மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பசுமைப் பயணம் | Veritas Tamil
கடந்த நவம்பர் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இளைஞர்களின் எழுச்சிப் பயணம் பதினோராவது நாளாக நேற்று காலை கடலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பயணித்தது.முதல் நிகழ்வு கடலூரில் உள்ள தூய அன்னம்மாள் சிபிஎஸ்சி பள்ளியில் தொடங்கியது. இந்நிகழ்வில் லூர்து மறைமாகாணத்தின் மாகாண தலைமை அருட்சகோதரி டாரியா மேரி ஜோஸ்பின் செல்வராணி, அருள்பணி. சுவாமிநாதன், செயலாளர், செயின்ட் ஜோசப் கல்லூரி, கடலூர், திரு. M. மாருதவாணன், டாக்டர் M. தீபன், திரு. N. ஜனார்தனன், திரு. G. ஐயப்பன், MLA, திரு. S. ஜெயக்குமார், IPS., காவல்துறை கண்காணிப்பாளர், கடலூர். ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்வாக பசுமைப் பயண வீரர்கள் இயற்கையைக் காப்போம் வாழ்வுரிமை மீட்போம் என்ற வீதி நாடகத்தை அரங்கேற்றி இயற்கையை காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மருதுவாணன் மற்றும் ஜனார்த்தனன் அவர்கள் இயற்கையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மரங்கள் இல்லையேல் சுவாசிக்க காற்று இல்லை, உயிர் வாழ்வதற்கு எதுவுமே இருக்காது என்று கூறினார்கள். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் இயற்கை சார்ந்த சிறிய விழிப்புணர்வு நாடகமும் அதனைத் தொடர்ந்து நடனமும் ஆடினார்கள். பிறகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தனது சிறப்பு உரையில் பசுமைப் பயணத்தைப் பாராட்டி இளைஞர்கள் செய்ய வேண்டிய பணியில் மிக முக்கியமான பணி இயற்கையைக் காக்க வேண்டியது அதனை இந்த மிதிவண்டி பேரணி மூலம் செய்வது மனதிற்கு மிக நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறி அவர்களை சிறப்பு செய்தார்.
அதைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது. கிட்டத்தட்ட 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி வளாகத்தில் அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோடியசைத்து மிதிவண்டிப் பேரணியை தொடங்கி வைத்தார்கள். அங்கிருந்து பள்ளி மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பசுமைப் பயண வீரர்களுடன் வந்தனர். பசுமைப் பயண வீரர்கள் மதியம் ஒரு மணி அளவில் ஆண்டனிஸ் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தனர்.
அங்கு பசுமை பயண வீரர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை அடுத்து அருட்தந்தை சாரதி அவர்கள் எதற்காக இந்தப் பசுமைப் பயணம் என்பதை குறித்து பார்வையாளர்களிடம் எடுத்துரைத்தார். அதன் பின் பசுமைப் பயண வீரர்கள் 'இயற்கையைக் காப்போம் வாழ்வுரிமை மீட்போம்' என்ற வீதி நாடகத்தை அரங்கேற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர். அதன் பிறகு அருட் சகோதரிகள் இயற்கை குறித்த விழிப்புணர் பாடலை பாடினார்கள். பிறகு பள்ளி மாணவர்கள் இயற்கை குறித்த பாடலுக்கு நடனம் ஆடினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் டாக்டர் பூரணி அவர்கள் இயற்கையில்லாமல் வாழ்வு இல்லை இயற்கை காக்க தவறிவிட்டால் எதிர்கால குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று தனது உரையில் கூறினார்.
தொடர்ந்து மதிய உணவிற்கு பிறகு பசுமை பயண வீரர்கள் தங்களது பயணத்தை விழுப்புரத்தை நோக்கி தொடங்கினர். மாலை ஆறு மணி அளவில் விழுப்புரத்தில் உள்ள கோணாங்கி பாளையத்தில் உள்ள கிருபாலையா தொண்டு நிறுவனத்தில் வந்தடைந்தனர். அங்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள் அங்கு 100 மரங்கள் நடப்பட்டன.