ஈரான் பள்ளித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி ! | Veritas Tamil

"ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பதற்றத்தை உடனடியாகக் குறைத்து, பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்துலகச் சட்டத்தின் கீழ் உள்ள தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்" : Save the Children குழந்தைகள் நல அமைப்பு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மத்திய கிழக்கில் வன்முறை மிகக்கடுமையாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மிகவும் குறிப்பாக குழந்தைகளின் உயிர் மற்றும் நல்வாழ்விற்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

"வன்முறையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்" என்றும், "பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அந்த அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அவ்வமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி இங்கர் ஆஷிங் அவர்கள், "குழந்தைகள் ஒருபோதும் போரில் சிக்கிக்கொள்ளக் கூடாது. மேலும் அவர்களின் வீடுகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் போர்க்களங்களாக மாறக்கூடாது என்று போர்களுக்கும் சில விதிகள் உண்டு" என்று குறிப்பிட்டுள்ளதுடன், "குழந்தைகளும் பள்ளிகளும் இந்த மோதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் மற்றும் பிற பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை கண்டனம் செய்துள்ள ஆஷிங் அவர்கள், "மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்துவது பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பேரிழப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்" என்று எச்சரித்துள்ளார்.

மேலும்,"வன்முறை தீவிரமடையும் போது, இடப்பெயர்வு, கல்வி பாதிப்பு, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு சேவைகளை இழத்தல், காயம் அல்லது மரணம் எனப் பெரும்பாலும் குழந்தைகளே முதலில் பாதிக்கப்படுகிறார்கள்" என்று தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

"ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பதற்றத்தை உடனடியாகக் குறைத்து, பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்துலகச் சட்டத்தின் கீழ் உள்ள தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் " என்று அழைப்பு விடுத்துள்ளது அவ்வமைப்பு.

Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு உலகெங்கிலும் ஏறத்தாழ 110 நாடுகளில் செயல்படுகிறது, ஆனால் ஈரானில் அதன் செயல்பாடுகள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வத்திக்கான் செய்தி 

Tamil Survey Popup Image