இறைவனின் திருவுளத்திற்கே நாம் உரியவர்கள்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 8 ஆம் வாரம் –செவ்வாய்
1 பேதுரு 1: 10-16
மாற்கு 10: 28-31
இறைவனின் திருவுளத்திற்கே நாம் உரியவர்கள்!
முதல் வாசகம்
முதல் வாசகத்தில் திருத்தூதர் புனித பேதுரு, மனிதருக்குக் கிடைத்த மீட்பானது இறைவனின் அருளால் கிடைத்த ஒன்று என்று விவரிக்கிறார். பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள்கூட இறைவனில் இருந்த வரவிருக்கும் இந்த மீட்பைப் பற்றி ஆராய்ந்து அறிய முயன்றனர். கிறிஸ்துவின் துன்பங்களும் பின்னர் அவருக்குக் கிடைக்கும் மாட்சியைக் குறித்தும் அவர்கள் முன்கூட்டியே அறிவித்தனர் என்கிறார் புனித பேதுரு.
அக்காலத்தில் அறிவிக்கப்பட்ட மனுக்குலத்திற்கான மீட்பானது, இயேசு கிறிஸ்துவின் வழியாக கிடைக்கப்பட்டது. அதனால் நம்பிக்கையாளர்கள் விழிப்புடனும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்று பேதுரு அறிவுறுத்துகிறார். பழைய வாழ்வுக்குத் திரும்பாமல் இறைவனின் அருள் துணையில் தூய வாழ்வை நடத்த வேண்டும் என்றும் இவ்வாசகப் பகுதியில் எடுத்துரைக்கிறார்.
“நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்” ’. என்ற இறைவாக்கை மேற்கோள் காட்டி, கிறிஸ்தவர்களின் வாழ்க்கை தூய்மையிலும் கீழ்ப்படிதலிலும் நிலைக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செயெதியில் இப்பகுதியில், பேதுரு இயேசுவிடம், “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றினோம்” என்று கூறுகிறார். அதற்கு இயேசு, தம்மையும் நற்செய்தியையும் காரணமாகக் கொண்டு வீடு, குடும்பம், சொத்து ஆகியவற்றை விட்டவர்களுக்கு இவ்வுலகிலேயே பல மடங்கு ஆசீர்வாதங்களும், வருங்காலத்தில் நிலைவாழ்வும் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறார்.
நிறைவாக இயேசு, இறையாட்சியில் மனிதர்களின் மதிப்பீடு மாறுபடும் என்றும், “முதலில் இருப்போர் கடைசியாகவும், கடைசியில் இருப்போர் முதலாவதாகவும் இருப்பார்கள்” என்று கூறி தாழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களையும் கவனித்தால் அவை நம்மை “தூயவாழ்வு” மற்றும் “இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் மனம்” என்ற இரு முக்கிய உண்மைகளுக்குள் வாழ அழைப்புவிடுப்பதை உணரலாம்.
முதல் வாசகத்தில் தூய பேதுரு, “நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்” என்று இறைவனின் அழைப்பை நினைவூட்டுகிறார். உலக ஆசைகள், பழைய பாவ வாழ்க்கை, சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் வழியில் புதிய வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதே இந்த அழைப்பு. நம்மில் என்றும் தலைமைத்துவப் போராட்டம் இருந்தல் ஆகாது என்பது வெள்ளிடைமலை. திருஅவையில் முதலிடம் தேடுவோர் மதிப்பும் மரியாதையையும் இழப்பர். பிறர் மெச்ச முற்படுவது கடவுள் எதிர்பார்க்கும் தூய வாழ்வுக்கு வழிவகுக்காது.
தூய வாழ்வு என்பது சிலருக்கான சிறப்பு அழைப்பு அல்ல; அது ஒவ்வொரு கிறிஸ்தவருக்குமான அழைப்பும் . திருத்தைந்தை முற்கொண்டு அடிமட்ட நம்பிக்கையாளர் வரை அனைவரும் தூய வாழ்வுக்கு உட்பட்டவர்கள். ஆகவே, நமது வார்த்தைகள், செயல்கள், குடும்ப வாழ்க்கை, தொழில், உறவுகள்—இவை அனைத்திலும் இறைவனின் எதிர்பார்ப்பு பிரதிபலிக்க வேண்டும்.
நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றினோம்” என்று கூறுகிறார். அவரது எண்ணம் சரியே. இயேசு அழைத்தவுடன் வாழ்வாதாரத்திற்கு உடன் இருந்த அனைத்தையும் விட்டு விட்டுப் பின்தொடர்ந்தவரின் இக்கேள்வி உலகப் பார்வையில் சரிதான். இயேசுவின் பார்வையில், அவர் உலகப் பற்றுள்ளவர்களைச் சீடராக அழைக்கவில்லை. இறையரசு பணிக்கு உலகப் பற்று அற்றவர்களேதான் உகந்தவர்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது இறையரசுப் பணிக்கு ஒவ்வாது.
ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறைவனுக்காக செய்யப்படும் எந்தத் தியாகமும் வீணாகாது.
சில நேரங்களில் நமது நேரம், மனநிறைவு, ஆசைகள், பெருமை, சுயநலம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். ஆனால் இறைவன் அதைவிட அதிகமான அருளையும் அமைதியையும் நமக்குத் தருவார். முதலில், பேதுருவின் கேள்வியானது, பதில் நம் அனைவரின் பொதுவான போக்கை வெளிப்படுத்துகிறது: அவர் தன்னைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.
பேதுருவைப் போல நாமும் முதலில் நம்மை நியாயப்படுத்திக் கொள்ளலாம், “ஆண்டவரே, உம்மைப் பின்பற்ற நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்” என்று. ஆனால், தெளிவான வழியில் நம் வாழ்க்கையை மதிப்பீடு செய்ய வேண்டும்.
அடுத்து, “தன்னலம்ற்ற சீடர்களுக்கு இயேசு ‘நிலைவாழ்வை’ வாக்களிக்கிறார். அதுவே நமத் இலக்காக இருக்க வேண்டும். இன்றைய நினைவு நாளில் நாம் போற்றும் புனித பிலிப் நேரி மகிழ்ச்சியுடன் இறைவனி வாழ்ந்தவர். அன்பும் எளிமையும் மகிழ்ச்சியும் மூலம் மக்களை இறைவனிடம் அழைத்தார். உண்மையான தூய அன்பானது அன்பு நிறைந்த இதயத்தில் வெளிப்படுகிறது என்பதை அவரது வாழ்க்கை காட்டுகிறது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, இவ்வுலகில் உமது அழைப்புக்கேற்ற வாழ்வு வாழ என்னை திடப்படுத்துவீராக. ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452