எப்போதும் கனிதரும் மக்களாய் இருப்போம்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

நற்செய்தி வாசகம்
மு.வா: சீஞா: 44: 1, 9-12
ப.பா: திபா: 149: 1-2, 3-4, 5-6, 9
ந.வா:மாற்: 11: 11-26
இன்றைய நற்செய்தியின் மூலம் நாம் எப்போதும் கனிதரும் மக்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி நிகழ்விலே ஆண்டவர் இயேசுவுக்கு பசி ஏற்படவே அவர் உணவு கிடைக்குமா என தேடும் சமயத்திலே அத்தி மரத்தை பார்க்கிறார். அதில் பழம் இல்லை. காரணம் அது அத்திப்பழத்திற்கான காலம் இல்லை. ஆனாலும் இயேசு அம்மரத்தை சபிக்கிறார்.
அத்திப்பழக் காலம் இல்லாத போது இயேசு அம்மரத்தை சபிப்பது தவறான செயலாக நமக்கெல்லாம் தோன்றலாம். ஆனால் இதன் மூலம் இயேசு நமக்கெல்லாம் மிக மிக முக்கிய கடமை ஒன்றை சுட்டிக்காட்டுகிறார். அதாவது கடவுளின் மக்கள் யாவரும் எப்போதும் எல்லாக்காலத்திலும் எல்லாச் சூழலிலும் கனிதரும் மக்களாக, கனி தந்து கடவுளை மாட்சிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதற்கு குறிப்பிட்டகாலமோ, நேரமோ இல்லை என்பதே அந்த முக்கியமான கடமை. அல்லது நம் அனைவருக்குமான அழைப்பு எனலாம்.
நமது வாழ்வு இறைவன் விரும்புகின்ற கனிரக்கூடிய பலன் தரக்கூடிய வாழ்வாக இல்லாத போதெல்லாம் நாம் நம் கடைமையில் தவறுகிறோம் . அவ்வாறெனில் கனிதரும் வாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது என்ன?
1)முதலாவதாக இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொள்தல்.அது இறைவேண்டலாலும் இறைவார்த்தையில் ஊன்றி இருப்பதாலும் நிகழ்கிறது.
2)இரண்டாவதாக இயேசுவின் துணைகொண்டு நம்மிடம் உள்ள எல்லா தேவையற்றவற்றையும் விரட்ட வேண்டும். அழிக்க வேண்டும்.
இந்த இரண்டையும் செய்தால் நாமும் எப்போதும் கனிதரும் வாழ்வு வாழலாம். முயல்வோமா?
இறைவேண்டல்
அன்பு இறைவா! எம்மைப் படைத்தவரே! எப்போதும் எந்நாளும் கனிதரும் மக்களாக நாங்கள் வாழ அருள்புரிவீராக. ஆமென்.
Daily Program
