இரக்கம் பலியை விட மேலானது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 15ஆம் வாரம் – வெள்ளி
எசாயா 38: 1-6, 21-22, 7-8
மத்தேயு 12: 1-8
இரக்கம் பலியை விட மேலானது!
முதல் வாசகம்.
இந்த வாசகப்பகுதியில், எசேக்கியா அரசன் கடுமையான நோயால்
மரணத்தின் விளிம்பில் இருப்பதைப் பார்க்கிறோம். இறைவாக்கினர்
எசாயா, "உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்து; நீ உயிர் பிழைக்க
மாட்டாய்" என்று ஆண்டவரின் செய்தியை அறிவிக்கிறார். இதைக் கேட்ட
எசேக்கியா, இறைவனை நோக்கி மனமுருகி கண்ணீருடன்
மன்றாடுகிறார். தனது வாழ்நாளெல்லாம் உண்மையுடனும்
நேர்மையுடனும் இறைவனுக்கு முன்பாக நடந்ததைக் நினைவுகூர்ந்து
கடவுளின் இரக்கத்திற்கு மன்றாடுகிறார்.
அவரது நேர்மையான இறைவேண்டலைக் கேட்ட ஆண்டவர்,
எசாயாவை மீண்டும் அனுப்பி, "உன் மன்றாட்டைக் கேட்டேன்; உன்
கண்ணீரைக் கண்டேன். உன் ஆயுளில் மேலும் பதினைந்து
ஆண்டுகளைச் சேர்ப்பேன்; அசீரிய மன்னனிடமிருந்து உன்னையும் இந்த
நகரத்தையும் காப்பாற்றுவேன்" என்று வாக்களிக்கிறார்.
இந்த வாக்குறுதியின் அடையாளமாக, சூரியக் கடிகாரத்தின் நிழல் பத்து
படிகள் பின்னோக்கிச் செல்வது என்ற அற்புதத்தை ஆண்டவர்
நிகழ்த்துகிறார். மேலும், எசேக்கியாவின் நோயைக் குணப்படுத்த
அத்திப்பழக் கட்டியைப் புண்மீது வைக்கும்படி எசாயா அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் பசியினால்
கதிர்களைப் பறித்து உண்டதைக் கண்டு பரிசேயர்கள் குற்றம்
சாட்டுகின்றனர். அதற்கு இயேசு, தாவீது ஆலயத்தில் அப்பங்களை
உண்ட நிகழ்வையும், ஆலயத்தில் பணிபுரியும் குருக்கள் ஓய்வுநாளிலும்
பணியாற்றினாலும் குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை என்பதையும்
எடுத்துக்காட்டுகிறார்.
மேலும், "பலியைவிட இரக்கத்தையே நான் விரும்புகிறேன்" என்ற
இறைவார்த்தையை நினைவூட்டுவதன் மூலம், சட்டத்தின் உண்மையான
நோக்கம் மனித நலனும் இரக்கமும் என்பதை விளக்குகிறார். இறுதியாக,
"மானிடமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்று அறிவித்து,
ஓய்வுநாளின் உண்மையான அர்த்தத்தையும் தமது அதிகாரத்தையும்
வெளிப்படுத்தியதை மத்தேயு விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தைக் கூர்ந்து கவனித்தால், இறைவன் மனிதனின்
கண்ணீரையும் நம்பிக்கையையும் அலட்சியம் செய்யாமல், தனது
காலத்திலும் தனது வழியிலும் அருளும் மீட்பும் அளிப்பவர் என்பதை நாம்
அறிய வருகிறோம். எசேக்கியா அரசன் மரண அச்சத்தில் இறைவனை
நோக்கி மனமுருகி மன்றாடியபோது, அவரது கண்ணீரையும்
செபத்தையும் கண்ட இறைவன், "உன் மன்றாட்டைக் கேட்டேன்; உன்
கண்ணீரைக் கண்டேன்" என்று கூறி அவருக்கு மேலும் பதினைந்து
ஆண்டுகள் வாழ்வை அருளுகிறார்.
இறைவன் விரும்புவது வெறும் சட்டக் கடைப்பிடிப்பு அல்ல; இரக்கம்,
அன்பு, மனிதநேயம் ஆகியவையே. .
நற்செய்தியில், சீடர்கள் ஓய்வுநாளில் பசியால் கதிர்களைப் பறித்து
உண்டபோது, பரிசேயர்கள் அவர்களைக் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு
இயேசு, "நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" எனும்
ஓசேயா 6:6ல் கணாப்படும் இறைவாக்கினர் ஓசேயாவின் கூற்றை
நினைவூட்டுகிறார். சட்டம் மனிதனை வாழ வைப்பதற்கே; மனிதனை
அடிமைப்படுத்துவதற்கல்ல. பசி, துன்பம், மனிதத் தேவைகள்
ஆகியவற்றை விட எந்தச் சட்டமும் உயர்ந்ததல்ல என்பதை இயேசு
வலியுறுத்துகிறார்.
மேலும், இன்றைய நற்செய்தியில் ஓய்வுநாளின் உண்மையான
அர்த்தத்தையும், திருச்சட்டத்திற்கு உயிரூட்டும் அதன் ஆழ்ந்த
ஆவியையும் ஆண்டவர் இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார். அந்த ஆவி
கடுமையான சட்டப்பிடிப்பிலும் வெளிப்புறச் சடங்குகளிலும் அல்ல;
மாறாக, இரக்கம், அன்பு மற்றும் இறைவனோடு கொண்டுள்ள உயிருள்ள
உறவிலும் ஒன்றிப்பிலும் வேரூன்றியுள்ளதாக ஆண்டவர் விவரிக்கிறார்.
இன்றைய இரு வாசகங்களும் இறைவன் வெளிப்புற சடங்குகளை
மட்டுமல்ல, மனிதனின் மனநிலையையும் தேவையையும் பார்க்கிறார்
என்பதை நினைவூட்டுகின்றன. இன்று நாமும் நம்மை ஆராய்வோம்.
நமது சமயக் கடமைகளை உண்மையான அன்புடனும் இரக்கத்துடனும்
நிறைவேற்றுகிறோமா? துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுகிறோமா?
நமது தீர்ப்புகளுக்கு முன் இரக்கத்திற்கு இடம் கொடுக்கிறோமா?
"இரக்கமுள்ள இதயம் இறைவன் உறையும் ஆலயம்" என்பார்கள். இது
இறைவனின் இரக்கத்தையும், மனிதன் பிறரிடம் இரக்கமுள்ளவராக வாழ
வேண்டிய அழைப்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நான் சட்டத்தை மட்டும் கடைப்பிடிப்பவராக அல்லாமல்,
இரக்கத்தையும் அன்பையும் செயல்படுத்துகிறவராகவும், பிறரின்
தேவைகளை உணர்ந்து உதவும் இதயத்தையும் எனக்கு அருள்வீராக.
ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
