இறைவனின் இரக்கத்தை நாடும் இதயம் பெறுவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 8 ஆம் வாரம் – வியாழன்
1 பேதுரு 2: 2-5, 9-12
மாற்கு 10: 46-52
இறைவனின் இரக்கத்தை நாடும் இதயம் பெறுவோம்!
முதல் வாசகம்
புனித பேதுரு, கிறிஸ்தவர்களை ஆன்மீக வளர்ச்சிக்காக அழைக்கிறார். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பாலை விரும்புவது போல, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் இறைவார்த்தையை ஏங்கி நாட வேண்டும் என்று கூறுகிறார். கிறிஸ்து “உயிருள்ள கல்” என்றும், அவரை நம்புகிறவர்கள் “உயிருள்ள கற்கள்” போல இறையாலயமாக கட்டப்படுகிறார்கள் என்றும் விவரிக்கிறார்.
அவர்கள் இறைவனுக்கு விருப்பமான ஆன்மீக பலிகளை செலுத்தும் தூய குருத்துவ மக்களாக அழைக்கப்படுகிறார்கள் எனும் படிப்பினையை வலியுறுத்துகிறார்
மேலும், இறைமக்கள் “தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்”, “அரச குருத்துவம்”, “தூய மக்கள்”, “இறைவனுக்குரிய சொந்த மக்கள்” என்று ம் இவர்கள் இருளிலிருந்து ஒளிக்குள் அழைத்த இறைவனின் மகத்துவங்களை அறிவிக்க வேண்டும் என்பது அவர்களின் பணி என்பதையும் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், எரிகோ நகரத்தில் இருந்த திமேயுவின் மகன் பர்த்திமேயு என்ற பார்வையற்றவன் இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வு விவரிக்கப்படுகிறது. இயேசு அங்கே வந்தபோது, பார்திமேயு “தாவீதின் மகனே , இயேசுவே, எனக்கு இரக்கம் செய்யும்” என்று உரக்கக் கூவினான். மக்கள் அவனை அமைதியாக இருக்கச் சொன்னாலும், அவன் இன்னும் அதிகமாகக் கூவினான்.
இயேசு அவனை அழைத்து, “உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பார்திமேயு, “ஆண்டவரே, நான் பார்வை பெற வேண்டும்” என்றான். இயேசு அவனுடைய நம்பிக்கையைப் பாராட்டி, “உன் நம்பிக்கை உன்னை குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வை பெற்று, இயேசுவைப் பின்தொடர்ந்தான்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்கள் நம்மை “உண்மையான நம்பிக்கை ” மற்றும் “இறைவனின் அருளில் நிலைத்திருக்கும் வாழ்க்கை” பற்றி சிந்திக்க அழைக்கின்றன.
முதல் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, நம்மை உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் நம்மை கட்டி எழுப்பப்ப அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாக வாழந்திடவும் நம்மை பணிக்கிறார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் உலகில் பத்தோடு பதினொன்று என்ற எண்ணத்தில் வாழ்வதைவிடுத்து, நாம் ஆண்டராகிய இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி என்பதை நினைவூட்டுகிறார். உலகத்தில் வாழும் போது, தீய ஆசைகளிலிருந்து விலகி, நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும், அப்படிச் செய்வதன் மூலம் பிறர் இறைவனை மாட்சிபடுத்துவார்கள் என்றும் பேதுரு அறிவுறுத்துகிறார்.
நற்செய்தியில் இயேசு பார்வையற்ற பர்த்திமேயுவை குணமாக்குகிறார். பர்த்திமேயு கூட்டத்தினரின் தடுக்குதல்களையும் பொருட்படுத்தாமல், “தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் கொள்ளும்!” என்று முழங்குகிறான். அவனுடைய நம்பிக்கையின் நிமித்தம் இயேசு, அவனுக்கு பார்வையளிக்கிறார்.
இந்த நிகழ்வில் மூன்று முக்கியமான வலியுறுத்தல்களை நாம் கண்டறிய வேண்டும்.
1. நம்பிக்கையுடன் இறைவனை அழைக்க வேண்டும்
பர்த்திமேயுவுக்கு கண்கள் இல்லை; ஆனால் நம்பிக்கை இருந்தது. நமக்கும் வாழ்க்கையில் பல ‘இருள்கள்’ இருக்கலாம் — மன வேதனை, பாவ பழக்கம், உறவுச் சிக்கல், பொருளாதார துன்பம். அவற்றில் நம்மை மீட்பவர் இயேசு என்பதை நம்பி அவரை அழைக்க வேண்டும்.
2. பிறர் தடுத்தாலும் இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும்
கூட்டம் பர்த்திமேயுவை அமைதியாக இருக்கச் சொன்னது. ஆனால் அவன் இன்னும் உரக்கக் கூப்பிட்டான். இன்று உலகமும் நமக்கு “இறைநம்பிக்கை தேவையில்லை” என்று சொல்லலாம். ஆனால் உண்மையான சீடராகத் இத்தகைய தடைகளை மீறி ஆண்டவரைத் தேட வேண்டும். அதன்கான பலன் கிட்டும்.
3. இயேசுவை சந்தித்தவர் புதிய வாழ்க்கை பெறுவார்.
பார்வை பெற்ற பர்த்திமேயு உடனே இயேசுவைப் பின்பற்றினான். அதுவே உண்மையான மனமாற்றம். இறைவனின் அருளைப் பெற்றபின் பழைய வாழ்க்கைக்கு திரும்பாமல், அவருடைய வழியில் நடக்க உறதிகொள்ள வேண்டும்.
ஆகவே, “நான் எந்த இருளில் இருக்கிறேன்? நான் துன்ப துயர வேளைகளில், இயேசுவை உண்மையாய் அழைக்கிறேனா?” என்ற கேள்வி நம்மில் எழ வேண்டும். “இறைவன் மனிதரின் வெளிப்புறத்தை அல்ல, உள்ளத்தின் உண்மையையும் நம்பிக்கையையும் பார்க்கிறார்.”
“தாவீதின் மகனே, இயேசுவே, என்மேல் இரங்கும்!” என்ற கூக்குரலானது நம்பிக்கையின் குரல். இயேசு அவரை அழைத்தபோது, பார்திமேயு தனது மேலங்கியை எறிந்து எழுந்து வந்தார். மேலங்கி என்பது அவருடைய பாதுகாப்பு, சொத்து, அடையாளம். அதை விட்டுவிட்டு இயேசுவிடம் ஓடிச் சென்றார்.
ஆம், இயேசுவை உண்மையாக சந்திக்க வேண்டுமெனில், நம்மை கட்டிப்போடும் சிலவற்றை விட்டுவிட வேண்டும். குறிப்பாக, அகந்தை, பொறாமை, பாவச் செயல்கள், மன்னிக்காத மனம், இறைவனை விட உலகத்தை அதிகம் நம்புதல் போன்றவை நம்மை விட்டு அடியோடு விலக்க்ப்பட வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நானும் பர்த்திமேயுவைப் போல நம்பிக்கையோடு உம்மில் என்றும் வாழும் வரமருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452