு நான்கு துறைகள் இருந்தன. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், விலங்குகள் என முறையே அந்நான்கு இடங்களில் குளித்து வந்தனர்.

ஊரில் இருந்த அந்த யானையும் குளிக்க வருவதுண்டு. பருத்த உடம்பையும் கூர்மையான கொம்புகளையும் வலிமையான தும்பிக்கையையும் கொண்டிருந்த அந்த யானை தெருவில் நடந்து வரும் பொழுது போர்க் களத்தில் ஈடுபாட்டோடு நிமிர்ந்து நடக்கும் படைத்தலைவன் போன்று காட்சியளிக்கும். குளத்தில் குளிக்க யானை இறங்கியதும் ஆங்காங்கே நின்று குளித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் கரையில் ஓடியோ நீரில் நீந்தியோ உடனடியாக யானைக்கருகில் வந்து விடுவார்கள். அந்த யானையின் மீது சிறுவர்கள் ஏறி அமர்வதும் எழுந்து நிற்பதும், அழுக்குத் தேய்ப்பதும், விழுது போன்றிருக்கும் தும்பிக்கையைப் பிடித்துத் தொங்குவதும், கால்களுக்கிடையே நீந்திச் செல்வதும், முதுகிலிருந்து வழுக்கி விழுவதும், தலைகீழாக குதித்து வித்தை காட்டுவதும் ... இவ்வாறு பல பல.

அந்த யானைக்கும் சிறுவர்களுக்கும் இடையே பாசப் பிணைப்பு இருந்தது. இலக்கியத்தில் ஒளவைக்கு நெல்லிக்கனி தந்த அதியன் இத்தகையதொரு யானைக்குத்தான் ஒப்பிடப்படுகிறார்.

இந்தச் சிறுவர் கூட்டத்தில் சேர விரும்பாத குறும்புக்கார சிறுவர் நாலைந்து பேர் அவ்வப்போது தகாதவற்றைச் செய்வதுண்டு தங்கள் பக்கம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சில புதுமையான, அதே வேளையில் தீங்கான செயல்களைச் செய்வதுண்டு.

இப்படித்தான் அன்றைக்கு யானை உட்பட சிறுவர்கள் பெரியவர்கள் எனப் பலரும் குளித்துக் கொண்டிருந்த போது அந்த குறும்புச் சிறுவர்கள் திடீரென கத்தினார்கள் 'ஐயோ... புலி... ஐயயோ புலி...'

புலி என்று கேட்டதும் பெரியவர்கள் ஆண்களும் பெண்களும் கையில் கிடைத்த கம்புகளை எடுத்துக் கொண்டு ஓடினர். குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர். யானை அப்படியே தண்ணீரில் மூழ்கிக் கொண்டது.

மக்கள் ஓடி வந்ததைப் பார்த்து குறும்புச் சிறுவர்கள் தாங்கள் சொன்ன பொய்யால் கிடைத்த வெற்றியை எண்ணிச் சிரித்து நகையாடினர்.

பெரியவர்களுள் சிலர் சிரித்துக் கொண்டும், பலர் திட்டிக் கொண்டும் திரும்பினர். யானையும் தண்ணீருக்குள்ளிருந்து எழுந்தது.

நட்புச் சிறுவர்கள் கேட்டனர். ''யானையாரே... புலி என்றவுடன் ஏன் நீரில் மூழ்கிட்டீங்க? அச்சம் தான்' என்றது யானை,உங்களுக்கு அச்சமா நம்பவே முடியல' ஒரு சிறுவன் வியந்தான்.

பொய்யா மொழி புலவர் ஐயன் திருவள்ளுவர் எழுதிய ஊக்கமுடைமை என்னும் 60-ஆம் அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறளை யானை சுட்டிக் காட்டியது.

பரியது கூர்ங்கோட்ட தாயினும், யானை வெரூஉம் புலிதாக் குறின் (599)

உருவத்தில் பெரியதும் கூர்மையான கொம்பு உள்ளதுமான யானை தன்னைப் புலி தாக்கினால் அஞ்சும்.

இவ்வுண்மையை அறிந்து சிறுவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

ஒரு வாரம் கடந்தது. குளத்தில் குளியல் நடந்தது. குறும்புச் சிறுவர்களின் குறும்பும் தொடர்ந்தது. 'ஐயோ புலி... ஐயோ புலி...' கத்தினர். பெரியவர்கள் புலியை விரட்டியடிக்க ஓடினர். யானை தண்ணீரில் அமிழ்ந்தது.

மீண்டும் பொய் என்று அறிந்ததும் முணுமுணுத்தவாறே பெரியவர்கள் திரும்பினர். யானையும் எழுந்தது. சிறுவர்கள் சிரித்துக் கொண்டனர்.

மறுவாரத்தில் மீண்டும் குளத்தில் அதே சூழல்... குறும்புச் சிறுவர்கள் பதற்றத்தோடும் நடுக்கத்தோடும் சுத்தினர். கதறினர்.

'ஐயோ புலி... புலி வருது... எங்களைக் காப்பாத்த ஓடி

பெரியவர்கள் இந்த முறை அங்குச் செல்லவில்லை... 'இவனுங்க பொய் தான் சொல்வானுங்க...' என்று ஒருவர் ஒருவரைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், யானை புலியைப் பார்த்து விட்டது... சிறுவர்களை நோக்கிப் புலி ஓடிச் சென்றது... புலியைத் தடுத்தது யானை. புலிக்கும் யானைக்கும் கடும் போர் நடந்தது. புலி பதுங்கிப் பதுங்கிப் பாய்ந்தது. யானையின் உடம்பில் குருதி (இரத்தம்) வடிந்தது.

சிறுவர்கள் எல்லாரும் 'யானையை காப்பாற்றுங்க என்று சுத்தினர். பெரியவர்கள் கம்புகளை எடுத்துக் கொண்டு ஒடினர்... புலியை விரட்டினர். இரத்தக் கசிவோடு படுத்திருந்த யானையைத் தடவி சிறுவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். யானையின் கண்களில் அன்புக் கண்ணீர்...

புலியை விட வலிமை குறைந்ததாக இருந்தாலும் குறும்புச் சிறுவர்களைக் காப்பாற்ற பெரியவர்கள் வராத நேரத்தில் தன் உயிரையும் பணயம் வைத்துப் போராட்டம் நடத்தி பிறரைக் காப்பாற்றும் முயற்சியை யானை மேற்கொண்டது சிறுவர்களுக்கு வியப்பளித்தது. 'நம் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இருந்தாலும், அவர்கள் குறும்புகள் செய்து கொண்டிருக்கும் சிறுவர்கள் என்றாலும், பிறரது உயிர் காக்கும் செயலை நாம் விட்டு விட முடியாது தானே' என்று ஞானம் மொழிந்தது யானை. நற்செயலில் மன எழுச்சி கொண்ட யானையைச் சிறுவர்கள் எல்லாரும் சேர்ந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தனர். நற்செயலில் மன எழுச்சி கொள்ளவும் நற்செயல்களில் மட்டுமே மன எழுச்சி கொள்ளவும் உறுதியேற்றனர். நாமும் இதில் உறுதியாய் இருக்கலாம் தானே!