கல்வி ஓர் அடிப்படை உரிமை காரித்தாஸ் அமைப்பின் செய்தி.
இலங்கையின் தேயிலைத் தோட்டப் பணியாளர் சமூகத்தின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அவர்களுக்கான கல்வி வசதிகள் இன்மை, மற்றும், சமூக கலாச்சார பிரச்சனைகளை முன்வைக்கும் இரண்டு அறிக்கைகளை இலங்கை காரித்தாஸ் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது.
தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உரிமை என்றத் தலைப்பில், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் மற்றும் இலங்கையில் தேயிலைத் தோட்டப் பணியாளர் சமூகத்தின் கலாச்சாரம், தனித்தன்மை ஆகியவை பற்றிய ஆய்வுகள் கல்விப் பணிகளை விட மேலானவை என்றும், அவை பரிந்து பேசுதல், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான கருவிகள் என்றும் தெரிவித்துள்ளது காரித்தாஸ் அமைப்பு.
தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் தாங்கும் கடுமையான யதார்த்தங்களை இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும், இந்த சமூகத்தின் எதிர்காலம், கொள்கை மாற்றங்களில் மட்டுமல்லாது பரிவின் அடிப்படையிலான செயலிலும் உள்ளது என்றும் இலங்கைக்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Brian Udaigwe உரைத்துள்ளார்.
இலங்கையின் தேயிலைத் தோட்டத் துறையில் வறுமையின் மூல காரணங்களாக இருக்கும் கல்வி, சமத்துவம், நீதியின் தேவை போன்ற பிற பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருப்பீடப் பிரதிநிதி.குருநாகல் ஆயர் பேராயர் Harold Anthony Perera, கண்டி ஆயர் Valence Mendis, உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, வன வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இயக்குனர் W.A.L. விக்ரமராச்சி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வறிக்கைகள் அக்டோபர் 3ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டன.
தேயிலைத் தோட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வியை நகரங்களில் உள்ள தங்கள் நண்பர்களை விட குறைவாகவே பெற்றுள்ளனர் என்றும், வறுமை, பற்றாக்குறை மற்றும் வசதியின்மை காரணமாக குழந்தைகள் கல்வியைத் தொடர இயலவில்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று பேராயர் கூறியுள்ளார்.