கிறிஸ்துவுக்கான சாட்சியத்தால் நாம் புனிதராகலாம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

1 நவம்பர் 2024                                                                                    பொதுக்காலம் 30ஆம் வாரம் -வெள்ளி
புனிதர் அனைவர்-பெருவிழா

திருவெளி 7: 2-4, 9-14
2ம் வாசகம் 1யோவான் 3: 1-3
மத்தேயு 5: 1-12a
 
 
கிறிஸ்துவுக்கான சாட்சியத்தால் நாம் புனிதராகலாம்!
 
  
முன்னுரை.


இன்று அனைத்து புனிதர்களின் பெருவிழாவை சிறப்பிக்கிறோம். அனைத்து புனிதர்களின் பெருவிழாவை திருஅவையாகக் கொண்டாடும் இந்நாளில் புனிதர்களின் பெயர் தாங்கிய ஒவ்வொருவருக்கும்  நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார் என்று அறிகிறோம்.

‘இறப்புக்குப்பின் நிலைவாழ்வு ஒன்று உண்டு’ என்பது நமது  நம்பிக்கைகளுள் ஒன்று.   நாம் ஒவ்வொருவரும் இந்த மண்ணுலகில் எப்படி வாழ்கிறோமோ அதன் அடிப்படையில் நமக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும். இறந்த உடனேயே விண்ணக நிலை வாழ்வை  பெற்று மகிழ வேண்டும் என்பதே நமது எதிர்நோக்கு.  அதற்கு நாம் இன்றிலிருந்து செய்ய வேண்டியது என்ன? எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன இன்றைய வாசகங்கள்.

முதல் வாசகம்.

இவ்வாசகத்தில், புதுவாழ்வு பெற்ற புனிதர் கூட்டத்தை தம் காட்சியில் கண்ட திருத்தூதர் யோவான், அக்காட்சியை விவரிப்பதை கேட்கிறோம்.  விண்ணகத்தில்  ஆட்டுக்குட்டியைச் (இயேசுவை) சுற்றி ஏராளமான மக்கள் கூடியிருப்பதையும் அவர்கள்  எல்லா நாடுகளையும்  இனங்களையும் சேர்ந்த மக்கள்  கூட்டம் என்றும்  கடவுளுக்குக்கான சாட்சிய வாழ்வை  அவர்கள் வாழ்ந்ததால் கடவுளை மாட்சிபடுத்தும்  விண்ணக மக்களாக  அவர்கள் உள்ளனர் என்றும் வாசகம் விவரிக்கிறது.    

இரண்டாம் வாசகம்
 
வானகத் தந்தை தூயவராய் இருக்கிறார். எனவேதான் விண்ணக தூதரணி அவரை எப்போதும் “தூயவர்” எனப் புகழ்ந்தேத்துகிறது. நமது தந்தை எப்படியோ நாமும் அப்படியே இருக்க வேண்டும். அப்போது தான் வானகத் தந்தையின் உரிமைப் பிள்ளைகள் நாம் என்ற பேறு நமக்கு என்றும் நிலைக்கும். தொடக்க முதல் முடிவு வரை தூய்மையயே நமது வாழ்வின் எதிர்நோக்காக  இருக்க வேண்டும் என்று இவ்வாசகத்தில் அறிவுறுத்தப்படுகிறது.  

நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நம்மில் எட்டு விதமான பேறுபெற்றவர்களைப் பற்றி பேசுகின்றார். நாம் ஏழையரின் உள்ளம் கொண்டவராக, இயேசுவுக்காக துயருறுவோராக, கனிவுடையோராக........ இருக்கின்றபோது நம்மாலும் புனித நிலையை அடைய முடியும என்பது  இயேசுவின் போதனையாக இருக்கின்றது.  

சிந்தனைக்கு.

ஒருவர் புனிதர் எனப்படுபவர் யார் என்பதற்கு பின்வருமாறு ஓர் இறையடியார் பின்வரும் விடயங்களைக் கொண்டு விளக்கினாராம்.  
 “புனிதர்கள்

1)மனிதராகப் பிறந்தவர்கள்,
2) இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் திகழ்ந்தவர்கள்,
3) தங்களது சான்று வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள்,
4) என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்,
5) தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள்,              6) தங்கள் உயிரையே இறைமாட்சிக்காகக் கையளித்தவர்கள்” என்ற ஆறு விடயங்களை முன்வைத்தார். 
நாம் நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் போதனைகளின் படி வாழ்கின்றோமா? நம்மோடு வாழும் எளியோரை, இறைவனை அன்பு செய்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய நாளாக இன்றைய தினம் அமைகிறது. புனிதர்  ஆக வேண்டும் என்பது அனைவரது ஆசை என்பதை மறுப்பாரில்லை. ஆனால், அது மரத்தில் தானாகக் காய்க்கும் கனி அல்ல எட்டிப் பறித்துக்கொள்வதற்கு. அதே வேளையில் அது எட்டா கனியுமல்ல கிடைக்காது என்று சோர்ந்து போவதற்கு. 
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (குறள் 616)
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் என்பது போல, இயேசுவின் மலைப்பொழிவே நமது விண்ணக (புனித) வாழ்வுக்குப் போதுமானது. அவற்றைப் பின்பற்றி வாழ முயற்சித்தால் நாமும் புனிதர் தான். புனிதம் என்பது கடவுளின் கொடை. அதை நமது நற்பணிகளால் ஒளிரச் செய்தால் போதும் இப்புவியிலேயே நாம் புனிதராகலாம். அதற்கென்றே ‘நற்கருணை’ திருவிருந்து நமக்கு அருளப்படுகிறது. 

இறைவேண்டல்.

தூய்மைக்கெல்லாம் ஊற்றாகிய ஆண்டவரே, உமது தூய்மை வாழ்வில் நானும் பங்குகொள்ள என்னை  நாளும் காத்தருள்வீராக. ஆமென்.
 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452