உண்மையான கீழ்ப்படிதலில் கடவுளின் வாக்கு நிறைவேறும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
தவக்காலம் 5ஆம் வாரம் –புதன்
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு-பெருவிழா
எசாயா 7: 10-14; 8: 10b
எபிரேயர் 10: 4-10
லூக்கா 1: 26-38
உண்மையான கீழ்ப்படிதலில் கடவுளின் வாக்கு நிறைவேறும்!
முதல் வாசகம.
இந்தப் பகுதி, அச்சமும் அரசியல் நெருக்கடியும் நிலவிய ஒரு காலகட்டத்தில் நடைபெறுகிறது. யூதாவின் அரசனான ஆகாசு, எதிரி நாடுகளால் அச்சுறுத்தப்பட்டு, கடவுளை நம்புவதற்குப் பதிலாக அந்நிய நாடுகளின் கூட்டணியின் உதவியை நாடுகிறான். இது அரசன் ஆகாசுக்கு ஏற்பட்ட சோதனை என்றும் கூறலாம்.
கடவுளோ, இறைவாக்கினர் ஏசாயா மூலமாக, அரசன் ஆகாசுவின் நம்பிக்கையைத் திடப்படுத்த ஓர் அடையாளத்தைக் கேட்கும்படி அரசனுக்கு அறிவுறுத்துகினார். ஆனால் ஆகாசு, தான் “ஆண்டவரை சோதிக்க விரும்பவில்லை” என்று கூறி மறுத்துவிடுகிறான். இதற்கு அடிப்படை காரணம் அவன் ஆண்டவர் மேல் கொண்ட நம்பிக்கையின்மையாகும். ஆம், அவன் கடவுளின் உதவியில் நம்பிக்கைவைக்கவில்லை.
ஆகாசு, மறுத்தபோதிலும் ஆண்டவர், ஓர் அடையாளத்தைக் காட்டுகிறார்: “ஒரு கன்னி கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்” என்று கூறுகிறார்.
இரண்டாம் வாசகம்.
இயேசு ஏன் வந்தார் என்பதையும், அவருடைய உயிர்த் தியாகப் பலி பழைய ஏற்பாட்டில் உள்ள பழைய பலிகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதையும் பற்றிய ஒரு ஈடுயிணையற்ற போதனையாக விளங்குகிறது என்று கூறலாம்.
பழைய முறை (பலிகளும் காணிக்கைகளும்) ஒதுக்கி வைக்கப்படுவதோடு, இயேசு தமது கீழ்ப்படிதலின் மூலம் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியதை இவ்வாசகப் பகுதி விவரிக்கிறது.
நற்செய்தி.
இந்த வசனங்கள், கபிரியேல் என்னும் வானதூதர், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் முக்கியமான நிகழ்வை விவரிக்கின்றன. இது மீட்பின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும்.
கடவுள் கபிரியேல் தூதரை நாசரேத்து ஊரில் வாழ்ந்த கன்னி மரியாவிடம் அனுப்புகிறார். அவள் தாவீதின் வழிமரபைச் சேர்ந்த யோசேப்புடன் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருநதாள். தூதர் மரியாவை “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்” வாழ்த்துரைத்த வேளை, மரியாவோ, இந்த வாழ்த்தின் பொருள் புரியாமல் கலங்கினாள். நிறைவாக, தூதர் மரியாவிடம் :
• அஞ்ச வேண்டாம்,
• நீ கர்ப்பம் தரித்து ஒரு மகனைப் பெறுவாய்
• அவருக்கு “இயேசு” என்று பெயர் வைப்பாய் என்று கடவுளின் செய்தியை அறிவித்தார்.
தொடர்ந்து, பிறக்கவுள்ள குழந்தை இயேசுவைப் பற்றிய நான்று விடயங்ளை மரியாவுக்குத் தெரியப்படுத்துகிறார். ஆம், இயேசு,
• உயர்ந்தவரின் மகன் என அழைக்கப்படுவார்.
• தாவீதின் அரியணையைப் பெறுவார்.
• அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
• அவரது ஆட்சி என்றும் முடிவற்றது.
அத்தருணத்தில், மரியாவோ “நான் கன்னி; இது எப்படி நடக்கும்?” என்று அச்செய்தியைப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்டார்.
தூதரின விளக்கம் பின்வருமறு அமைகிறது.
• தூய ஆவி உம்மேல் இறங்குவார்
• உயர்ந்தவரின் சக்தி உம்மை நிழலிடும்
• பிறக்கும் குழந்தை கடவுளின் மகன் ஆவார்.
மேலும், எலிசபெத்தின் அதிசய கர்ப்பத்தை மரியாவுக்கு எடுத்துக்காட்டுகிறார்.
சிந்தனைக்கு.
இன்று, கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு-பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். கடவுளின் மீட்பின் திட்டம், அமைதியான, தாழ்மையான வழியில் மனித வரலாற்றில் நுழையும் தருணமாக இது அமைகிறது. மரியாவுக்கு கடவுளின் தூதர் கபிரியேல் அளித்த செய்தி எளிமையானது, ஆனால், மகத்தானது. எண்ணற்ற பெண்கள் மத்தியில் மரியா மட்டுமே மீட்பரின் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதில், மரியாவின் பதில் இன்றைய செய்தியின் மையமாக உள்ளது எனலாம்.
ஆம், “உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்” என்பதாகும். அவர் எல்லாவற்றையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை, ஆயினும் அவர் ழுமையாக நம்பினாள். அவருடைய “ஆகட்டும்” என்ற பதில், உலகில் கடவுள் தம் மீட்புத் திட்டத்தை செயல்படுவதற்கான கதவைத் திறக்கிறது.
திருமுழுக்கின் வாயிலாக நாமும் கடவுளின மீட்புத்திட்டத்தில் பங்கெடுக்க வேண்டியவர்கள். ஆனால், கடவுளின் திருவுளப்படி வாழ தயங்குகிறோம். நமக்கு எந்தவித ஐயப்பாடு, குழப்பம் அற்ற தெள்ளத்தெளிவான கடவுளின் வெளிப்பாட்டை எதிர்ப்பார்க்கிறோம். முதல் வாசகத்தில் அரசன் ஆகாசு ஆண்டவரின் வாக்குறுதியை ஏற்க மறுக்கிறார். ஆனால், ஏசாயா இறைவாகினரின் கூற்று மரியாவில் நிறைவேறியது.
அன்னை மரியாவைப் போன்று, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும் அன்பு பிள்ளைகளாக நாம் வாழ்ந்து மரிக்க திடமுபெற வேண்டும். அவருடைய திருவுளம் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போதும், நாம் தயக்கத்தை ஒதுக்கிவிட்டு, கடவுளின் வல்லமையிலும் பராமரிப்பிலும் முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது இன்றைய முக்கிய படிப்பினைகளில் ஒன்றாக உள்ளது என்பதை மனதில் நிறுத்துவோம்.
நம்மையும் இறைவன் தினமும் அழைக்கிறார்—சிறிய செயல்களில், கடமைகளில், சவால்களில். சில நேரங்களில் நாம் பயப்படலாம், சந்தேகப்படலாம். ஆனால் மரியாவைப் போல, நாம் நம்பிக்கையுடன் “ஆகட்டும்” என்று சொன்னால், இறைவன் நம்மூலமும் அற்புதங்களைச் செய்வார்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, திறந்த மனதுடனும், நம்பிக்கையுடனும், உமது திருவுளத்திற்கும் அழைப்புக்கும் 'ஆகட்டும்' என்று சொல்ல அன்னை மரியா கொண்ட ஓர் இதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452