பேச்சுவார்த்தை நடத்துவது பலவீனம் அல்ல துணிவின் அடையாளம் - கர்தினால் பியத்ரோ பரோலின் உரை
நவம்பர் 18 திங்கள்கிழமை உக்ரைனில் போர் தொடங்கி 1000- ஆவது நாளை முன்னிட்டு அங்குள்ள சூழல், மக்களின் நிலைமை, வழங்கப்பட்டு வரும் உதவிகள் பற்றிய தனது கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலின்போது எடுத்துரைத்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.மனித வாழ்க்கையின் புனிதத்தை மதிக்கும் அனைவருக்கும் பேச்சுவார்த்தை என்பது எப்போதும் விரும்பத்தக்கதாக சாத்தியமானதாக இருக்கின்றது என்றும், பேச்சுவார்த்தை நடத்துவது பலவீனத்தின் அடையாளம் அல்ல, மாறாக துணிவின் அடையாளம் என்று எடுத்துரைத்துள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின்.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்புக்கள், அழிவு போன்றவற்றை எடுத்துரைக்கும் செய்திகள் நம்மை வந்தடையும்போது அதனை பழக்கமான ஒன்றாகக் கருதி அலட்சியமாக இருக்க முடியாது என்றும், போரினால் உக்ரைன் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களது கல்வி, பணி, குடும்பம் ஆகியவற்றை இழந்துள்ளனர், துன்புறுத்தலுக்கு உள்ளான மற்றும் மறைசாட்சிகளின் நாடாக உக்ரைன் மாறியுள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் பரோலின்.
வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் தாங்கிய வாகனங்களினால் அன்புக்குரியவர்களை இழந்தும், வீடுகளை இழந்தும் ஆபத்தான் நிலையில் மக்கள் வாழ்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், துன்ப நாடகத்தை ஒவ்வொரு நாளும் கண்முன்னே கண்டு அதிலேயே வாழும் நிலையில் மக்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
முதலாவதாக போரினால் துன்புறும் உக்ரைன் மக்களுக்கு உதவ கிறிஸ்தவர்களாகிய நாம் செபிக்க வேண்டும் என்றும், போரில் ஈடுபடுபவர்களின் இதயங்கள் மாற வேண்டும் என இறைவனிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இரண்டாவதாக போர் மற்றும் குளிரினால் துன்புறுவோர்களுடன் நமது ஒன்றிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூன்றாவதாக ஒரே சமூகமாக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைதிக்கான அழைப்பிற்குக் குரல் எழுப்பவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அடிக்கடி கூறுவது போல அறிவற்ற போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள பரோலின் அவர்கள், ஒரே மனித குடும்பமாக ஒன்றிணைந்து நாம் அனைவரும் நிறைய செயல்கள் ஆற்ற முடியும் என்றும் கர்தினால் பரோலின் எடுத்துரைத்துள்ளார்.
போர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைத் திருடுகிறது, பிளவுகளை உருவாக்குகிறது, வெறுப்பைத் தூண்டுகிறது என்றும், தொலைநோக்குப் பார்வையும், துணிவுள்ள தாழ்ச்சியான செயல்பாடுகளும், மக்களின் நலனைப் பற்றி சிந்திக்கும் திறன் கொண்ட அரசியல்வாதிகளின் தேவையும் அதிகமாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பரோலின்.