தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய விழிப்புணர்வு முகாம்! | Veritas Tamil
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், சென்னையில் அக்டோபர் 28, 2025 அன்று கிறித்தவ மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த முகாமில் மாநிலம் முழுவதும் இருந்து பேராயர்கள், ஆயர்கள் மற்றும் போதகர்கள் உட்படப் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் குறித்து, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், அருட்தந்தை சொ. ஜோ அருண் சே. ச. அவர்கள், மற்றும் துணைத் தலைவர் திரு. இறையன்பன் குத்தூஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் அவர்கள், ஆணையத்தின் செயல்பாடுகள், மாவட்டம்தோறும் நடைபெற்று வரும் கலந்தாய்வுக் கூட்டங்கள், மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்புகள், உரிமைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து போதகர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு சிறுபான்மை மக்களுக்கு அளித்திருக்கும் ஏராளமான நலத்திட்டங்கள் குறித்து அறிவித்ததுடன், தமிழ்நாட்டில் உள்ள மத மற்றும் மொழிவாரியான சிறுபான்மை மக்களுக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் சிறப்புரைக்குப் பின்னர், போதகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஆணையத் தலைவர் அவர்கள் விளக்கமளித்தார். மேலும், போதகர்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகளையும் அவர் பெற்றுக்கொண்டார். இதில் முக்கியமாக, உபதேசியார் நல வாரியம் அமைத்துள்ளதைப் போலவே, போதகர் நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பெற்றுக்கொண்ட ஆணையத் தலைவர் அவர்கள், இது ஆணையத்தின் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இந்த விழிப்புணர்வு முகாம் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.