மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க திருப்பீடம் அறைகூவல் ! | Veritas Tamil

"கடந்த 2024-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் மட்டும், கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட 2,200-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன " என்று சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் பலஸ்த்ரேரோ.

"உலகிலேயே கிறிஸ்தவர்கள்தான் அதிக அளவில் துன்புறுத்தப்படும் மதச் சமூகமாக உள்ளனர் என்றும், வன்முறை, பாகுபாடு மற்றும் அடக்குமுறையினால் ஏறத்தாழ 40 கோடி கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் எத்தோரே பலஸ்த்ரேரோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

"மார்ச் 3, செவ்வாயன்று, இடம் பெற்ற 'துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுடன் ஒன்றிணைவோம்' என்ற நிகழ்வில் உரையாற்றிய பேராயர் பலஸ்த்ரேரோ அவர்கள், கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 5,000 கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர் என்றும், இது ஒரு நாளைக்குச் சராசரியாக 13 பேர் என்ற அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், தாக்குதல்களைத் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும் அரசுகளின் அடிப்படைப் பொறுப்பு" என்று வலியுறுத்தியுள்ளார் பேராயர் பலஸ்த்ரேரோ.

"துன்புறுத்தல் என்பது வன்முறையாக மட்டும் இருப்பதில்லை, மாறாக அது நுட்பமான முறைகளிலும் நடக்கிறது" என்று குறிப்பிட்டுள்ள பேராயர் பலஸ்த்ரேரோ அவர்கள், "இதில் சமூகப் புறக்கணிப்பு, சட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் பாகுபாடு ஆகியவை அடங்கும்" என்றும், "மேற்கத்திய நாடுகளில்கூட இத்தகைய நிலைகள் காணப்படுகின்றன" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

"கடந்த 2024-ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் மட்டும், கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட 2,200-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன " என்று சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் பலஸ்த்ரேரோ.

"கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் சிலுவையின் மீதான தாக்குதல்களே" என்று கூறியுள்ள பேராயர் பலஸ்த்ரேரோ அவர்கள், இத்தகைய துன்புறுத்தல்கள் ஆன்மிக மற்றும் சமூகப் பிணைப்புகள் இரண்டையுமே சீர்குலைக்கின்றன என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

"மத சுதந்திரத்தை ஒரு அடிப்படை மனித உரிமையாக நாடுகள் நிலைநிறுத்த வேண்டும்" என்றும், "அதை மீறுபவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையை ஒழிக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் பேராயர் பலஸ்த்ரேரோ

நன்றி வத்திக்கான் செய்தி