உண்மையின் மீதான பிளவு அழிவுக்கு வழி! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
21 மார்ச் 2026
தவக்காலம் 4ஆம் வாரம் – சனி
எரேமியா 11: 18-20
யோவான் 7: 40-53
உண்மையின் மீதான பிளவு அழிவுக்கு வழி!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தன் வாழ்க்கையில் சந்தித்த ஒரு ஆழமான அனுபவத்தை பகிர்கிறார். இது கடவுளின் வெளிப்பாடு, மனிதர்களின் துரோகம், மற்றும் நீதிக்கான வேண்டுதல் ஆகியவற்றைப் பற்றியது.
எரேமியா ‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன்’ என்று தொடங்குகிறார். ஆம், கடவுள் எதிரிகளின் சதித்திட்டத்தை எரேமியாவுக்கு வெளிப்படுத்துகிறார். மனிதர்கள் நிகழவிருக்கும் சதியை முற்றலும் அறியாமல் இருக்கக்கூடும். ஆனால் கடவுள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்.
இப்பகுதியில், எரேமியா தன்னை “கொல்லப்படுவதற்கு அழைத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக கருதி பேசுகிறார். மக்களோ, “அவரை அழித்துவிடுவோம்; அவர் பெயரே மறைந்து போகட்டும்” என்று முழங்குகிறார்கள். எரேமியாவோ, கடவுளை நோக்கி, ‘படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்’ என்று மன்றாடுகிறார்.
நற்செய்தி.
இந்த நற்செய்தி பகுதி, அன்று எருசலேம் பகுதியில் இயேசுவைப் பற்றிய மக்களின் கருத்து வேறுபாடுகளையும், அவரை ஏற்றுக்கொள்ளாத மனநிலையையும் விவரிக்கிறது.
இயேசுவின் வார்த்தைகளை கேட்ட மக்கள் பல்வேறு கருத்துகளை மனதில் கொண்டனர்.
• சிலர்: “இவர் உண்மையிலேயே ஓர் இறைவாக்கினர்தான்” என்று கருத்துரைத்தனர்.
• வேறு சிலர் இவர்தான் மெசியா என்றனர்.
• சிலர், இயேசு கலிலேயாவில் இருந்த நாசரேத்தில் வளர்ந்ததால், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்று மறுப்புத் தெரிவித்தனர். இவ்வாறு, இயேசுவைப் பற்றிய பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களும் குழப்பமும் மக்களிடையே ஏற்பட்டது.
இந்நிலையில், குருக்களும் பரிசேயரும் இயேசுவை பிடிக்க காவலர்களை அனுப்பினர். ஆனால் அவர்கள் திரும்பி வந்து:“இவரைப் போல பேசினவர் ஒருவரும் இல்லை” என்று உண்மையை ஒப்புக்கொண்டார்கள். . ஆனால் பரிசேயர்:
• “நீங்களும் ஏமாந்துவிட்டீர்களா?”
• “அறிஞர்களில் யாராவது அவரை நம்பியுள்ளார்களா?” என்று கேள்வி கேட்க அகந்தை அங்கே அவர்களது கண்களைக் குருடாக்கியது. அவர்கள் உண்மையை அறியாமல், தங்கள் பதவி மற்றும் பெருமையைப் தற்காக்க முயன்றனர்.
இத்தருணத்தில், முன்பு இயேசுவை இரவில் சந்தித்த நிக்கோதேமு (யோவான் 3:1,3) என்பவர் “ஒருவரை விசாரிக்காமல் தீர்ப்பு அளிக்கலாமா?” என்று கேட்கிறார். அவர் முழுமையாக வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், நீதியைக் காக்க முயன்றார். ஆனால், அங்கே அவர் பேச்சும் எடுபடவில்லை.
சிந்தனைக்கு.
இன்றும் உலகெங்கும் இயேசுவைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் நிலவத்தான் செய்கிறது.
1. அகந்தை உண்மையை மறைக்கிறது
2. நிக்கோதேமு போல உண்மைக்காக நின்றிட வேண்டும்.
3. இயேசுவை பற்றி கேட்பது மட்டும் போதாது — உண்மையாக அவரை ஏற்றுக்கொள்வதே முக்கியம்.
நற்செய்தியில், பல மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும், தலைமைக் குருக்களும் இயேசுவுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர். ஓய்வுநாளில் வல்ல செயல்கள் செய்ததற்காகவும், தெய்வீக அதிகாரத்துடன் பேசியதற்காகவும், கடவுளுக்கு நிகரானவர் என்று உரிமை கோரியதற்காகவும் அவர்கள் அவரைக் கண்டித்தார்கள்.
இயேசு அந்த கூடார பெருவிழாவில் கலந்துகொள்வாரா என்பது குறித்துப் பல யூகங்கள் நிலவின, அவரும் ஆரம்பத்தில் இரகசியமாகக் கலந்துகொண்டார் (யோவான் 7:10). பெருவிழாவின் நடுப்பகுதியில், அவர் ஆலயத்தில் வெளிப்படையாகத் தோன்றி, தைரியமாகப் போதித்தார். இறுதி நாளில், இறைவாக்குகளை நிறைவேற்றும் விதமாக, கடவுளின் மக்களின் ஆவிக்குரிய தாகத்தைத் தணிக்கும் உயிருள்ள ஊற்று தாமே என்று அவர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார். இது ஒரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, பிளவுபட்ட எதிர்வினைகளுக்கு வழிவகுத்தது.
இந்த கூடாரப் திருவிழாவானது, இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்படவிருந்த பாஸ்கா பெருவிழாவுக்கு ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாக அறிகிறோம்.
குழப்பவாதிகள் அன்று மட்டுமல்ல இன்றும் உள்ளனர். இயேசுவுக்கும் அவரது, போதனைக்கும், அவரது இயல்புக்கும் எதிரான குழப்பவாதிகள் தன்னலவாதிகள். இயேசு சமூகத்தில் சமத்துவம் என்ற சீர்த்திருத்த கொள்கையை கொணர்ந்தார். இதை ஏற்காதவர்கள் இன்றும் வேடத்தாரிகளாகத் திருஅவையில் இருக்கிறார். ஏழை, எளியவர், படித்தவர் படிக்காதவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் போன்ற பாகுபாடுகள் இயேசுவின் மந்தையில் இருக்க இயலாது. ஆனாலும், இந்தகைய வேறுபாடுகளைப் பாராட்டி எங்கள் இயேசு, உங்கள் இயேசு என்று பிரித்து இறைமக்களைக் கூறுபோடுவோர் அறைய மறைநூல் அறிஞர், பரிசேயர், தலைமைகுருக்கள் ஆகியோருக்கு நிகரானவர்கள் என்றால் மிகையாகாது. இயேசுவின் வார்த்தையில் கூறினால் இவர்களுக்கு ‘ஐயோ கேடு’.
‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!’ (‘யோவான் 17:21) எனும் இயேசுவின் கனவுக்கு எதிராகச் செயல்படுவோருக்குத் தண்டனைத் தீர்ப்பு உண்டு என்றால் மிகையாகாது.
இயேசு ஒருவரே உயிருள்ள, வாழ்வளிக்கும் நீர் ஊற்று. அவர் இறைமகன், மெசியா என்று தைரியமாக அறிக்கையிடுவோரில் நாம் முன்வரிசையில் நிற்க வேண்டும். இதுவே இன்றைய சீடத்துத்தின் ஆணிவேர். இறைவாக்கினர் எரேமியாவைப் போன்று கடவுளின பக்கம் நின்று நம்பிக்கை வாழ்வைத் தற்காக்க வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை நம்பி, என் வாழ்வில் உமது தொடர்ச்சியான உடனிருப்பைச் சார்ந்திருக்க எனக்குத் மனத் துணிவையும் ஞானத்தையும் தருவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
+6 0122285452